< Back
மாணவர் ஸ்பெஷல்
தேனீயை உண்ணும் சிவப்பு தாடி பறவை
மாணவர் ஸ்பெஷல்

தேனீயை உண்ணும் சிவப்பு தாடி பறவை

தினத்தந்தி
|
29 April 2023 11:13 AM IST

தென்கிழக்கு ஆசியாவின் இந்தோ-மலாயன் பகுதியில் அதிக அளவில் காணப்படும் பறவை இனம், 'தேனீ உண்ணும் சிவப்பு தாடி பறவை'. இதனை ஆங்கிலத்தில் 'Red bearded bee-eater' என்கிறார்கள். அடர்ந்த காடுகளில் காணப்படும் இந்த வகைப் பறவைகளின் விருப்ப உணவாகவும், அதிகம் சாப்பிடும் உணவாகவும் இருப்பது தேனீக்கள்தான். தேனீயை சாப்பிடும் பறவைகள் நிறைய இருந்தாலும், தேனீயின் மீது இந்த பறவைக்கு இருக்கும் அதீத விருப்பம்தான், 'தேனீ உண்ணும் சிவப்பு தாடி பறவை' என்ற சிறப்பு பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. நீண்ட வால்கள், நீளமும் கூர்மையும் கொண்ட அலகு, வண்ணமயமான இறக்கைகளைக் கொண்ட பறவை இதுவாகும். இந்தப் பறவை பச்சை நிற உடலுடனும், முகத்தின் கீழ் பகுதியில் சிவப்பு நிறத்தில் தாடி போன்ற அமைப்பையும் கொண்டிருக்கிறது. இப்பறவைக்கு சிவப்பு தாடி இருக்கும் கீழ் பகுதி சற்று தொங்கிய நிலையில் காணப்படுகிறது. தேனீயைத் தவிர, குளவி, சிறுசிறு பூச்சிகள் போன்றவற்றையும் சாப்பிடும். இந்தப் பறவை உணவைத் தேடுகையில் தன் இணையுடன் சேர்ந்தோ அல்லது தனியாகவோ வேட்டையாடும். தேனீக்களை உண்ணும் மற்ற பறவைகளைப் போல இவை, தனியாக கூடுகளை அமைத்து வசிப்பதில்லை. மாறாக, மற்ற பறவைகளின் கூடுகளை தங்களின் வாழ்விடமாக மாற்றிக்கொள்கின்றன.

சு.தர்ஷினி, 10-ம் வகுப்பு, அரசினர் மேல்நிலைப்பள்ளி, திருவான்மியூர், சென்னை-19.

மேலும் செய்திகள்