மாணவர்களின் கைகளில் எதிர்காலம்
|எதிர்காலம் என்பது மாணவர்களின் கைகளில் உள்ளது. எனவே அவர்கள் முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.
காலம் முன்னோக்கி நாலு கால் பாய்ச்சலில் ஓடி கொண்டு இருக்கிறது. நாமும் முன்னோக்கி போகிறோம் என்று கருதிக்கொண்டு நம்முடைய பாரம்பரிய அடிப்படைகளை விட்டு விலகி செல்கிறோம். எதிலும் ஒருவித வெறுப்பு, குரோதம், சுயநலம் போன்ற மனநிலையிலேயே செயல்பட்டு வருகிறோம். இதுவே தவறுகள் மற்றும் குற்றங்கள் நிகழ்வதற்கு வாய்ப்பாகி விடுகிறது. அதோடு சட்டம்-ஒழுங்கு சார்ந்த பிரச்சினைகளையும் அதிகம் ஏற்படுத்தி வருகிறது. இதில் இருந்து விடுபட பரந்த நேசமிக்க மனப்பான்மை உருவாக வேண்டும். இதன் மூலம் தான் மற்றவருக்கு எதிரான பழி உணர்ச்சியில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.
இதற்கு ஏற்ற சமூக சூழலை உருவாக்க வேண்டியது அவசியம். அந்தவகையில், மக்களுக்கு தேவையான கல்வி, மருத்துவம், சுகாதாரம், வேலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். இதற்கான செயல்திட்டம் ஏதுமின்றி நிலைமைகளை தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறோம். இது சமூக அமைதிக்கு எந்த வகையிலும் ஏற்றதாக இருக்காது.
வாழ்வாதாரம் உயர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவை முதல்நிலைக்கு கொண்டுவர, இயற்கை வளங்கள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட வேண்டும். அதுதொடர்பான தொழில் நிறுவனங்களையும் அரசே ஏற்படுத்தி நடத்த வேண்டும். இதுபோன்ற கொள்கைரீதியான மாற்றங்களை முன்வைத்து, அதற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும். இந்தியாவில் உள்ள மனித ஆற்றல் முழு அளவில் பயன்படுத்தப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
அவர்களின் ஆற்றல், திறமை, உழைப்பு சிதறிக் கிடக்கிறது. அதை இந்தியாவின் வளர்ச்சிக்கு உரியதாக மாற்ற செயல்திட்டங்களை உருவாக்க வேண்டும். எதிர்காலம் என்பது மாணவர்களின் கைகளில் உள்ளது. எனவே அவர்கள் முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட வேண்டும். யார் பேசுவதையும் கேட்டு நம்பி இருந்து விடக்கூடாது. போதிய சிந்தனையுடன் எதையும் அணுகவேண்டும். அந்த அணுகுமுறை நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் உதவுவதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத நிலையில், எந்த அளவு முயற்சி செய்தாலும் தடைகளே முன்வந்து நிற்கும். எனவே மாணவர்களின் எதிர்காலம் நாட்டின் வளர்ச்சியுடன் இணைந்தது. அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உகந்த அம்சங்கள் தங்களுக்கான நல்வாழ்வை உறுதி செய்யும் என்று புரிந்து செயல்படவேண்டும்.