வல்லாரை
|தரையோடு படர்ந்து வளரும் ஒரு வகை செடிதான் வல்லாரை. இலைகள் தவளையின் கால் போன்று இருக்கும். நீர்நிலை களுக்கு அருகில் இந்தச் செடியை அதிகம் பார்க்கலாம்.
கிளைகளைக் கொண்டு இதை இனப்பெருக்கம் செய்யலாம். ஒரு வாரத்தில் புதிய கிளைகள் துளிர்த்துவிடும். ஆசிய நாடுகளின் நீர்நிலைப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. பாரம்பரிய மருத்துவங்களில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகையும் கூட.
வல்லாரையில் உள்ள ஏசியாடிகோசைட் எனும் பொருளானது, தோல், கூந்தல், நகங்களைப் புனரமைக்கும். இதன் இலைகளைக் கீரையாகச் சமைத்து உண்டால் ஞாபகச் சக்தி அதிகரிக்கும். வாய்ப்புண், பேதி, சீதபேதி, வீக்கம், காய்ச்சல், படை போன்ற பல்வேறு உடல் கோளாறுகளைக் குணப்படுத்த உதவும்.
வல்லாரை இலை, துளசி இலை, மிளகு, சீரகம் ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து, மை போல அரைத்து, மிளகு அளவு மாத்திரைகளாகச் செய்து, நிழலில் உலர்த்திப் பத்திரப்படுத்த வேண்டும். இது காய்ச்சல், சளி, இருமல், சிறுநீர் கட்டுதல், உடல் சூடு, தோலில் ஏற்படும் அரிப்பு போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன் படுகிறது.
வல்லாரை இலையுடன் சம அளவு வெந்தயத்தை சேர்த்துச் சிறிதளவு தண்ணீரில் இரவு ஊற வைக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் 10 கிராம் அளவு சாப்பிட்டால் உடல் சூடு, கண் எரிச்சல், தலைவலி, உடல் அசதி, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி, பின் முதுகுவலி, இடுப்பு வலி போன்றவை குறையும் என சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.