< Back
மாணவர் ஸ்பெஷல்
இரவு நேர விளக்குகளாலும் நீரிழிவு நோய் அபாயமா?
மாணவர் ஸ்பெஷல்

இரவு நேர விளக்குகளாலும் நீரிழிவு நோய் அபாயமா?

தினத்தந்தி
|
23 July 2023 7:24 PM IST

நீரிழிவு நோயால், ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகிறது. இதன் காரணமாக சிறுநீரகம், இதயம் போன்ற அத்தியாவசிய உறுப்புகளில் அழுத்தம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக பல பிரச்சினைகள் தொடங்குகின்றன.

சீனாவின் ஷாங்காயில் உள்ள ஜியாடாங் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆய்வில் இரவில் செயற்கை வெளிப்புற ஒளிக்கும், நீரிழிவு நோய் அபாயத்திற்கும் இடையேயான உறவை அடிக்கோடிட்டு காட்டியுள்ளனர். செயற்கையாக வானத்தை பிரகாசமாக்கும் லைட்டுகள் சர்க்கரை நோயை அதிகப்படுத்துவதாக கண்டறியப்பட்டு உள்ளதாம்..

விளக்குகளால் அதிகம் பாதிக்கப்படும் நபரின் உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகள் மாறுகின்றன. இதனால் தூக்கம் வரவும், காலையில் விழித்துக்கொள்ள உதவும் மெலடோனின் மற்றும் கார்டிகோஸ்டிரோன் ஆற்றல் வித்தியாசமாக செயல்படுகின்றன. இதன் விளைவாக, உடலில் சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கிறது. இரவில் நியான் அல்லது எல்.இ.டி. ஒளியால், குளுக்கோசின் வளர்சிதை மாற்றம் குறைவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இரவில் செயற்கை வெளிப்புற ஒளி விளக்குகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக அலுவலகம், மால் போன்ற இடங்களில் சற்று கூடுதலாகவே இருக்கும். இதுபோன்ற சூழலில் வசிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 28 சதவீதம் அதிகமாக இருக்கிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது உடலானது, எல்.இ.டி. விளக்குகளால் இரவு, பகலுக்கு வித்தியாசம் தெரியாமல் இருப்பதால் பகலில் சுரக்கும் கார்டிசோல் இரவிலும் சுரக்கிறது. இதனால் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கிறது.

உண்மையில், நமது உடல் கடிகாரம் தினசரி தாளத்திற்கு ஏற்ப செயல்படுகிறது. அதன்படி, இருட்டாக இருக்கும்போது, மெலடோனின் உற்பத்தி அதிகரிக்கிறது, இதன் காரணமாக நமக்கு தூக்கம் வரும். காலையில், ஒளியுடன், சுரப்பியின் செயல்பாடு நம்மை எழுப்புகிறது. ஆனால் இரவில் நாம் பிரகாசமான வெளிச்சத்தில் இருக்கும்போது, மெலடோனின் ஹார்மோன் அடக்கப்பட்டு, அதிக சர்க்கரை உருவாவதை ஊக்குவிப்பதாகவும் அந்த ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்