பறக்கும் கடிகாரம்..!
|காகங்கள் பற்றிய அபூர்வ தகவல்
கோழி கூவுகிறது. பொழுது விடிகிறது. எனவே, கோழியை நாம் காலம் காட்டும் கடிகாரமாக, அலாரம் கடிகாரமாக கருதுகிறோம்.
ஆனால், உண்மையான கடிகாரப் பறவை எது தெரியுமா? காகம்தான். அதிகாலையிலும், அந்தி வேளையிலும் காகம் கரைவதால் மட்டும் இதைச் சொல்லவில்லை. ஹாலந்து நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பல ஆராய்ச்சிகள் செய்து காகத்தைப் பரிசோதித்த பின்னரே இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
ஊசிமுனை அளவுகூட ஒளி புகாத இருட்டறை ஒன்றில் காகத்தை அடைத்து வைத்துப் பார்த்தார்கள். காலையா, மாலையா, இரவா, பகலா என்று சூரியன் மூலம் அதற்குத் தெரிய வாய்ப்பே இல்லை. ஆனாலும் அந்த காகம் கச்சிதமாகக் காலையிலும், அந்தி நேரத்திலும் கரைந்ததோடு, காலை நேரத்தையும் மாலை நேரத்தையும் வேறுபடுத்தியும் காட்டியதாம்.
இது போதாதென்று கருதிய விஞ்ஞானிகள், கண்ணைப் பறிக்கிற செயற்கை ஒளியை காக்கையின் அறை எங்கும் பாய்ச்சி, இரவில் செயற்கையான பகல் பொழுதை உருவாக்கினார்கள். ஆனால் அந்த செயற்கை வெளிச்சத்திடமும் ஏமாறாத காகம், அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் இயற்கையாகவே பொழுது விடியத் தொடங்கியபோதுதான் சத்தமிடத் தொடங்கியது.
ஆகவேதான், காக்கை ஓர் இயற்கையான கடிகாரப் பறவை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள், விஞ்ஞானிகள்.