< Back
ஞாயிறுமலர்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக மாறிய 4 உடன் பிறப்புகள்
ஞாயிறுமலர்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக மாறிய 4 உடன் பிறப்புகள்

தினத்தந்தி
|
11 Jun 2023 9:15 PM IST

யு.பி.எஸ்.சி.யில் தேர்ச்சி பெற தனிப்பட்ட வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது. பாடத்திட்டத்தைப் புரிந்துகொள்வது இன்றியமையாதது.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக தேர்வாகி முத்திரை பதிப்பதுண்டு. தங்கள் குடும்பத்தில் ஒருவர் ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.பி.எஸ். அதிகாரியாக மாறும்போது அதனை பின்பற்றி குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் போட்டி தேர்வுகளில் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி அந்த அந்தஸ்தை அடைந்துவிடுவார்கள்.

தாங்கள் மட்டுமின்றி தங்கள் ஊரில் வசிக்கும் மற்ற இளைஞர்களுக்கும், நாட்டின் பிற பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் முன்னூதாரணமாகவும் திகழ்வார்கள். அப்படிப்பட்ட நான்கு உடன் பிறப்புகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிகிறார்கள். மற்றவர்கள் சாதிப்பதற்கும் தூண்டுகோலாக விளங்குகிறார்கள்.

இவர்கள் உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள பிரதாப்கர் நகரத்தை அடுத்த லால்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர்கள். 2013-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி. தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று ஐ.ஏ.ஸ். அதிகாரியானார், யோகேஷ் மிஸ்ரா. அவரின் அடிச்சுவடுகளை பின்பற்றி சகோதரி மாதவி மிஸ்ராவும் 2015-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பணியில் சேர்ந்தார்.

தனது சகோதரன், சகோதரி இருவர் அரசு பணியில் சேர்ந்ததை பார்த்து மூத்த சகோதரி கேஷாமா மிஸ்ரா யு.பி.எஸ்.சி. தேர்வு எழுத தொடங்கினார். ஆனால் அவரது ஆசை வெகுசீக்கிரம் கைகூடி வரவில்லை. மூன்று முறை தோல்வியை தழுவியவர் சோர்ந்து போகாமல் சகோதரன், சகோதரி கொடுத்த ஊக்கத்தால் படிப்பை தொடர்ந்து 2016-ம் ஆண்டு 4-வது முயற்சியில் ஐ.பி.எஸ். அதிகாரியானார். அதைத்தொடர்ந்து இளைய சகோதரரான லோகேஷ் மிஸ்ராவும் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகும் கனவை நிறைவேற்றி விட்டார்.

2011-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வு முறையில் ஏற்பட்ட மாற்றம் தான் தனக்கு திருப்புமுனையாக அமைந்தது என்கிறார், யோகேஷ் மிஸ்ரா.

''தேர்வு முறையில் மாற்றம் செய்வது புதிதாக தேர்வு எழுதுபவர்களுக்கு எப்போதுமே நல்ல விஷயம்தான். ஏனெனில் இது அனைவருக்கும் சமமான போட்டி களத்தை உருவாக்குகிறது. நான் தேர்வு எழுத முடிவு செய்தபோது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் சி.எஸ்.ஏ.டி தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சி.எஸ்.ஏ.டி என்பது திறன், பகுத்தறிவு மற்றும் பகுப்பாய்வு கேள்விகளை உள்ளடக்கியது. எனது சகோதரிகள் தேர்வில் தேர்ச்சி பெறாததற்கு இது தடையாக இருப்பதாக நான் உணர்ந்தேன். அவர்களுக்கு எனது அனுபவ குறிப்புகளை பகிர்ந்தேன். அவர்களும் அரசு அதிகாரிகளாக மாறி இருப்பது பெருமையாக இருக்கிறது'' என்கிறார்.

கேஷாமா மிஸ்ரா படிப்பில் படு சுட்டி. உயர்நிலைப் பள்ளி தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் மற்றும் மாநில அளவில் ஆறாவது இடத்தைப் பிடித்தார். லால்கஞ்சில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி இருக்கிறார். மாதவி மிஸ்ராவும் அதே கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு முதுகலைப் பட்டம் பெற்றார்.

தற்போது கேஷாமா கர்நாடக மாநில காவல்துறையில் பணிபுரிகிறார். யோகேஷ் மிஸ்ரா மத்திய ஆயுத தொழிற்சாலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். மாதவி மிஸ்ரா, லோகேஷ் மிஸ்ரா ஜார்கண்ட் மாநிலத்தில் பணிபுரிகிறார்கள்.

"எங்கள் குழந்தைகள் எப்போதும் கடின உழைப்பாளிகள் மற்றும் நேர்மையானவர்கள். தேர்வு எழுதி முடித்ததும் தேர்ச்சி பெறுவோமா? தோல்வி அடைந்துவிடுவோமா? என்பதை சொல்லிவிடுவார்கள். ஆனாலும் விடாமுயற்சியை ஒருபோதும் கைவிட்டதில்லை. அதற்கு பலனாகத்தான் இத்தகைய வெகுமதியை பெற்றுள்ளனர்'' என்கிறார் 4 பேரின் தாய் கிருஷ்ணா மிஸ்ரா.

''இன்றைய உலகில், எல்லாமே பரவலாகக் கிடைக்கின்றன. கல்வி அறிவை பல வழிகளில் மேம்படுத்திக்கொள்ள முடிகிறது. இருப்பினும், யு.பி.எஸ்.சி.யில் தேர்ச்சி பெற தனிப்பட்ட வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது. பாடத்திட்டத்தைப் புரிந்துகொள்வது இன்றியமையாதது. சில மாணவர்களுக்குத்தான் எங்களால் நேரடியாக பாடம் நடத்த முடிகிறது. அதனால் போட்டி தேர்வு எழுதும் பலருக்கும் உதவுவதற்காக நாங்கள் யூடியூப் சேனலைத் தொடங்கியுள்ளோம்'' என்கிறார் யோகேஷ்.

மேலும் செய்திகள்