உயர் ரத்த அழுத்த தினம்
|உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், உயர் ரத்த அழுத்தத்தை கண்டறிவது, வராமல் தடுப்பது, நோய் பாதிப்பை கட்டுப்படுத்துவது போன்ற செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காகவும் 2005-ம் ஆண்டு முதல் மே 17-ந் தேதி உலக உயர் ரத்த அழுத்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
உயர் ரத்த அழுத்தம் எனப்படுவது ரத்த அழுத்தம் சாதாரண அளவை விட அதிகமாக இருக்கும் நிலையாகும். அதாவது 140/90 க்கு மேல் இருந்தால் அது உயர் ரத்த அழுத்தம் என அறியப்படுகிறது. உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும் பலருக்கு தான் அந்த நோய்க்கு ஆளாகி இருப்பது தெரியாது. காரணம் பெரும்பாலும் அதன் அறிகுறிகள் தென்படுவதில்லை.
இளம் தலைமுறையினரிடையே இந்த நோயின் தாக்கத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், சில நேரங்களில் முறையற்ற மருந்துகள் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகளை அனைவரும் அறிந்து கொள்ளச் செய்வதும் இந்த நாளின் நோக்கமாக அமைந்திருக்கிறது. 2023-ம் ஆண்டின் கருப்பொருள் 'உங்கள் ரத்த அழுத்தத்தை துல்லியமாக அளவிடவும், அதை கட்டுப்படுத்தவும், நீண்ட காலம் வாழவும்' என்பதாகும். உயர் ரத்த அழுத்தம் ஒருவரின் உடலை 'சைலெண்ட் கில்லர்' எனப்படும் அமைதியாக தாக்கும் தன்மை கொண்டது. மேலும் சிறுநீரக செயலிழப்பு, மூளை பாதிப்பு மற்றும் இதய நோய்கள் உள்பட பல உடல்நலப் பிரச்சினைக்கும் வழிவகுக்கக் கூடியது.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு இதை முன்கூட்டியே கண்டறிந்து வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். ஆரோக்கியமான உடல் எடையை கொண்டிருக்க வேண்டும். வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டரை மணி நேரமாவது உடற் பயிற்சிகளை செய்ய வேண்டும். தானியங்கள், பழங்கள், அதிக சத்துள்ள காய்கறிகள், கொழுப்பு குறைந்த பால், பூண்டு போன்றவைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கலாம். மேலும் பதப்படுத்தப்பட்ட உணவைத் தவிர்த்தல், புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பழக்கத்தை கைவிடுதல், நிம்மதியான தூக்கம், உயர் புரத உணவுகளை உட்கொள்ளுதல், காபினை குறைத்தல்.. இவைகளை கடைப்பிடிப்பதன் மூலமும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.
-பிரியதர்ஷினி, 11-ம் வகுப்பு,
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்.