< Back
மாணவர் ஸ்பெஷல்
கிரையோஜெனிக் தொழில்நுட்பம்
மாணவர் ஸ்பெஷல்

கிரையோஜெனிக் தொழில்நுட்பம்

தினத்தந்தி
|
4 Sept 2023 9:15 PM IST

ராக்கெட்டுகள், `கிரையோஜெனிக்’ என்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விண்ணில் ஏவப்படுகிறது. அது என்ன கிரையோஜெனிக் தொழில்நுட்பம்? அதை பற்றி காண்போம்.

இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் கிரையோஜெனிக் தொழில்நுட்பம் கொண்ட ராக்கெட்டுகளை இந்திய விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இது இந்தியாவின் 17 ஆண்டு கால ஆராய்ச்சியின் பலனாகும். கிரையோஜெனிக், கிரேக்க வார்த்தைகளான `கைரோஸ்' (குளிர் அல்லது உறைதல்) மற்றும் `ஜீன்' (எரித்தல் அல்லது உற்பத்தி செய்யப்பட்டது) ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது. கிரையோஜெனிக் என்பது எளிதான தொழில்நுட்பமல்ல.

பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து எதிராக ராக்கெட் என்ஜின்களுக்கு மிகப்பெரிய உந்துதல் தேவை. ஹைட்ரஜனையும், ஆக்சிஜனையும் வாயு வடிவில் வைத்து அனுப்ப, ராக்கெட்டில் போதுமான இடம் இருக்காது. எனவே ஹைட்ரஜனையும், ஆக்சிஜனையும் குளிர்வித்து அதனை திரவ வடிவத்தில் எரிபொருளாக பயன்படுத்துவதுதான் கிரையோஜெனிக் தொழில்நுட்பம். இந்த வகை என்ஜினில்தான் அதிக உந்துசக்தி கிடைக்கும். ஹைட்ரஜன் வாயுவை மைனஸ் 253 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குளிர்வித்து திரவமாக்கி, ஆக்சிஜன் வாயுவை மைனஸ் 184 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குளிர்வித்து திரவமாக்கி பயன்படுத்துகின்றனர். இந்த திரவங்கள் ராக்கெட்டின் முன்புறத்தில் தனித்தனி இடங்களில் சேமித்து வைக்கப்படும்.

திரவ ஆக்சிஜனையும், திரவ ஹைட்ரஜனையும் தயாரிப்பது பெரிய பிரச்சினை இல்லை. சேமிப்பதில் தான் சிக்கல் உள்ளது. இந்த அளவுக்கு குளிர்ந்த திரவங்கள், சேமிக்கும் கலன்களை உறைய வைக்கும். இத்தகைய கடும் குளிரைத் தாங்கும் உலோகங்களை உருவாக்குவதற்கு அதிக ஆராய்ச்சி தேவை. அதனால் ராக்கெட்டில் சேமிக்க இவ்வளவு கடுமையான குளிரை தாங்கும் வகையிலான பொருட்களால் உருவாக்க வேண்டும். உலகில் மிகக் குறைந்த நாடுகளே இந்த வகையிலான என்ஜினை வடிவமைத்துள்ளன. அதில் இந்தியாவும் ஒன்று. ராக்கெட் உயரே செல்லும்போது இந்த இரண்டு திரவ வடிவமுள்ள வாயுக்களும் ராக்கெட்டின் கீழ்ப்புறம் ஒன்று சேர்ந்து எரிந்து சிறப்பான உந்துசக்தியை வெளிப்படுத்தும். அதிக எடையுடைய செயற்கைக் கோள்களை விண்வெளியில் அதிக உயரத்தில் செலுத்த இவை பயன்படுத்தப்படுகிறது.

திரவ ஆக்சிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் ஆகியவற்றை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தாது. கிரையோஜெனிக் எரிபொருட்கள், புதைபடிவ எரிபொருட்களை விட அதிக உந்துசக்தியை வெளிப்படுத்தும். செலவும் குறைவு.

மேலும் செய்திகள்