< Back
மாணவர் ஸ்பெஷல்
மழைக் கால நோய்களை தடுக்கும் மூலிகைகள்
மாணவர் ஸ்பெஷல்

மழைக் கால நோய்களை தடுக்கும் மூலிகைகள்

தினத்தந்தி
|
10 Aug 2023 9:54 PM IST

சீதோஷ்ணத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை சமாளித்து ஆரோக்கியத்தை மேம்படுத்த சில ஆயுர்வேத மூலிகைகள் உதவும். மழைக்காலத்தில் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய அத்தகைய மூலிகைகள் பற்றி பார்ப்போம்.

கோடை வெப்பத்தின் உக்கிரத்தில் இருந்து விடுவித்து இதமான காலநிலையை மீட்டெடுப்பதில் பருவ மழைகாலத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது. குளிர்ச்சியான சூழலை பரவச் செய்யும் ஆற்றல் அதற்கு உண்டு. ஆனால் சுகாதார கண்ணோட்டத்தோடு அணுகினால் பருவமழைக்காலம் சிறந்ததல்ல.

உணவு பொருட்கள், கொசுக்களால் பரவும் நோய்கள், காய்ச்சல் உள்பட பல்வேறு பருவகால நோய்த்தொற்றுக்கள் மனிதர்களின் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும். மாறுபடும் சீதோஷண நிலையும் உடல்நலனில் பாதிப்பை ஏற்படுத்தும். சீதோஷ்ணத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை சமாளித்து ஆரோக்கியத்தை மேம்படுத்த சில ஆயுர்வேத மூலிகைகள் உதவும். மழைக்காலத்தில் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய அத்தகைய மூலிகைகள் பற்றி பார்ப்போம்.

அஸ்வகந்தா

அஸ்வகந்தா நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும் பண்புகளை கொண்டது. மழைக்காலத்தில் மற்ற உணவுப்பொருட்களுடன் அஸ்வகந்தாவை துணை பொருட்களாக உட்கொள்வது ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும். நோய் எதிர்ப்பு சக்தியை கட்டமைப்பதுடன் மூளையின் செயல்பாடுகளையும் துரிதப்படுத்தும். ரத்த அழுத்தத்தில் நிலவும் ஏற்ற, இறக்கங்களை சீர்படுத்தவும் உதவும்.

வேம்பு

இதன் கசப்பான சுவையை எவரும் விரும்பாததால் ஒதுக்கிவைக்கப்படும் பொருளாக இருக்கிறது. மற்ற காலங்களை விட மழைக்காலங்களில் வேம்புவை உபயோகிப்பது நன்மை பயக்கும். நுண்ணுயிர் தொற்றுக்களை தடுத்து சருமத்தை பாதுகாக்கும். வேப்பங்கொட்டையில் நிம்பிடின், நிம்போலைடு ஆகிய சேர்மங்கள் உள்ளன. இவை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கின்றன. வேப்பம்பூ டீ குடிப்பது, வேப்ப இலைகளை மென்று சாப்பிடுவது ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும்.

லெமன்கிராஸ்

இதில் சிட்ரஸ் போன்ற சேர்மங்கள் உள்ளன. அவை நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு தூண்டுதல் பண்புகளை வெளிப்படுத்துகின்றன. லெமன்கிராஸ் டீ அல்லது லெமன்கிராஸ் சூப் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். மழைக்காலத்தில் ஏற்படும் பொதுவான நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

இஞ்சி

இஞ்சியில் கந்தகம் உள்ளது. இது உடலை கிருமி நீக்கம் செய்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இஞ்சியில் உள்ளடங்கி இருக்கும் ஜிஞ்சர்ரோல் என்னும் சேர்மம் அழற்சி எதிர்ப்பு, ஆன்டிவைரல், ஆன்டி ஆக்சிடெண்ட், பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறது. இஞ்சி டீ, சூப் பருகுவது, வறுவல்களில் அரைத்த இஞ்சியைச் சேர்ப்பது மழைக்காலத்தில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

மேலும் செய்திகள்