தேசிய கைத்தறி தினம்
|கைத்தறி ஆடை இந்தியர்களின் பாரம்பரியத்தை குறிக்கின்றது. சிறுதொழிலான கைத்தறி நெசவில் கிட்டத்தட்ட 43 லட்சம் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இத்தொழில் இந்தியாவின் கிராம புறங்களில் அதிக வருமானத்தை தருகிறது.
தேசிய கைத்தறி தினம்
உலகம் முழுவதும் இருந்து உற்பத்தியாகும் ஆடைகளில், கிட்டத்தட்ட 95 சதவீத கைத்தறி ஆடைகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், நம்பியூர், சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சுதேசி இயக்கம் உள்நாட்டு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 1905-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி தொடங்கப்பட்டது.
இதனை நினைவுகூர்தல் மற்றும் கைத்தறி நெசவாளர்களை சிறப்பிக்கும் வகையில் 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி தேசிய கைத்தறி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இலவச வேட்டி-சேலை
நாட்டின் பொருளாதார செயல்பாட்டில் விவசாயத்திற்கு அடுத்து மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பினை வழங்கும் தொழிலாக கைத்தறி தொழில் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் கைத்தறி பிரிவு, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று சிறப்புமிக்கதும், நெசவாளர்களின் மிகச்சிறந்த கைத்திறனுக்கான பாரம்பரியத்தையும் கொண்டது. தமிழ்நாட்டில் தற்போது 1,137 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் கீழ் 2.51 லட்சம் கைத்தறிகள் இயங்கி வருகின்றன. கைத்தறி துறையை மேம்படுத்தவும், நெசவாளர்கள் வாழ்வு வளம்பெறவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் இலவச வேட்டி-சேலை, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஆண்டுதோறும் 4 ேஜாடி விலையில்லா சீருடைகள் வழங்கப்படுகிறது.
சிறந்த நெசவாளர் விருது
தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம், டாக்டர் எம்.ஜி.ஆர். கைத்தறி நெசவாளர் நல்வாழ்வு அறக்கட்டளை கீழ் நெசவாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், கைத்தறி நெசவாளர்களுக்கான வட்டி மானிய திட்டம், மாநில அளவில் சிறந்த நெசவாளர் விருது வழங்கும் திட்டம், திறன்மிகு கைத்தறி நெசவாளர்களுக்கு பரிசுகள் வழங்கும் திட்டம், கைத்தறி நெசவை லாபகரமான தொழிலாக்குதல், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தியை அதிகப்படுத்துதல், புதிய வடிவமைப்பு திறன்களை மேம்படுத்துதல், கைத்தறி துணிகளை சந்தைப்படுத்துதல், கைத்தறி துணிகளை பிரபலப்படுத்துதல், பாரம்பரியமிக்க கைத்தறி நெசவை பாதுகாத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி அளிக்க 'கைத்தறி ஆதரவு திட்டம்' போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. எனவே கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திடும் வகையில், அனைவரும் கைத்தறி துணிகளை அதிகளவில் வாங்கி பயன்படுத்திட வேண்டும்.