வங்கியும், சுவாரசியமான தகவல்களும்...!
|இந்தியாவில் வங்கிகளின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியை சுருக்கமாக பார்ப்போமா...
1786-ல் தோற்றுவிக்கப்பட்ட தி ஜெனரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் 1770-ல் உருவான பேங்க் ஆப் ஹிந்துஸ்தான், இந்தியாவின் முதல் வியாபார நோக்க வங்கிகள். இந்த இரண்டு வங்கிகளுமே இப்போது செயல்பாட்டில் இல்லை.
ஆரம்பத்தில் இந்தியாவில் பெரும்பாலான வங்கிகள் ஐரோப்பியர்களுக்கு சொந்தமானவையாகவே இருந்தன. 1906 முதல் 1911 ஆண்டுகளில் இந்த நிலைமை மாறியது. முதன்முதலில் இந்தியர்களால் ஆரம்பிக்கப்பட்டு, நிர்வாகம் செய்யப்பட்ட வங்கி, 'தி சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா'. ஆண்டு 1911.
1947-ம் ஆண்டு இந்திய வங்கிகளில் 'ஸ்டேட் பேங்க்' தவிர, மற்றவை தனியார் வங்கிகளாகவே இருந்தன.
1969-ல் 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. 1980-ல் இந்த எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. 2011-ம் ஆண்டு நிலவரப்படி 20 கோடி இந்தியர்கள் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளனர்.
1987-ம் ஆண்டில் இந்தியாவில் ஒரே ஒரு ஏ.டி.எம். எந்திரம் தான் இருந்தது. 2012-ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி 90 ஆயிரம் ஏ.டி.எம்.கள் உள்ளன. 2011-ம் ஆண்டின் மார்ச் வரை இந்தியர்கள் வைத்திருக்கும் டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை 23 கோடி. கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 1 கோடியே 80 லட்சம். இப்போது, அவை மிகப்பெரிய அளவில் உயர்ந்திருக்கும்.
முதல் ரூபாய் நோட்டை பேங்க் ஆப் ஹிந்துஸ்தான் மற்றும் தி ஜெனரல் பேங்க் ஆப் பெங்கால்-பீகார் ஆகியவை வெளியிட்டன. 1861-ல் வந்த பேப்பர் கரன்சி சட்டம், தனியார் வங்கிகள் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை தடை செய்தது. அது அரசின் உரிமை ஆனது.
1935-ம் ஆண்டு பாரத ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் உருவத்துடன் முதலில் 5 ரூபாய் நோட்டு 1938-ம் ஆண்டு ஜனவரியில் வெளிவந்தது. அடுத்து பிப்ரவரியில் 10 ரூபாய் நோட்டும், மார்ச்சில் 100 ரூபாய் நோட்டும் வந்தன. 1938 ஜூனில் 1,000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.
1947-ல் சுதந்திரம் அடைந்ததும் ரூபாய் நோட்டில் ஆறாவது ஜார்ஜ் படம் நீக்கப்பட்டு, அசோக சக்கரம் இடம் பெற்றது.
1996-ம் ஆண்டில் இருந்து மகாத்மா காந்தியின் படம் ரூபாய் நோட்டுகளில் அச்சிட்டு வெளிவர ஆரம்பித்தது.
2016-ம் ஆண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தடைசெய்யப்பட்டு, புதிதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. மேலும் பழைய ரூபாய் நோட்டுகளை காட்டிலும், வண்ணமயமான 10, 20, 50, 100, 200 ரூபாய் நோட்டுகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.