செரிமான மண்டலத்தை சீர் செய்யும் 'புளி'
|மலச்சிக்கலை போக்கவும், உடல் வெப்பத்தைக் குறைக்கவும் மூலிகை மருந்தாக புளியம் பழம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நம் உணவில் புகுந்து மனதினையும், நம் நாவின் சுவைமொட்டுக்களையும் வேட்டையாடும் தன்மையுடையது இந்த புளி. புளி பாரம்பரியமாக பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழர்களின் சமையல்கலையில் நீங்காத இடம் பிடித்திருக்கும் அஞ்சறைப்பெட்டி மூலிகைச்சரக்கு புளி. புளி என்று சொன்னதுமே, வாயில் ஒருவித கூச்சத்துடன் உமிழ்நீர் சொட்ட சொட்ட இச்சு கொட்டும் ஒரு உணர்வுக்கு உரித்தான மகத்தான மூலிகைப் பொருள் என்பது நாம் அறிந்ததே. கிழக்கு ஆப்ரிக்கா நாட்டை பூர்வீகமாக கொண்ட புளி, இந்தியாவின் காடுகளில் மட்டுமின்றி பெரும்பாலான ஊர்களில் வளரும் சிறப்பு மிக்கது. நம் உணவில் புகுந்து மனதினையும், நம் நாவின் சுவைமொட்டுக்களையும் வேட்டையாடும் தன்மையுடையது இந்த புளி.
புளி பாரம்பரியமாக பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மடகாஸ்கர் தீவுகளில் மலச்சிக்கலை போக்கவும், உடல் வெப்பத்தைக் குறைக்கவும் மூலிகை மருந்தாக புளியம் பழம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் புளியை சர்க்கரையுடன் சேர்த்து இனிப்பான உருண்டைகளாக செய்து உண்ணப்படுகிறது. இந்த புளி உருண்டைகள் 'இனிப்பான இறைச்சி' என்றும் கருதப்படுகின்றன. நைஜீரியா நாட்டின் கிராமப்புற மக்கள் ஊறவைத்த புளி பழங்களை மலச்சிக்கலை போக்க பயன்படுத்தி வருகின்றனர்.
மலச்சிக்கலைப் போக்கும் அஞ்சறைப்பெட்டி மூலிகைகள் வரிசையில் வெந்தயத்திற்கு அடுத்தாற் போல் புளியும் சேருவது குறிப்பிடத்தக்கது. புளியில் கணிசமான அளவு நார்சத்து உள்ளதே அதன் மலமிளக்கி தன்மைக்கு காரணமாகிறது. அதில் 13 சதவீதம் அளவு நார்சத்து உள்ளது. மேலும் உடல் நலனுக்கு இன்றியமையாத வைட்டமின்களான வைட்டமின் ஏ, வைட்டமின் சி கிட்டத்தட்ட 6 சதவீதமும், வைட்டமின் கே, வைட்டமின் ஈ ஆகியனவும் உள்ளன. குறிப்பாக அதிக அளவு வைட்டமின் பி-1 அதாவது 36 சதவீதம் அளவிற்கும், நியாசின் 12 சதவீதம் அளவிற்கும், போலிக் அமிலம், வைட்டமின் பி-6, வைட்டமின்- பி-2 ஆகிய வைட்டமின்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாம் ரசத்திற்கு பயன்படுத்தும் புளியின் பழத்தில் உடலுக்கு சத்தாகும் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகிய கனிம உப்புகள் மட்டுமின்றி, வயோதிகத்தை தடுக்கும் தன்மையுள்ள தாது உப்புக்களான செலினியம், செம்புச் சத்து, துத்தநாகச் சத்து ஆகியனவும் உள்ளது. இதன் மூலம் புளியானது உடல் ஆரோக்கியத்திற்கு கூரை அமைக்கும் என்பது விளங்குகிறது. இதில் பொட்டாசியத்தின் அளவு அதிகமாக இருப்பதால் நரம்புத்தசை செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. மொத்தத்தில் புளியின் பழம் ஊட்டச்சத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
சித்த மருத்துவத்தில் அறுசுவை மருத்துவம் என்ற ஒன்று உண்டு. இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உப்பு ஆகிய ஆறு சுவைகளும் நமது உணவில் அன்றாடம் சேர்க்க வேண்டுமென சித்த மருத்துவம் கூறுகின்றது. சில சுவைகளை அதிகம் நாடும் நாம், சில சுவைகளை ஒதுக்குவதே நோய்களுக்கு காரணம் என்கிறது சித்த மருத்துவம். அந்த வகையில் புளிப்பு சுவைக்கு, நாம் எளிமையாக உணவில் சேர்க்கும் புளி அறுசுவை மருத்துவத்துக்கு கிடைத்த வரம்.