லஸ்ஸி: சத்தானது, சுவையானது
|கோடை வெயிலுக்கு ஏற்ற உணவுகளில், லஸ்ஸியும் ஒன்று. இது சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும்கூட. லஸ்ஸியில் இருக்கும் ஆரோக்கிய பலன்களை அறிந்து கொள்வோமா....
* பலன்களும் சத்துகளும்
இதில் கால்சியம், வைட்டமின் பி 12, துத்தநாகம், புரோட்டீன் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துகள் நிறைவாக உள்ளன.
* நோய் எதிர்ப்பு சக்தி
பொதுவாகவே பால் பொருட்கள் உடலுக்கு நன்மைசெய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்கக்கூடிய புரோபயாட்டிக்ஸ் (Probiotics) நிறைந்த உணவுகள். இவை, வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதுடன், நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கவும் உதவும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* செரிமானம்
லஸ்ஸியில் உள்ள ஊட்டச்சத்துகள் செரிமானத்துக்கு தேவையான என்சைம்களை அதிகரித்து, செரிமானத்துக்கு உதவும். உடலின் ஜீரண சக்தியை பலப்படுத்தும்.
* வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். வயிற்றுப் புண், வயிறு உப்புசம் உள்ளிட்ட வயிற்று உபாதைகளைச் சரியாக்கும்.
* பற்கள், எலும்புகளை வலுவாக்கும்
லஸ்ஸியில் கால்சியம் அதிக அளவில் உள்ளது. இது எலும்புகளும் பற்களும் வலிமையாக உதவுகிறது. மேலும், எலும்பு தேய்மானம் போன்ற நோய்கள் வருவதையும் தடுக்கிறது.
* உடனடி எனர்ஜி
வைட்டமின் பி-12 ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை ஆற்றலாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் வைட்டமின் பி-12 இருப்பதால், ஒரு டம்ளர் லஸ்ஸி குடித்தால் உடனடி ஆற்றல் கிடைக்கும். தொடர்ச்சியாக, லஸ்ஸி சாப்பிட்டு வந்தால், வைட்டமின் பி-12 குறைபாடு சீராகும்.
* தசைகளை வலிமையாக்கும்
லஸ்ஸியில் புரோட்டீன் நிறைவாக உள்ளது. இது தசைகளை வலிமையாக்கும். உடற்பயிற்சி செய்கிறவர்கள், பாடி பில்டர் போன்றவர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்து உணவு.
* கோடைகால நோய்களை விரட்டும்
கோடைகாலத்தில் வெப்பத்தால் ஏற்படும் வியர்குரு, இரைப்பை நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
பல சுவைகளில்...
லஸ்ஸி, பல சுவைகளில் பரிமாறப்படுகிறது. மாம்பழம், வாழைப்பழம், புதினா, ரோஜா பூ, சாக்லெட், பழ கலவை... இப்படி பல சுவைகளிலும், பல நிறங்களிலும் சுவைக்கப்படுகிறது.