< Back
மாணவர் ஸ்பெஷல்
எனது ஆசிரியர்
மாணவர் ஸ்பெஷல்

எனது ஆசிரியர்

தினத்தந்தி
|
18 July 2023 6:27 PM IST

கடமை உணர்ந்த ஆசிரியரை பற்றி ஒரு மாணவியின் எண்ண ஓட்டங்கள் எழுத்து வடிவில் எவ்வாறு இருக்கும் என்பதை இங்கு காண்போம்.

மாதா! பிதா! குரு! தெய்வம்!

இந்த வரிசையில் எந்த இடம் கொடுப்பது என்று எனது ஆசிரியரை பற்றி யோசித்து பார்த்தேன். அவர் அரவணைப்பில் அன்னையாய், அறிவுரை கூறுவதில் தந்தையாய், அறியாமை அகற்றுவதில் ஆசிரியராய், என்னை அருளோடு காக்கும் தெய்வமாய், நான்கையும் ஒரே வடிவமாய் கண்டேன்.

எனது ஆசானாகிய நீங்கள் ஒவ்வொரு முறையும் சொல்வீர்கள். வாழ்க்கையில் அன்பை கூட்டிக்கொள், அறிவை பெருக்கி கொள், பாவத்தை கழித்து கொள், பிறருடன் சமமாக வாழக்கற்றுக்கொள் என்று... ஏனென்றால் நீங்கள் என் கணித ஆசிரியர் அல்லவா?

அதுபோல் நானும் ஒரு அதிர்ஷ்டசாலி தான். நீங்கள் எனக்கு கணித ஆசிரியராக வந்த நொடியில் எனக்கு அன்பில் தாயாக... அழகில் தேவதையாக, அறிவில் மந்திரியாக... ஆதரவில் ஒரு உறவாக... கண்டிப்பில் ஒரு நல்ல ஆசிரியராக... அடுத்த ஜென்மம் என ஒன்று இருந்தால் அப்போதும் நீங்கள் என் கணித ஆசிரியராக வர வேண்டும் என்று வேண்டுகிறேன், இந்த நொடி கூட கடவுளிடம்..

இவ்வாறு கணித ஆசிரியர் மேற்கொண்ட அன்பினால் கடினமான கணித பாடம் கூட கச்சிதமாக வந்தது. நீங்கள் எனக்கு கணித ஆசிரியராக கிடைத்தது, மிகப்பெரிய வரம். எனக்கு நீங்கள் கடவுள் கொடுத்த பரிசு.

ஒரு நல்ல நண்பர் போல் சக மாணவர்களிடம் அன்பாய் பேசும் பேச்சு, யாரிடமும் பாகுபாடு காட்டாமல் பழகும் என் ஆசிரியரே தினம், தினம் உங்களிடம் குணம் பல பயின்றோமே... இத்தகைய சிறப்புமிக்க ஆசிரியரே உங்களை நாங்கள் போற்றுகிறோம், வணங்குகிறோம்.

பிறப்பாலே சொந்தம் இல்லை. இருந்தாலும் நீங்கள் சுமந்தீர்கள் கல்வி என்னும் கருவறையில்... அன்பில் அன்னையாகவும், அறிவில் தந்தையாகவும், மெழுகாய் நீங்கள் உருகி எங்களை மிளிர செய்தீர்கள்... நன்றி என்னும் மூன்றெழுத்தை நானும் சொல்ல வந்தேனே... கண்ணீர் விட்டு நின்றேனே வார்த்தை எதுவும் இல்லாமல்...

இனியவளே... என் தோழியாக கிடைத்த எனது ஆசிரியையே...

இந்த கவிதையின் முடிவில் இதழோரம் தோன்றும் சிரிப்பு தான் எனது இந்த எழுத்துகளுக்கு உயிர்ப்பு என்று முத்தாய்ப்பாய் முடிக்கிறேன், உங்களின் உண்மை மாணவி என்ற பெருமையுடன்....

மேலும் செய்திகள்