மழைக்கால சுற்றுலாவில் மனதில் கொள்ள வேண்டிய 10
|கோடை வெப்பத்தின் உஷ்ணத்தால் வறண்டு கிடக்கும் பூமியை குளிர்விக்க பருவ மழை காலம் தொடங்கிவிட்டது. உடலுக்கும், உள்ளத்துக்கும் புத்துணர்ச்சியையும், கண்களுக்கு குளிர்ச்சியான பசுமை சூழலையும் காட்சிப்படுத்தும் இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு பலரும் விரும்புவார்கள்.
மழைக்காலம் இன்ப சுற்றுலாவிற்கு இனிமை சேர்ப்பதாக அமைய வேண்டும். அசவுகரியமான பயண அனுபவத்தை கொடுத்துவிடக்கூடாது. மழைக்கால சுற்றுப்பயணம் செய்யும்போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் தேவையற்ற சிரமங்களை தவிர்க்க முடியும். அதற்கான டிப்ஸ்கள் உங்கள் கவனத்திற்கு....
1. வானிலையை கவனிக்கவும்:
நீங்கள் செல்லும் இடத்தின் வானிலையை கருத்தில் கொண்டு சுற்றுப்பயணத்தை திட்டமிடுவது முக்கியமானது. குறிப்பாக அந்த சமயத்தில் புயலோ, கன மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் ஏதும் இருக்கிறதா? என்பதை சரிபார்த்துக்கொள்வது அவசியமானது. தொடர் மழை பெய்தால் கூட அது சுற்றுப்பயணத்திற்கு இடையூறாக மாறிவிடும். அதனால் நீங்கள் செல்லும் நாட்களுக்கு முன்பும், பின்பும் வானிலையில் எத்தகைய மாற்றங்கள் நிகழக்கூடும் என்பதை சரிபார்த்துக்கொள்வது நல்லது.
2. ஆடைகள் தேர்வு:
மழைக்காலம் என்பதால் ஈரப்பதமான வானிலையே அதிக நேரம் நீடிக்கும். அதனால் விரைவாக உலரும் தன்மை கொண்ட ஆடைகளை அணிந்து செல்வது நல்லது. திடீர் மழை பெய்தால் அதனை அணுகுவதற்கு ஏதுவான 'ரெயின் கோட்'டையும் மறக்காமல் எடுத்துச்செல்லுங்கள். நீர்ப்புகா தன்மை கொண்ட காலணிகளை அணிவதும் சிறந்தது.
3. உடமையை பாதுகாத்தல்:
செல்போன், ஹெட்செட், பவர் பேங்க் உள்ளிட்ட எலெக்ட்ரிக் சாதனங்கள், பயண டிக்கெட் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்கள் ஈரப்பதமாகாமல் இருப்பதற்கு ஏதுவாக நீர்புகாதன்மை கொண்ட கவர்களையும் மறக்காமல் எடுத்துச்செல்லுங்கள். சிறிய பொருட்களை உலர வைப்பதற்கு ஏதுவாக மினி பேனையும் உடன் வைத்திருக்கலாம்.
4. தண்ணீர் பருகுதல்:
மழை பெய்தாலும், உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கு போதுமான அளவு தண்ணீர் பருக மறக்காதீர்கள். பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக ஸ்டீல் பாட்டில்களை பயன்படுத்துங்கள். பிளாஸ்க் வைத்திருப்பதும் சூடாக டீ, காபி, வெந்நீர் பருகுவதற்கு உதவும்.
5. கொசு விரட்டியை பயன்படுத்துங்கள்:
மழைக்காலத்தில் கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகளின் ஆதிக்கம் மிகுந்திருக்கும். கொசுக்கடியில் இருந்து தற்காத்துக் கொள்ள கொசுவிரட்டிகளை கைவசம் வைத்திருங்கள். தேவைப்பட்டால் கொசு வலைகளையும் உடன் எடுத்துச்செல்லுங்கள்.
6. நீர் மூலம் பரவும் நோய்கள்:
மழைக்காலத்தில் டெங்கு, மலேரியா, காலரா போன்ற நீர்வழி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. சுத்திகரிக்கப்படாத தண்ணீரை பருகாதீர்கள். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராகவே இருந்தாலும் அதனை சூடுபடுத்தி பருகுங்கள். அதன் மூலம் மழைக்கால நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். சுகாதாரமற்ற சூழலில் விற்கப்படும் சாலையோர உணவுகளை உட்கொள்வதை தவிருங்கள்.
7. போக்குவரத்தை திட்டமிடுங்கள்:
அதிக மழை அல்லது வெள்ளம் காரணமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும். அதனால் குறிப்பிட்ட நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படக்கூடும். அதனை கருத்தில் கொண்டு முன்கூட்டியே புறப்படும் வகையில் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் மாற்று போக்குவரத்து வழிகளையும் பயன்படுத்துவதற்கு தயாராக இருங்கள். தங்குமிடம், டிக்கெட் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே பதிவு செய்வது நல்லது.
8. நடையில் கவனம் தேவை:
மழைக்காலத்தில் சில இடங்களில் தரைகள் வழுக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். அதனால் படிக்கட்டுகள், குறுகலான பாதைகளில் நடக்கும்போது கவனமாக செயல்படுங்கள். கைப்பிடிகளும் வழுக்கக்கூடும். அதேபோல் வழுக்கும் தன்மை அல்லாத பொருத்தமான பாதணிகளை அணியவும்.
9. கவனத்தில் கொள்ளுங்கள்
நீங்கள் பயணம் செய்யும் இடத்தில் இருக்கும் சாலைகளின் தன்மை நிலைமை, நிலச்சரிவு உள்ளிட்ட விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள். உள்ளூர் செய்திகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளையும் கருத்தில் கொள்ளுங்கள். உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருங்கள்.
10. காப்பீடு திட்டங்கள்:
வானிலை கடுமையாகிவிட்டாலோ அல்லது நிலைமை மோசமாகிவிட்டாலோ நண்பர்கள், குடும்பத்தினருடன் தொடர்பில் இருங்கள். மருத்துவ காப்பீடு சான்றிதழ்களையும் உடன் எடுத்து செல்லுங்கள்.