< Back
மாணவர் ஸ்பெஷல்
தென்னிந்திய சமூக சீர்திருத்தங்களின் தந்தை அயோத்திதாசர்
மாணவர் ஸ்பெஷல்

தென்னிந்திய சமூக சீர்திருத்தங்களின் தந்தை 'அயோத்திதாசர்'

தினத்தந்தி
|
11 April 2023 5:06 PM IST

தமிழ் அறிஞர், பண்பாட்டு சிந்தனையாளர், தலித் அரசியல் முன்னோடி, திராவிடச் சிந்தனைகளின் முன்னோடி, சாதி ஒழிப்புப் போராளியாக கருதப்படுபவர் அயோத்தி தாசர்.

இவரது தந்தை கந்தசாமி. அயோத்திதாச பண்டிதரின் இயற்பெயர் காத்தவராயன். 1845-ம் ஆண்டு மே மாதம் 20-ந்தேதி சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள மக்கிமா நகரில் பிறந்தார். அயோத்தி தாசரின் தாத்தா கந்தப்பரின் சொந்த ஊர் கோவை அரசம்பாளையம். அவர் சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்தார்.

தன் பாட்டனார் கந்தப்பன், தந்தையார் கந்தசாமியைப் போல அயோத்திதாசரும் வைத்தியம், ஓலைச்சுவடி வாசிப்பு, நாள்கோள் கணிப்பு, ஜோதிடம், இலக்கிய பாண்டித்தியம் பெற்றிருந்தார். தந்தை கந்தசாமி மயிலாப்பூரில் வைத்தியம் பார்த்ததால் இவருக்கும் இளமையிலே வைத்தியத்தில் ஆர்வம் ஏற்பட்டது. பின்னர் 'போகர் எழுநூறு', 'அகத்தியர் பரிபாஷை இருநூறு', 'பாலவாகடம்', 'புலிப்பாணி வைத்தியம் ஐந்நூறு' உள்ளிட்ட மருத்துவ நூல்களை அச்சுக்குக் கொண்டுவந்த கவிராஜ வீ.அயோத்திதாசப் பண்டிதரிடம் மாணவராகச் சேர்ந்தார். அவரிடம் மரபான கல்வியும், மருத்துவமும் முறைப்படி கற்ற இவர், 'காத்தவராயன்' எனும் தன் பெயரை 'அயோத்திதாசர்' என மாற்றிக்கொண்டார். அயோத்திதாசரின் குடும்பம் ஆங்கிலேய அதிகாரிகளுடன் தொடர்புடையது என்பதால் அவரது வாழ்க்கை 1890-ம் ஆண்டு வரை சென்னையிலும், நீலகிரியிலும் மாறிமாறிக் கழிந்தது. நீலகிரியில் 'துளசி மாடம்', 'அத்வைதானந்த சபை' உள்ளிட்டவற்றை நிறுவி 17 ஆண்டுகள் சமூகச் செயல்பாட்டுடன் மருத்துவமும் பார்த்தார். 'அக்காலத்தில் அயோத்திதாசர் பெயர் பெற்ற மருத்துவராகத் திகழ்ந்தார்.

1900-களில் சென்னை ராயப்பேட்டையில் 'புத்திஸ்ட் மெடிக்கல் ஹால்' நிறுவி, பிரபல மருத்துவராக இருந்தார். திருவிக, "முடக்குவாத நோயினால் அவதிப்பட்ட அவருக்கு சிறந்த மருத்துவராக இருந்த அயோத்திதாச பண்டிதர் விதவிதமாகச் சிகிச்சை அளித்தார். முழங்காலுக்குத் தைலம் பூசி கொஞ்ச காலம் ஆனாலும் முடக்குவாதத்தைக் குணப் படுத்திவிடலாம் என நம்பிக்கையூட்டினார்.

