< Back
மாணவர் ஸ்பெஷல்
மடகாஸ்கர் பற்றிய தகவல்கள்
மாணவர் ஸ்பெஷல்

மடகாஸ்கர் பற்றிய தகவல்கள்

தினத்தந்தி
|
4 Sept 2023 9:30 PM IST

ஆப்பிரிக்காவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள `மடகாஸ்கர்' உலகின் நான்காவது பெரிய தீவாகும்.

மேற்கு எல்லையைத் தவிர, மற்ற அனைத்து திசைகளும் இந்தியப் பெருங்கடலால் சூழப்பட்டுள்ளது. பசுமையான மழைக்காடுகள், வறண்ட பாலைவனங்கள் மற்றும் புல்வெளி சமவெளிகள் ஆகிய அனைத்து விதமான நிலப்பரப்புடன் காணப்படுகிறது. அரேபியர்கள் வாணிபத்திற்காக முதல் முதலாக இங்கே வந்ததாக நம்பப்படுகிறது. அதன் பின்னர் ஐரோப்பியர்களின் வருகை இருந்தது. 1897 முதல் 1958 வரை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்ததால், பிரெஞ்சு மொழி அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக இருக்கிறது. உள்ளூர் மக்கள் பேசும் அதிகாரப்பூர்வ மொழியாக `மலகாசி' உள்ளது. மடகாஸ்கர், உலகில் வேறு எங்கும் காண முடியாத, ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ள நாடாக திகழ்கிறது. இங்கு அரிதாக காணப்படும் `லெமூர்', `போபாப் மரங்கள்' ஆகியவை மடகாஸ்கரின் தனிச்சிறப்பாகும். ஒன்பது வகை போபாப் மரங்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஆறு வகை மடகாஸ்கரில் மட்டுமே உள்ளன. மடகாஸ்கரில் வாழும் தாவரங்கள் மற்றும் விலங்குகளில் கிட்டத்தட்ட 90 சதவீதம் உலகில் வேறு எங்கும் காண முடியாது. உலகில் சுமார் 150 வகையான பச்சோந்திகள் உள்ளன. அவற்றில் 59 மடகாஸ்கருக்குச் சொந்தமானவை. உலகின் மூன்றாவது பெரிய பவளப்பாறை அமைப்பும் மடகாஸ்கரில் உள்ளது. வெண்ணிலாவை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலிலும் முன்னிலை வகிக்கிறது. மடகாஸ்கரில் 2,876 மீட்டர் (9,436 அடி) உயரத்தில் உள்ள `மரோமோகோட்ரோ' என்ற பெயர் கொண்ட எரிமலையும் உள்ளது.

மடகாஸ்கரில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான தாவரங்கள் வளர்கின்றன. `பெரிவிங்கிள்' தாவரங்கள் ஹாட்ஜ்கின் நோய், லுகேமியா மற்றும் புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளை உற்பத்தி செய்கின்றன. இங்குள்ள மக்களின் பிரதான உணவு அரிசி. 25 வயதிற்குட்பட்ட 60 சதவீதத்திற்கும் அதிகமான இளைஞர்களைக் கொண்ட தேசமாக மடகாஸ்கர் உள்ளது. மீன்பிடித்தல், விவசாயத் தொழில்கள் இந்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் செய்திகள்