< Back
மாணவர் ஸ்பெஷல்
உலக மலேரியா தினம்
மாணவர் ஸ்பெஷல்

உலக மலேரியா தினம்

தினத்தந்தி
|
29 April 2023 11:42 AM IST

மலேரியா காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனை கட்டுப்படுத்தவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 25-ந் தேதி, 'உலக மலேரியா தினம்' அனுசரிக்கப்படுகிறது. மலேரியா இல்லாத உலகத்தை நோக்கிச் செயல்பட, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்களை ஒன்றிணைக்க இந்த நாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. 2008-ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வரும் இந்த தினமானது, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளுடன் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் 'பூஜ்ஜிய மலேரியாவை வழங்குவதற்கான நேரம்: புதுமையை செயல்படுத்துதல்' என்பதாகும்.

பிளாஸ்மோடியம் என்னும் ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட, அனோபிலிஸ் என்ற பெண் கொசுக்கள் மனிதனை கடிப்பதனால் இந்த கொடிய நோய் பரவுகிறது. அனோபிலிஸ் கொசு மனிதனை கடிக்கும்போது இந்த ஒட்டண்ணி மனிதனுடைய ரத்த ஓட்டத்தில் கலந்து மலேரியா நோயை பரப்புகிறது. கொசு கடித்த சில வாரங்களில் காய்ச்சல், அதிகம் வியர்த்தல், சோர்வு, தசைவலி, குளிர், வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும். குப்பை கூளங்கள், தேங்கி கிடக்கும் நீர், கழிவுநீர், சாக்கடை போன்ற இடங்களில் உற்பத்தியாகும் கொசுக்களே மலேரியா காய்ச்சலை உருவாக்குகின்றன. வீடுகளில் தேவையற்ற பொருட்களை தேக்கி வைப்பதாலும், சுற்றுப்புறத்தில் நீர் தேங்கி நிற்பதாலும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மலேரியாவினால் 2020-ம் ஆண்டு 85 நாடுகளில் சுமார் 24 கோடி புதிய தொற்றுகளும், 6 லட்சத்து 27 ஆயிரம் இறப்புகளும் பதிவாகியுள்ளன.

வெப்ப மண்டலங்களில் காணப்படும் இந்த நோய் அமெரிக்க, ஆசிய, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் காணப்படுகிறது. பல பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணிகள் இருந்தாலும் பிளாஸ்மோடியம் நோலெசி, பிளாஸ்மோடியம் விவாக்ஸ், பி. ஓவல் மற்றும் பிளாஸ்மோடியம் மலேரியா ஆகியவை மட்டுமே மலேரியாவை ஏற்படுத்துகின்றன. மலேரியாவை தடுப்பதற்கும், குறைப்பதற்கும் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் கொசுமருந்து அடிப்பது, இரவில் வெளியில் செல்லும் போது நீண்ட கை மற்றும் நீண்ட பேன்ட் கொண்ட ஆடையை அணிவது, இரவில் படுக்கைக்கு மேல் கொசு வலைகளைப் பயன்படுத்துவது, படுக்கைக்குச் செல்வதற்கு முன், படுக்கை யறையில் பைரெத்ரின் அல்லது அது தொடர்புடைய பூச்சிக்கொல்லியை தெளிப்பது, வீட்டின் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது, தண்ணீர் தொட்டிகளை எப்போதும் மூடி வைப்பது போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.

மலேரியாவை குறித்த அறிகுறிகள் மற்றும் விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம் இறப்பு விகிதத்தை குறைக்கலாம். 2021-ம் ஆண்டில், உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின் படி சீனா நாடு, மலேரியா இல்லாத சான்றிதழைப் பெற்றுள்ளது மற்றும் மலேசியா தொடர்ந்து நான்காவது ஆண்டாக மலேரியாவில் பூஜ்ஜிய சதவீதமாக உள்ளது. உலகில் உள்ள ஐந்து நாடுகளில் 2021-ம் ஆண்டு 10 ஆயிரத்துக்கும் குறைவான மலேரியா பாதிப்புகளே பதிவாகியுள்ளன. தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக, மலேரியாவை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் அனைவரும் கைகோர்த்து ஒன்றிணைவோம். அதனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி மலேரியாவை ஒழிக்க அனைவரும் இந்த நாளில் உறுதியேற்போம்.

ஆர்.பவித்ரா, 12-ம் வகுப்பு, அரசினர் மேல்நிலைப்பள்ளி, மாதவரம் நெடுஞ்சாலை, பெரம்பூர், சென்னை-11.

மேலும் செய்திகள்