உலக யோகா தினம்
|உடலை பக்குவப்படுத்துவதற்கு உடற்பயிற்சி அவசியம். அதுபோல் மனதை பக்குவப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் யோகா முக்கியம்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம். அதை முறையாக நாள்தோறும் கடைபிடித்தால் உடலும், மனமும் ஒரு சேர அழகுபடும். செய்யும் தொழிலோ, படிப்போ, சிந்தனையோ சிறந்த பாதையில் செல்ல யோகா வழி வகை செய்கிறது.
70 வயதை தாண்டியவர்கள் கூட யோகாவை முறையாக நாள்தோறும் செய்து முதுகுவலி, மூட்டு வலி, ரத்த உயர் அழுத்தம், இருதய பிரச்சினைகளில் இருந்து தங்களை தற்காத்து கொள்கிறார்கள். யோகாவில் பல வகைகள் உள்ளன. ஆனால் அனைத்தும் நன்மை பயப்பதே. பண்டைய இந்திய கலைகளில் ஒன்றான யோகாவை பற்றி பலரும் அறியும் வகையிலும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தொடர்ந்து பயிற்சி செய்ய அவர்களை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக அழைக்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச யோகா தினம் உலகளவில் அனுசரிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்மொழிந்தபோது, யோகாவுக்கு திருப்புமுனை ஏற்பட்டது. இந்த முன்மொழிவைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் என்று ஐநா அறிவித்தது. இந்த தீர்மானத்தை 177 உறுப்பு நாடுகளும் ஆதரித்தன.
யோகாவின் நன்மைகள் மற்றும் யோகாவின் முக்கியத்துவத்தை மக்களிடையே பரப்புவதற்காக யோகா தினம் கொண்டாடப்படுகிறது. யோகா தினம் மக்களை நாள்தோறும் யோகா பயிற்சி செய்ய ஊக்குவிக்கிறது. யோகா வல்லுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த நாளில் வெகுஜன விழிப்புணர்வை உருவாக்க உதவுகிறார்கள். இந்த நாளில், மக்கள் ஒரே இடத்தில் கூடி யோகா பயிற்சி செய்து மகிழ்கின்றனர். யோகாவின் நன்மைகளை மக்களுக்கு உணர்த்துவதே இந்த நாளின் நோக்கம். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பிரபலமான நபர்கள் மற்றும் சமூக ஊடகங்கள் இந்த நாளை வெற்றிகரமாக மாற்ற உதவுகின்றன.
யோகா என்ற அற்புத கலையை பற்றி நமது பண்டைய நூல்கள் விரிவாக விவரிக்கின்றன. நாட்டை ஆளும் மன்னர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டால் அரண்மனை வைத்தியர் ராஜவைத்தியம் செய்வார். அதில் இலை, தழைகள் கொண்ட வைத்திய மருந்துகளோடு யோகாவையும் செய்யுமாறு அறிவுறித்தியுள்ளார்கள்.
தற்போது யோகாவை பற்றிய விழிப்புணர்வும், அதன் பயனும் பெரும்பாலான மக்களுக்கு தெரியவந்துவிட்டது. அதன் பலனே மழலையர் பள்ளிகளில் யோகா கற்றுத்தரப்படும் என்று விளம்பர படுத்துகிறார்கள். நாள்தோறும் வீட்டின் அறைகளிலும், காற்றோட்டமான மொட்டை மாடிகளிலும் யோகா செய்யலாம்.
உடலுக்கு உடற்பயிற்சி வலுவூட்டுவதுபோல் மனதுக்கு புத்துணர்ச்சி ஊட்டுவது யோகா. மாணவ, மாணவிகளின் ஞாபக சக்திக்கு பெரும் ஆற்றல் புரிகிறது யோகா. அதனால் யோகா என்ற அற்புத பயிற்சியை நாமும் தினமும் கடை பிடித்து அதன் பயனை மற்றவர்களுக்கும் விளக்குவோம்.