< Back
ஞாயிறுமலர்
பிளாக் காபியின் நன்மைகள் 6
ஞாயிறுமலர்

'பிளாக் காபி'யின் நன்மைகள் '6'

தினத்தந்தி
|
3 Sept 2023 10:15 AM IST

காலையில் எழுந்தும் காபி பருகும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள்.

பால், காபி டிகாஷன், சர்க்கரை உள்ளிட்டவை ஒரு சேர கலந்து வெளிப்படும் காபியின் நறுமணத்தால் வீடே கமகமக்கும். அது காபி பிரியர்களை குஷிப்படுத்தினாலும் சில கட்டுப்பாடுகளை பின்பற்றினால்தான் காபியை தொடர்ந்து பருக முடியும். உடலுக்கு கேடு நேராமல் பார்த்துக்கொள்ள முடியும்.

பால் கலந்த காபியை விட சாதாரண கருப்பு காபி (பிளாக் காபி) பருகுவதுதான் நல்லது என்ற கருத்தை மருத்துவ நிபுணர்கள் முன்வைக்கிறார்கள். அதில் சர்க்கரை, கொழுப்பு, கலோரிகள் சேர்க்கப்படாமல் இருப்பதால் காபியின் நன்மைகளை முழுமையாக பெற முடியும் என்றும் கூறுகிறார்கள். அவை குறித்து பார்ப்போம்.

1. ஊட்டச்சத்து நிறைந்தது:

பிளாக் காபியில் இயற்கையாகவே ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் பி2, பி3, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் நிறைந்துள்ளது. மேலும் இது கலோரி இல்லாத பானமாகவும் விளங்குகிறது. உடல் எடையை சீராக பராமரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை தூண்டவும் உதவக்கூடியது.

2. அல்சைமர் நோயை விரட்டும்:

நினைவாற்றல் இழப்பு, சிந்தனை திறன் செயலிழப்பு போன்ற பிரச்சினைகள் அல்சைமர் நோய் பாதிப்பால் ஏற்படக்கூடும். அன்றாடம் மேற்கொள்ளும் இயல்பான பணிகளை கூட செய்யவிடாமல் தடுமாற வைத்துவிடும்.

பிளாக் காபி பருகுவது அல்சைமர் நோய் அபாயத்தை குறைக்கும் என்பது ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. தினமும் 2 அல்லது 3 கப் கருப்பு காபி பருகுவதன் மூலம் அல்சைமர் நோய் அபாயத்தை 65 சதவீதம் குறைக்கலாம் என்பதும் அந்த ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.

3. எடை குறைப்புக்கு வித்திடும்:

பிளாக் காபியை தொடர்ந்து பருகுவது உடல் எடையை குறைக்கவும் உதவும். ஹார்வர்டு டி.எச். சான் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் மேற்கொண்ட ஆய்வில், உடல் எடையை குறைக்கும் விஷயத்தில் கருப்பு காபியை உட்கொள்வது நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது கருப்பு காபியில் உடல் எடையை குறைக்கவும், குளுக்கோஸ் உற்பத்தியை மெதுவாக்கவும் உதவும் குளோரோஜெனிக் அமிலங்கள் இருக்கின்றன. புதிய கொழுப்பு செல்கள் உருவாகுவதையும் கட்டுப்படுத்துகின்றன. ஆதலால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு கருப்பு காபி சிறந்த தேர்வாக அமையும். எனினும் பால், சர்க்கரை சேர்க்கவில்லை என்றால் காபியில் கலோரிகள் குறைவாகவே இருக்கும். அதனை கருத்தில் கொண்டு காபி பருகுவது நல்லது.

4. உடல் ஆற்றலை அதிகப்படுத்தும்:

ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு பிளாக் காபி பருகுவது சோர்வை விரட்டும். உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். அதனால் உற்சாகத்தோடும், உடல் வலுவோடும் உடற்பயிற்சி செய்யலாம். உடல் இயக்கமும் மேம்படும்.

5. நீரிழிவு நோயை விரட்டும்

ஐரோப்பிய நீரிழிவு நோய் தடுப்பு அசோசியேசனின் அங்கமான டயபடோலாஜியா இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவின்படி, கருப்பு காபி உட்கொள்வது டைப்-2 நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்க உதவும். உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க செய்து நீரிழிவு அபாயத்தை குறைக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.

6. மனநிலையை மேம்படுத்தும்:

எடுத்த காரியத்தை சிறப்பாக செய்யவும், மனநிலையை அதிகரிக்கவும் ஒரு கப் பிளாக் காபி உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனதை விழிப்பு நிலையில் வைத்திருக்கவும் கருப்பு காபி துணைபுரியும். எனவே மனம் தளர்ந்து போகும் சமயத்தில் கருப்பு காபி பருகுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

எப்போது காபி குடிக்க வேண்டும்?

காலை அல்லது பகல் பொழுதில் கருப்பு காபி பருகுவது சிறந்தது. இரவில் தூங்கும் முன் கருப்பு காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

பக்க விளைவுகள்

தினமும் 2 அல்லது 3 கப் பிளாக் காபி பருகலாம். அதற்கு மேல் பருகினால் தூக்க சுழற்சியை சீர்குலைத்து, தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். மேலும் காபியில் காபின் நிறைந்துள்ளதால் அதனை அதிகம் பருகும்போது அசிடிட்டி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளையும் உண்டாக்கும்.

மேலும் செய்திகள்