வாழ்க்கையில் அளவற்ற மகிழ்ச்சியை அளிப்பது அன்பு
|உயிர்களிடத்தும் அன்பு என்னும் இணைக்கும் சக்தி இருக்க வேண்டும். உயிர்களிடம் அன்பு செலுத்துவோம்.
'உன்னிடத்தில் நீ அன்பு கூர்வதுபோல பிறரிடத்திலும் அன்பு காட்டவேண்டும்'. அன்புள்ள இடமே வாழ்வு உள்ள இடம். அன்பில்லா வாழ்வு மரணமே என்பது மதங்கள் நமக்கு உணர்த்தும் போதனைகள் ஆகும். அணுக்கள் இடையே இணைக்கும் சக்தி இருப்பதால்தான் உலகம் பொடிப்பொடியாக உதிர்ந்துவிடாமல் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதுபோலவே உயிர்களிடத்தும் அன்பு என்னும் இணைக்கும் சக்தி இருக்க வேண்டும். உயிர்களிடம் அன்பு செலுத்துவோம். ஆபத்தில் சிக்கி இருக்கும் உயிரை காப்பாற்ற வேண்டும். அதன் மூலம் உயிர்களிடம் அன்பு வளரும்.
அன்பு உள்ள இடத்திலேயே உயிர் இருக்கிறது. பகைமை அழிவையே தருகிறது. ஒரு வலுவான ஈர்ப்பு மற்றும் தனிப்பட்ட உறவு முறை அன்பின் உணர்வை குறிக்கிறது. மனிதநேயம், இரக்கம், பாசம், ஆகியவற்றை குறிக்கும் ஒரு நல்லொழுக்கமே அன்பு எனப்படுகிறது. தங்களை பெரிதும் கவர்ந்த, மதிக்கின்ற பொருள், கொள்கை அல்லது குறிக்கோள் மீது அன்பு செலுத்துவது பற்றி மக்களால் கூறமுடியும். ஆனால் பிறரிடம் கொண்ட அன்புக்கு காரணம் கூற முடியாது. அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள். அன்பு என்ற மூன்று எழுத்தால் பகை என்ற இரண்டு எழுத்தை அடக்கமுடியும். அவ்வாறு அடக்கி பாருங்கள் வாழ்வில் வளமோடு வாழலாம்.
அன்பாலும், கருணையாலும் அனைவரையும் காப்பாற்ற முடியும் என்பதற்கு அன்னை தெரசாவை முன்மாதிரியாக கொள்ள வேண்டும். அன்பு ஒன்றை மட்டும் கொடுத்தவரும் சரி, எடுத்தவரும் சரி ஒரு அளவில்லா இன்பத்தை அடைகிறார்கள். அன்பு ஒன்றுக்கு மட்டும் தான் அதை கொடுப்பதற்கு அறிவும் தேவை இல்லை,தோற்றமும் தேவை இல்லை, பணமும் தேவை இல்லை. நல்ல உள்ளம் இருந்தாலே போதும். மனித வாழ்க்கையில் அளவற்ற மனநிறைவுடன் கொண்ட மகிழ்ச்சியை கொடுக்க அன்பினால் மட்டுமே முடியும்.
அன்பு என்ற பிணைப்பு இவ்வுலகில் இல்லை என்றால் சுயநலத்தில் வாழ்வு சுடுகாடாய் மாறிவிடும். சீர் செய்து சிதைக்க சிறுமை முயன்றாலும் யார் செய்த புண்ணியமோ அன்பு இன்னும் வாழ்கிறது. ஒரு கால கட்டத்தில் பணம், பலம் பயணத்திற்காக ஓடிய அனைவரும் ஒரு உண்மையான அன்பிற்காக மனதுக்குள் ஏங்கி கொண்டு தான் இருப்பார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. அனைத்து மதங்களும் நமக்கு கற்று கொடுப்பது இந்த அன்பை தான்.