சாலை விதி : இடதுபுறம்... வலதுபுறம் ஏன்?
|சில விதிகளைப் பின்பற்றுவதில் ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப்பட்ட மற்றும் வரலாற்று ரீதியான காரணங்கள் இருக்கும். அந்த வகையில் சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள், பல நாடுகளில் வலது பக்கமாகவும், சில நாடுகளில் இடது பக்கமாகவும் செல்கின்றன.
பழங்காலத்தில் பல நாடுகளிலும் குதிரைகளில் பயணிக்கும் பழக்கம் இருந்தது. இங்கிலாந்தில் அப்போது முதலே இடதுபுறமாக பயணித்துள்ளனர். இது ஒரு வசதிக்காகவும் அவர்களால் ஏற்படுத்தப்பட்டதுதான். குதிரைகள் அந்த காலத்தில் போர்களில் பயன்படுத்தப்பட்டன. மக்களில் பெரும்பான்மையானவர்கள் வலது கை பழக்கம் உள்ளவர்கள். ஆகையால் குதிரைகளில் இடதுபுறமாக பயணித்தால், இடது கையால் குதிரையின் லகானையும், வலது கையால் போர்புரிவதற்கான வாள், ஈட்டி போன்றவற்றையும் பிடித்து போர் புரிய முடியும்.
இங்கிலாந்து அரசாங்கத்தால் பின்பற்றப்பட்ட இந்த பழக்கம், அதன் ஆதிக்கத்தில் இருந்த பல நாடுகளுக்கும் பரவி, அந்த நாடுகளிலும் இடதுபுறமாக பயணிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் எதிர்ப்பாளர்களான பிரெஞ்சுக்காரர்கள், இதற்கு நேர் எதிராக வலது பக்கம் பயணிக்கும் கொள்கையை கடைப்பிடித்தவர்கள். இவர்களின் ஆதிக்கத்தில் இருந்த நாடுகள் முழுவதும் சாலைகளில் வலதுபுறம் பயணிக்கும் விதியை பின்பற்றினர். தற்போது இந்த உலகத்தில் 160 நாடுகள், வலதுபுறமாக சாலைகளில் பயணிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றன. இந்தியா உள்பட 70 நாடுகள், இடதுபுறமாக சாலைகளில் பயணிக்கும் பழக்கத்தை வைத்திருக்கின்றன.
1919-ம் ஆண்டு முதல் 1986-ம் ஆண்டு வரை, 34 நாடுகள் இடதுபுற சாலை பழக்கத்தில் இருந்து, வலது புற சாலை பழக்கத்திற்கு மாறியிருக்கின்றன. மாறாக, கடந்த 2009-ம் ஆண்டு சமோவா என்ற ஒரு நாடு மட்டும், வலது புற பக்கத்தில் இருந்து இடதுபுற சாலை பழக்கத்திற்கு மாறியுள்ளது. அந்த நாடு, இந்த மாற்றத்தைச் செய்ய ஒரு காரணம் இருக்கிறது. சமோவா நாட்டின் அருகில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் இருக்கின்றன அந்த நாடுகள் அனைத்தும் இடதுபுற சாலையில் பயணிக்கும் விதிகளை பின்பற்றுபவை. அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரி குறைவு என்பதால், சமோவா நாடு இந்த மாற்றத்தை தன்னுடைய நாட்டில் ஏற்படுத்தியிருக்கிறது.