< Back
மாணவர் ஸ்பெஷல்
பிளாஸ்டிக் இல்லாத உலகம்
மாணவர் ஸ்பெஷல்

பிளாஸ்டிக் இல்லாத உலகம்

தினத்தந்தி
|
27 July 2023 9:15 PM IST

பிளாஸ்டிக் பை பயன்பாட்டால் ஏற்படும் பேரழிவை துணிப்பைகள், சணல் பைகள், பனை ஓலைகளால் தயாரிக்கப்பட்ட பொருட்களை மாற்றுப் பொருளாகப் பயன்படுத்துவதன் மூலம் தவிர்க்கலாம்.

இன்றைய வாழ்க்கையில் நாம் நாள்தோறும் பயன்படுத்தும் ஒரு பொருளாக பிளாஸ்டிக் பைகள் மாறிவிட்டன. குறைந்த விலையில் பல்வேறு அளவில் கிடைப்பதாலும், எளிதில் கையாள வசதியாக இருப்பதாலும் பிளாஸ்டிக் பைகளை மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான வணிக நிறுவனங்கள், நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை இந்தப் பைகள் மூலமே விற்பனை செய்துவருகின்றன. ஆனால் இவை சுற்றுச்சூழல், நீர்நிலைகள் மற்றும் மனிதர்கள் மீது பெரும் தாக்குதலை ஏற்படுத்துவதை மறந்து விடுகிறோம். அதிக அளவு பிளாஸ்டிக் பயன்பாட்டினால் சுற்றுச்சூழலில் ஏற்படும் விளைவுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூலை 3-ம் நாள் சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள், `பிளாஸ்டிக் இல்லாத உலகத்திற்காக வாதாடுவது, மறுபயன்பாட்டு மாற்றுகளை ஊக்குவிப்பது' என்பதாகும்.

பிளாஸ்டிக் என்பவை செயற்கை மூலக்கூறுகளால் கட்டமைக்கப்பட்டவை. இவை இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் ராணுவத்தினரால் ரகசியமாகப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், பாலிஎத்திலின் என்ற வேதிப்பொருளால் ஆனது. இவை எளிதில் மட்கும் தன்மையைப் பெற்றிருப்பது இல்லை. ஒரே ஒரு பிளாஸ்டிக் பை மட்கி சிதைவதற்கு பலநூறு ஆண்டுகளுக்கு மேலாகும். மண்ணில் உள்ள சத்துப் பொருட்களுக்கும், மண்வளத்திற்கும் பிளாஸ்டிக் மிகப்பெரிய அளவில் கெடுதல் புரிகின்றது. பிளாஸ்டிக் உறைகளுடன் கூடிய மீதமான உணவுப்பொருட்களை சாப்பிடும் நாய் உள்ளிட்ட விலங்குகளின் உணவுக்குழாயில் இந்த பிளாஸ்டிக் அடைத்து அவற்றின் மரணத்திற்கு வித்திடுகிறது. பிளாஸ்டிக் பைகள் கழிவுநீரில் கலந்து நீர் மாசுபாட்டை ஏற்படுத்தி புதியநோய்கள் பரவவும், சுகாதாரச் சீர்கேடு உருவாகவும் காரணமாகின்றன. ஜெல்லி மீன்கள் போல இருப்பதாக நினைத்து, கடலில் வாழும் உயிரினங்கள் அந்தப்பைகளை விழுங்கிவிடுகின்றன. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் குடல்களில், மூச்சுக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இறந்துவிடுகின்றன. மனிதர்களுக்கு தோல்நோய், புற்றுநோய் ஏற்படவும் பிளாஸ்டிக் பைகள் காரணமாகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக பிளாஸ்டிக் பைகள், பேரிடர் காலங்களில் ஏற்படும் பெருவெள்ளத்தின்போது அந்த வெள்ளநீர் வெளியேறும் பகுதிகளான வடிகால் அமைப்புகளை அடைத்துக் கொள்கின்றன. இது போன்ற காரணங்களால் சுதாரித்துக் கொண்ட உலக நாடுகள் பலவும் 2002-ம் ஆண்டில் மெல்லிய பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டிற்கு தடை விதிக்க ஆரம்பித்தன.

பிளாஸ்டிக் பை பயன்பாட்டால் ஏற்படும் பேரழிவை துணிப்பைகள், சணல் பைகள், பனை ஓலைகளால் தயாரிக்கப்பட்ட பொருட்களை மாற்றுப் பொருளாகப் பயன்படுத்துவதன் மூலம் தவிர்க்கலாம். இயற்கையான பொருளைக் கொண்டு தயாரிக்கப்படும் பைகள் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. அவை எளிதில் மட்கவும் செய்யும். எனவே இந்த நாளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கும் அவற்றின் பயன்பாட்டிற்கும் எதிராக அனைவரிடத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகள், மறுபயன்பாடு செய்யக்கூடிய எளிதில் மட்கும் பொருட்களை பயன்படுத்த ஊக்குவிப்போம்.

மேலும் செய்திகள்