தொலைக்காட்சி
|உலகில் எந்த மூலையிலும் ஒரு சம்பவம் நிகழும் போது அதனை அப்படியே நேரடியாக உடனடியாக நம் கண்களுக்கு கொண்டு வரும் உன்னத சாதனம் தான் தொலைக்காட்சி.
தத்ரூபமாகவும், மிகைப்படுத்தாமலும் காட்டக்கூடிய மகிமையும் சிறப்பும் தொலைக்காட்சிக்கு மட்டுமே உண்டு. 1922-ம் ஆண்டில் வானொலி உலகுக்கு கிடைத்தபோது ஒரு பெட்டியில் குரலை கேட்க முடியுமா? என்று அதிசயித்த உலகம் அடுத்த 4 ஆண்டுகளில் ஒரு பெட்டியில் குரலை கேட்பதோடு உருவங்களையும் பார்க்க முடியும் என்பதை கற்பனை செய்து கூட பார்த்திருக்காது. ஆனால் கற்பனை செய்பவர்கள் தானே கண்டுபிடிப்புகளையும் செய்கிறார்கள். ஒரு பெட்டிக்குள் ஒலியையும், ஒளியையும் காட்ட வேண்டும் என்று கற்பனை செய்து கனவு கண்டு தொலைக்காட்சி என்ற உன்னத சாதனத்தை உலகுக்கு தந்தவர் தான் ஜான் லோகி பேர்ட். இவர் 1888-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு அருகே ஹெலன்ஸ்பர்க் என்ற இடத்தில் பிறந்தார்.
புகைப்படம்
இவர் சிறுவயது முதலே ஆரோக்கியம் குன்றியிருந்தார். அதனாலோ என்னவோ அவருக்கு விளையாட்டு, பொழுதுபோக்கு போன்றவற்றில் அதிக நாட்டம் இல்லை. வீட்டுக்கு அருகில் இருந்த தொடக்கப்பள்ளியில் ஆரம்பக்கல்வியை கற்றார். இவருக்கு சிறுவயது முதல் புகைப்படங்களின் மீது அதிக ஆர்வம் இருந்தது. அந்தக்கால கட்டத்தில் இங்கிலாந்து பள்ளிகளில் பல இணைப்பாடங்கள் கற்பிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று புகைப்படக்கலை. இதில் அவர் அதிக ஆர்வம் காட்டி புகைப்படக்கலை சங்கத்தின் மாணவர் தலைவராகவும் செயல்பட்டார். அறிவுக் கூர்மையும் கைகொடுக்க தனது 12-வது வயதிலேயே சில நண்பர்களுடன் சேர்ந்து படங்கள் காட்சிகள் பற்றியும், நகரும் காட்சிகள் பற்றியும் சோதனைகளை செய்தார்.
சொந்த தொழில்
17-வது வயதில் லண்டன் ராயல் தொழில்நுட்ப கழகத்தில் மின்பொருளியல் துறையில் சேர்ந்து முதல் நிலையில் தேறினார். பின்னர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பல்கலைக் கழகத்தில் படித்து கொண்டிருந்த போதே செலினியம் செல்களை கொண்டு ஒளியை மின் சமிக்ஞைகளாக மாற்ற முடியும் என்று இவர் நம்பினார்.
பல்கலைக் கழகத்தில் அதற்கான ஆய்வுகள் செய்ய முடியாததால் வீட்டிலேயே ஆய்வுகளை மேற்கொண்டார். மின்சாரம் மூலம் ஒளியையும் பேசும் படத்தையும்கூட அனுப்ப முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் எப்போதுமே இருந்தது. பட்டம் பெற்ற பிறகு ஒரு நிறுவனத்தில் உதவி பொறியாளராக வேலைக்கு சேர்ந்தார்.
26-வது வயதில் மின்னணு தொழிற்சாலை ஒன்றில் பணி கிடைத்தது. அவற்றிலெல்லாம் மன நிறைவடையாத பேர்ட் முற்றிலும் மாறாக காலுறை உற்பத்தி செய்யும் சொந்த தொழில் ஒன்றை தொடங்கினார்.
ஆராய்ச்சி
ஆனால் அதில் அவ்வளவு லாபம் கிட்டவில்லை. பின்னர் ஜாம் தயாரிப்பில் இறங்கினார். உடல் ஆரோக்கியம் குன்றிய தால் அந்த தொழிலையும் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் ட்ரினிடேடில் இருக்கும் தன் நண்பரை பார்க்க கப்பல் பயணம் மேற்கொண்டார் பேர்ட். அப்போது கப்பலில் வானொலி இயக்கும் ஊழியரிடம் அவருக்கு நட்பு ஏற்பட்டது. வானொலி ஒலியை, ஒலிபரப்புவதுபோல் படங்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வாறு ஒலிபரப்பலாம் என்பது பற்றி இருவரும் நிறைய விவாதித்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
1922-ம் ஆண்டில் லண்டன் திரும்பினார் பேர்ட். வேலையில்லாத காரணத்தால் அவர் வறுமையில் வாடினாலும் தொலைக்காட்சி பற்றிய கனவு மட்டும் அவரைவிட்டு நீங்கவில்லை. தொலைக்காட்சி பெட்டியின் செயல் முறைக்கான வரைப்படத்தை உருவாக்கி அட்டைப்பெட்டி, மின்மோட்டார், புரொஜ்க்ஸன் விளக்கு, மின் கலங்கள், நியான் விளக்கு, வானொலி வால்வுகள் போன்றவற்றை வைத்து பல வகையான ஆராய்ச்சிகளை செய்து பார்த்தார்.
கருப்பு - வெள்ளை
2 ஆண்டுகள் அவர் உழைத்த உழைப்புக்கு 1924-ம் ஆண்டு பலன் கிட்டுவதுபோல் தெரிந்தது. பல்வேறு இன்னல்களுக்கும் இடையில் அவர் மனம் தளரவில்லை. எப்படியாவது மனித முகத்தையும், நகரும் காட்சியையும் ஒரு பெட்டிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று முயன்று கொண்டே இருந்தார். ஆராய்ச்சிக்கு பணமில்லாததால் உதவிகேட்டு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தார். அதில் கிடைத்த உதவியை கொண்டு அடுத்த ஆண்டே தொலைக்காட்சியின் ஆரம்ப மாதிரியை இயக்கி பார்த்தார். எந்த குறையுமின்றி முழுப்படமும் திரையில் துல்லியமாக தெரிந்தது. அதாவது 1925-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதிதான் உலகுக்கு தொலைக்காட்சி கிடைத்த நாள். அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் வண்ண தொலைக்காட்சி பற்றியும் ஆய்வு செய்து அதனையும் வெற்றிகரமாக உருவாக்கினார். 1929-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஒலிபரப்பு கழகத்திற்காக கருப்பு வெள்ளை தொலைக்காட்சி சேவையை தொடங்கினார்.
வரலாற்று நாயகர்
இன்று தொலைக்காட்சி இல்லாத ஒரு உலகை நினைத்து பார்ப்பது சற்று சிரமம்தான். ஆனால் 85 ஆண்டுகளுக்கு முன்புவரை அது ஒரு கற்பனையாகவே இருந்தது. ஜான் லோகி பேர்ட் முயன்றதால் அந்த கற்பனை நிஜமானது. நமது வரவேற்பறைக்குள் உலகத்தை கொண்டு வர உதவிய அந்த வரலாற்று நாயகரான ஜான் லோகி பேர்ட் 1946-ம் ஆண்டு ஜூன் 14-ந்தேதி காலமானார்.