மன அமைதியோடு வாழ பழகுவோம்
|மனம், உடல் தொடர்பு இருபக்கங்கள் கொண்ட ஒரு நாணயத்தை போன்றது. நாம் பிரச்சினையிலிருந்து ஓடி ஒளியாமல் அவற்றை எதிர்கொண்டு சந்திக்கும்போது, எதிர்மறை எண்ணங்கள் வலிமை இழக்கின்றன.
மனிதனின் மனம் என்பது ஒரு அதிசய சக்தி. அது சகல நினைவுகளையும் தோற்றுவிக்கிறது. நினைவுகளை எல்லாம் நீக்கிப்பார்க்கும்போது தனியாக மனமென்று ஒரு பொருளில்லை. சிலந்திப் பூச்சி எப்படி தன்னிடமிருந்து வெளியில் நூலை நூற்று மறுபடியும் தன்னுள் இழுத்து கொள்கிறதோ, அப்படியே மனமும் தன்னிடத்திலிருந்து ஜகத்தை தோற்றுவித்து மறுபடியும் தன்னிடமே ஒடுங்கிக்கொள்கிறது. மனம் அளவற்ற நினைவுகளாய் விரிகின்றபடியால் ஒவ்வொரு நினைவும் அதிபலவீனமாக போகிறது.
எதிர்மறை எண்ணங்கள்
நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் விரும்புகிறோம். ஏனெனில், இவற்றுக்குத்தான் நம் வாழ்வில் குறைபாடு உள்ளது. நாம் அனைவரும் அவ்வப்போது மனக்கலக்கம், எரிச்சல், இணக்கமின்மை, துயரம் ஆகியவற்றை அனுபவிக்கிறோம். அவ்வாறு நினைவின்றி தவிக்கும்போது, நாம் படும் துயரத்தை நம்மிடம் மட்டும் வைத்துக் கொள்ளாது அவற்றை பரப்பவும் செய்கிறோம். ஒருவர் தனக்குள்ளே மன அமைதியுடன் வாழ வேண்டும். மற்றவரோடும் இணங்கி வாழ வேண்டும். என்ன இருந்தாலும் மனிதன் ஒரு சமூக வாழ்வினன். அவன் சமுதாயத்தில் வாழ வேண்டி உள்ளது. பலருடன் பலவிதமாக தொடர்பு கொள்ள வேண்டி உள்ளது.
ஒருவர் விரும்பத்தகாதது ஏதும் நடந்து அவர் மனதில் சினம், பயம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் ஏதும் தோன்ற ஆரம்பித்தால், உடனே அவர் தம் கவனத்தை வேறு ஏதாவது ஒன்றின் மீது செலுத்த வேண்டும். உதாரணமாக, எழுந்து சென்று கொஞ்சம் நீர் அருந்தலாம் அல்லது ஒரு சொல்லையோ, சொற்றொடரையோ, தங்களுக்கு பிடித்த ஒருவரின் பெயரையோ திரும்ப திரும்ப கூறலாம். இதன் மூலம் மனம் திசை திரும்பி எதிர்மறை எண்ணங்களிலிருந்து கொஞ்சம் வெளிவரும். ஓரளவு கோபம் தணியும்.
எண்ணங்களும், உணர்வுகளும்
கோபம் எழும்போது, நாம் அதை அறியும்முன்னரே அது நம்மை ஆட்கொள்கிறது. சினத்தின் வசப்பட்டு நாம் நமக்குள்ளும், பிறருக்கும் தீங்கு விளைவிக்கும் செயல்களை சொல்லாலோ, உடலாலோ இழைத்து விடுகிறோம். பின்னர் சினம் தணிந்த பின், அதற்காக அழுது வேதனைப்பட்டு, பிறரிடமோ, கடவுளிடமோ மன்னிப்பு கேட்கிறோம். இவ்வாறு தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டாலும், அடுத்த முறை அதே போன்றதொரு நிலை வரும்போது மீண்டும் அதைப்போன்றே சினத்துடன் செயல்படுகிறோம். சாதாரண மனிதர்களால் மனதின் மாசுகளை பயம், சினம், பேராசை போன்ற உணர்வுகளை உள்ளதை உள்ளவாறே வெறுமனே கவனித்தல் இயலாது.
மனம், உடல் தொடர்பு இருபக்கங்கள் கொண்ட ஒரு நாணயத்தை போன்றது. மனதில் எழும் எண்ணங்களும், உணர்வுகளும் ஒரு புறம். மூச்சுக்காற்றும், உடலில் புலனாகும் உணர்ச்சிகளும் மறுபுறம். மனதில் தோன்றும் எந்த ஒரு எண்ணமும், எதிர்மறை உணர்வும் அதே நொடியில் மூச்சுக்காற்றிலும் உடலின் மீது உணர்ச்சிகளாகவும் வெளிப்படுகிறது. எனவே மூச்சையும் உடல் உணர்ச்சிகளையும் கவனிப்பது மனதின் எதிர்மறை எண்ணங்களைக் கவனிப்பதே ஆகும்.
மகிழ்ச்சி
இவ்வாறு நாம் பிரச்சினையிலிருந்து ஓடி ஒளியாமல் அவற்றை எதிர்கொண்டு சந்திக்கும்போது, எதிர்மறை எண்ணங்கள் வலிமை இழக்கின்றன. முன்போல் அவற்றால் நம்மை ஆட்கொண்டு வீழ்த்த இயலாது. தொடர்ந்து முயற்சி செய்து வந்தால் எதிர்மறை எண்ணங்கள் முற்றிலுமாய் மறைந்து போய், நம்முள்ளே அமைதியும், மகிழ்ச்சியும் நிலவுகிறது.