அயோத்திதாசர் 'தமிழன்' இதழ் (1907 - 1914) காலகட்டத்தில் பிளேக், காலரா, பெருவாரிக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் தலைவிரித்தாடின. மருத்துவரே பத்திரிகை ஆசிரியராக இருந்ததால் அதன் தீவிரம் உணர்ந்து ஆரம்ப இதழில் தொடங்கி கடைசி இதழ் வரை நோய் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து பதிவுசெய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பிளேக் நோய் நாக்பூரில் பரவத் தொடங்கியதிலிருந்து பஞ்சாப், மும்பை, பெங்களூர், சேலம் என மாகாண, மாவட்ட வாரியாகவும் தொடர்ச்சியாக விவரங்களை வெளியிட்டிருக்கிறார். அயோத்திதாச பண்டிதர் நீலகிரியில் தோடர் இனத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மனைவியுடன் பர்மாவுக்குச் சென்ற அயோத்திதாசர் அங்கே 10 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர்களுக்கு கண்பார்வையற்ற தசரதராமன் என்ற குழந்தை பிறந்து சில தினங்களில் இறந்தது. குழந்தை இறந்த சோகத்தில் அயோத்திதாசரின் மனைவியும் காலமா னார். அயோத்திதாச பண்டிதர் மீண்டும் நீலகிரிக்கே வந்தார். ஊர் திரும்பிய அயோத்திதாசர் முதல் மனைவி இறந்து விட்ட பிறகு, இரட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமியை 2-வதாக மணந்தார். தனலட்சுமியின் குடும்பம் வைணவ சமய மரபுகளைப் பின்பற்றியது. தன் ஆண் குழந்தைகளுக்கு மாதவராம், பட்டாபிராமன், ஜானகி ராமன், இராசராம் என்றும், புத்த மதத்தைத் தழுவிய பின்னர் பிறந்த தனது பெண் குழந்தைகளுக்கு அம்பிகா தேவி, மாயா தேவி என்றும் பெயர் சூட்டினார். அயோத்திதாசருக்குப் பிறகு அவருடைய பணிகளை முன்னெடுத்தவர் அவருடைய மகனாகிய பட்டாபிராமன். அயோத்திதாசரின் 'தமிழன்' இதழை பட்டாபிராமன் சிலகாலம் நடத்தினார். இளம்பருவத்தில் முடக்குவாத நோயால் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் பாதிக்கப்பட்டிருந்தபோது, அயோத்திதாசர்தான் சித்த மருத்துவத்தின் மூலம் எழுந்து நடக்க வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாம்பு போன்ற விஷக் கடிகளுக்கு அவர் மருந்து தரமாட்டார் என்றும் பார்வையாலேயே விஷத்தை இறக்கிவிடும் கலைகளைக் கற்றுத் தேர்ந்திருந் தார் என்றும் கூறப்படுகிறது. தமிழக அரசு சித்த மருத்துவமனைக்கு அயோத்திதாச பண்டிதரின் நினைவாக 'அரசு அயோத்திதாசர் சித்த மருத்துவமனை' எனப் பெயர் சூட்டியது. கோவையில் அஸ்வகோஷ் எழுதிய 'நாரதீய புராண சங்கைத் தெளிவு' என்னும் 570 பாடல்களைக் கொண்ட நூலின் சுவடிகள் அயோத்திதாசருக்குக் கிடைத்தன. அதில் இருந்தே இந்தியாவில் பவுத்தம் சாதியமைப்புக்கு எதிராக நடத்திய போராட்டம் பற்றியும், பின்னாளில் பவுத்தர்கள் அடிமைப்படுத்தப்பட்டது பற்றியும் அறிந்துகொண்டார். 1859-ல் தலித் மக்களின் முதல் இதழான 'சூர்யோதயம்' தொடங்கப்பட்டது. வேங்கிடசாமிப் பண்டிதர் இவ்விதழை நடத்தினார். 1871-ல் 'பஞ்சமன்' இதழ் வெளிவந்தது. இவ்விதழ்களை அயோத்தி தாசர் பயின்றுவந்தார். அயோத்திதாசர் மேற்கத்திய முறையிலான கல்விக்காக குரல்கொடுத்தார். 1892-ல் நீலகிரி மாநாட்டு தீர்மானத்திலேயே அயோத்தி தாசர் இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக் கான பிரதிநிதித்துவ உரிமையை வலியுறுத் தினார். ஆணுக்கும், பெண்ணுக்கும் சட்டபூர்வமான சம உரிமை தேவை என்பதை அயோத்திதாசர் வலியுறுத்தி வந்தார். கைம்பெண் மறுமணம், பெண்களுக்கு தொழில்கல்வி ஆகியவற் றை கோரினார். இதனால் அவர் தென்னிந்தியாவின் சமூக சீர்திருத்தங் களின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.

அயோத்திதாசப் பண்டிதர் 1914-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி காலமானார்.

மேலும் செய்திகள்