< Back
மாணவர் ஸ்பெஷல்
குழந்தைகளுடன் தினமும் மேற்கொள்ள வேண்டிய பழக்கங்கள்
மாணவர் ஸ்பெஷல்

குழந்தைகளுடன் தினமும் மேற்கொள்ள வேண்டிய பழக்கங்கள்

தினத்தந்தி
|
10 Aug 2023 8:08 PM IST

வாசிப்பு பழக்கம் குழந்தைகளின் கற்பனைத்திறன், மொழித்திறன் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியை தூண்டுவதற்கு உதவும்.

கற்றல் திறன்

வெறுமனே பாடப்புத்தகங்களை படிக்க வைக்காமல் கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது அவர்களின் அறிவுசார் வளர்ச்சிக்கு உதவும். புதிர்களை தீர்ப்பது, கல்வி சார்ந்த விளையாட்டுகளில் ஈடுபடுவது, அறிவியல் ஆய்வகம் சார்ந்த பரிசோதனைகளை மேற்கொள்வது, அடிப்படை கணினி பயிற்சிகளை செய்வது ஆகியவையும் இதில் அடங்கும். இந்த செயல்பாடுகள் கற்றலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.

படைப்பாற்றல்

படங்களுக்கு வண்ணம் தீட்டுவது, தத்ரூபமாக ஓவியம் வரைவது, கைவினைப்பொருட்கள் தயார் செய்வது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு நேரம் ஒதுக்குங்கள். தினமும் சிறிது நேரம் ஒதுக்கினாலே போதும். அதன் மூலமே அந்த கலைகள் மீதான ஈடுபாட்டை அதிகப்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த செயல்பாடுகள் குழந்தைகளின் படைப்பாற்றல் திறன், தனித்திறன், ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால் அவற்றுக்கு தீர்வு காண்பதற்கான திறன்களை மேம்படுத்த உதவும். மேலும் குழந்தைகளிடத்தில் கற்பனை திறனை ஊக்குவிக்கவும், அவர்களின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தவும் துணை புரியும்.

படிப்பு

வாசிப்பு பழக்கம் குழந்தைகளின் கற்பனைத்திறன், மொழித்திறன் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியை தூண்டுவதற்கு உதவும். அது குழந்தைகள் விரும்பி பார்க்கும் பட புத்தகமாக இருந்தாலும் சரி, பெரியவர்கள் படிக்கும் அறிவுப்பூர்வமான புத்தகமாக இருந்தாலும் சரி அவற்றை இருவரும் சேர்ந்து படிக்க வேண்டும்.

அப்படி தினமும் சேர்ந்து படிப்பது அவரவர் திறன்களை மெருகேற்ற உதவும். குழந்தைகளிடத்தில் கேள்வி கேட்கும் எண்ணத்தை ஊக்குவிக்கவும் செய்யும்.

வெளிப்புற விளையாட்டு

செல்போன், வீடியோ கேம்களில் மூழ்கி கிடக்கும் குழந்தைகளை வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபட வைப்பது அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. பூங்காவில் விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது, டென்னிஸ், வட்டு எறிதல் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது, இயற்கையான சூழலில் சிறிது நேரம் செலவிடுவது என ஏதாவதொரு வகையில் வெளிப்புற விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டும். அவை உடலுக்கு மட்டுமின்றி உள்ளத்திற்கும் உற்சாகத்தை கொடுக்கும். வெளி உலக தொடர்பை வளர்த்துக்கொள்ள ஊக்குவிக்கும்.

குழந்தைகளுக்கான நேரம்

குழந்தைகளுடன் தினமும் தனியாக நேரத்தை செலவிடுங்கள். அந்த நேரம் அவர்களின் விருப்பங்களை புரிந்து கொள்வதற்காகவும், அவர்கள் விரும்பியபடி நடந்து கொள்வதற்காகவும் மட்டுமே அமைய வேண்டும். அவர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் நீங்களும் சேர்ந்து ஈடுபட வேண்டும். அது உறவை வலுப்படுத்தவும் துணை புரியும்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்ல தொடங்கி இருக்கும் குழந்தைகளிடம் ஒருவித விளையாட்டுத்தனம் எட்டிப்பார்க்கும். இத்தனை நாட்கள் வரை விடுமுறையை உற்சாகமாக கழித்தவர்கள் பள்ளிச்சூழலுக்கு மாறி படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகுவார்கள். அப்படி படிப்புக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அவர்களின் உணர்வுகளுக்கு கடிவாளம் போட வேண்டியதில்லை.

படிப்புக்கு மத்தியில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க ஆக்கப்பூர்வமான விஷயங்களில் அவர்களின் கவனத்தை திசை திருப்புவதும் அவசியமானது. அது படிப்பை எந்த வகையிலும் பாதிக்காது. அவர்களின் தனித்திறனையும், ஆளுமைத்திறனையும் மேம்படுத்துவதற்கு உதவும். இந்த விஷயத்தில் பெற்றோர்களின் பங்களிப்பும் முக்கியமானது. குழந்தைகளுடன் சேர்ந்து தினமும் மேற்கொள்ள வேண்டிய பழக்கங்கள் குறித்து பார்ப்போம்.

குடும்ப நேரம்

குடும்பமாக சேர்ந்து சாப்பிடுவது குடும்பத்தினரிடையே பாசப்பிணைப்பை அதிகரிக்க செய்யும். அந்த சமயத்தில் அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபடலாம். பழைய நினைவுகளை மீட்டெடுக்கலாம். அனுபவ பகிர்தல் குழந்தைகளுக்கு நல் வழிகாட்டுதலாக அமையும்.

சாப்பிடும் நேரத்தை குடும்பத்தினர் அனைவருக்குமான நேரமாக மாற்றிக்கொள்ளலாம். சாப்பிட்டு முடித்ததும் அவரவர் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும், அன்றைய நாளில் நடந்த சம்பவங்கள் பற்றி கூறுவதற்கும் அந்த நேரத்தை உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

வேலைகள்

வயதுக்கு ஏற்ற வீட்டு வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். அவர்களுடன் மற்ற குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து குழுவாக பணியாற்றுங்கள். குழுவை வழிநடத்தும் அதிகாரத்தை குழந்தைகளிடம் ஒப்படையுங்கள். அவை தலைமைத்துவம், ஆளுமை திறன், பொறுப்புணர்வு போன்ற முக்கியமான விஷயங்களை கற்றுக்கொடுக்க உதவும்.

மேலும் செய்திகள்