< Back
மாணவர் ஸ்பெஷல்
குழந்தைகளுக்கு தலையில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
மாணவர் ஸ்பெஷல்

குழந்தைகளுக்கு தலையில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

தினத்தந்தி
|
7 April 2023 7:10 PM IST

குழந்தைகள் தலையில் லேசாக அடிபட்டு பின் சரியாகி விடுவதைப் பார்த்திருப்போம். ஆனால் அந்தக் காயம் ஆறியதால், அது முடிந்து விட்டதாக அர்த்தமில்லை. அது மூளைக்குள் ஊடுருவி அழுத்தமாக நினைவை தாக்கி, மறதியை அதிகரிக்கச் செய்கிறதாம்.

பரபரப்பான தேர்வுகள் அரங்கேறும் காலம் இது. 'படி... படி...' என்று பெற்றோரும் பிள்ளைகளை வாட்டி வதைக்கும் இந்த காலத்தில் அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள தேசிய குழந்தைகள் மருத்துவமனை வெளியிட்ட அந்த ஆய்வு முடிவுகளானது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களது ஆய்வு அறிக்கையில் 'குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?' என்பது குறித்த அதிர்ச்சியளிக்கும் விவரங்கள் உள்ளன.

சின்ன வயதில் விளையாட்டின்போது சில குழந்தைகள் தலையில் லேசாக அடிபட்டு பின் சரியாகி விடுவதைப் பார்த்திருப்போம். ஆனால் அந்தக் காயம் ஆறியதால், அது முடிந்து விட்டதாக அர்த்தமில்லை. அது மூளைக்குள் ஊடுருவி அழுத்தமாக நினைவை தாக்கி, மறதியை அதிகரிக்கச் செய்கிறதாம்.

''லட்சக்கணக்கான குழந்தைகள் ஆண்டுதோறும் இப்படி காயங்களுடன் வருகின்றனர். நாமும் சிகிச்சையளித்து குழந்தை குணமாகி விட்டதாக வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம். ஆனால் அப்படி சிகிச்சை பெற்ற குழந்தைகளில் பலர் இந்த பாதிப்புக்கு ஆளாகி விடுகின்றனர்'' என்கிறார் இந்த ஆராய்ச்சியின் தலைமை மருத்துவ நிபுணர் கீத் யீட்ஸ்.

சில குழந்தைகளுக்கு ஓராண்டு வரை இந்த நினைவு மறதி பாதிப்பு நீடிக்கிறதாம். அடிபட்டு சரியாகிவிட்டாலும் அலட்சியமாக இருக்காமல் குழந்தையைக் கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தலைவலி, கோபம், எரிச்சல், சமநிலை குலைதல், படிப்பில் கவனமின்மை, அசதி, மறதி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக குழந்தையை பரிசோதிக்க வேண்டும் என்று அமெரிக்க நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

8 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளே இத்தகைய பாதிப்புக்கு அதிகம் ஆளாகின்றனர். விளையாடும்போது ஏற்படும் காயம், விபத்து போன்ற புறக்காயங்கள் மட்டுமின்றி, கடுமையான வன்முறையை சந்தித்தல், கோரமான விபத்துகள், படுகொலைகளைப் பார்த்தல், பயம், புறக்கணிக்கப்படுதல், அவமதிக்கப்படுதல் போன்ற மன ரீதியான காயங்களும் குழந்தைகளின் மூளைக்குள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

எனவே குழந்தைகளை கவனமாக விளையாட அனுமதியுங்கள். அவர்களின் தலைப் பகுதியில் அதிகம் காயம்படாமல் பார்த்து கொள்ளுங்கள்.

தலைவலி, கோபம், எரிச்சல், சமநிலை குலைதல், படிப்பில் கவனமின்மை, அசதி, மறதி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக குழந்தையை பரிசோதிக்க வேண்டும் என்று அமெரிக்க நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் செய்திகள்