முதலை
|முதலை ஊர்வன இனத்தை சேர்ந்தது. இது நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய ஆற்றலை பெற்றுள்ளது. இது 4 கால்களையும், வலுவான வாலையும் கொண்டது. ஊர்வனவற்றிலேயே முதலைகளே நன்கு வளர்ச்சி அடைந்த உடலமைப்பை பெற்றுள்ளன.
மற்ற ஊர்வனவற்றைபோல் அல்லாமல் இவை 4 இதய அறைகள் கொண்டுள்ளன. மேலும் நீரில் நீந்துவதற்கு ஏதுவாக இதன் உடலமைப்பு அமைந்துள்ளது. நீரின் எதிர்ப்பை குறைப்பதற்காக இவை நீந்தும்போது கால்களை மடித்து கொள்கின்றன. மேலும் இவை இரையை வேட்டையாடுவதற்காக வலுவான தாடைகளையும், கூர்மையான பற்களையும் பெற்றுள்ளன. முதலைகள் பதுங்கி தாக்கும் குணமுள்ளவை. இவை பெரும்பாலும் நீர்நிலைகளில் வாழ்வதால் மீன்கள் மற்றும் நீர் அருந்த வரும் மற்ற விலங்கினங்களுமே இதன் உணவுச்சங்கிலியில் முக்கிய இடம் பெறுகின்றன.
குறைந்த வெப்ப ரத்த பிராணியான முதலையால் வெகுநாட்கள் வரை உணவின்றி வாழ இயலும். முதலைகளில் உப்பு நீர் முதலைகள், நன்னீர் முதலைகள் என 2 வகைகள் உள்ளன. இவற்றில் நதி அல்லது குளம் போன்ற நல்ல நீரில் வாழ்பவை நன்னீர் முதலைகளாகும். பெரும்பாலும் உப்புநீர் முதலைகளைவிட நன்னீர் முதலைகள் அளவில் மிக பெரியதாக இருக்கின்றன. முதலைகளின் ஜீரண சக்தி அபாரமானதாகும். இவற்றின் ஜீரண உறுப்பில் சுரக்கும் அமிலங்கள், எலும்பு, கல் போன்ற கடினமான பொருட்களையும் கூட கரைக்க வல்லது. இதன் சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுகள், சில முதலைகள் 100 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. முதலைகள் தோலுக்காகவும், அதன் உடலில் இருந்து கிடைக்கும் பல்வேறு பொருட்களுக்காகவும் வேட்டையாடப்படுகின்றன.