பூக்களின் 7 பருவங்கள்
|செடி, கொடிகளில் பூக்கும் பூவை பொதுவாக அனைவரும் 'பூ' என்ற பெயரிலேயே அழைப்பார்கள். ஆனால் ஒரு செடியில் தோன்றுவது முதல் உதிர்ந்து விழுவது வரையில் பூக்கள், 7 பருவங்களை எட்டுவதாகவும், ஒவ்வொரு பருவத்திலும் பூவுக்கு வேறுவேறு பெயர்கள் இருப்பதாகவும் தமிழ் நூல்கள் சொல்கின்றன.
* அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் ஆகியவை பூக்களின் 7 பருவங்களாகும்.
* ஒரு செடி பூக்கும் பருவத்தில் முதலில் தோன்றுவது அரும்பு. இது பார்க்க மிகவும் சிறியதாக இருக்கும்.
* அரும்பு சற்று பெரியதாக வளர்ந்த நிலையை அடையும்போது, அது 'மொட்டு' என்று அழைக்கப்படுகிறது. இந்த பருவத்தில்தான் பூவுக்கு நறுமணம் உருவாகும்.
* மொட்டு சிறிதாக விரியும் நிலையில் இருப்பதை 'முகை' என்பார்கள்.
* மொட்டுகள் முழுமையாக விரியும் நிலையை 'மலர்' என்கிறோம். பேச்சு வழக்கில் அனைவரும் பூ என்று இதனை சொல்கிறார்கள்.
* பூவின் இதழ்கள் நன்றாக விரிந்த நிலையில் இருப்பதை 'அலர்' என்பர். இந்த நிலையில்தான் பூவில் இருந்து மகரந்தம் பரவுகிறது.
* மிகவும் மலர்ந்த பூக்கள் ஓரிரு நாட்கள் கழித்து வாடும் நிலையை 'வீ' என்கிறோம். இதற்கு 'வீழ்தல்' என்று பொருள்.
* பூ வாடி வதங்கி உதிரும் நிலையை எட்டுவது 'செம்மல்' எனப்படும். இந்த நிலை வந்ததும் செடியில் பூ தங்குவது கிடையாது.
மலர் பருவத்திற்கு முன்பாக உள்ள மூன்றும் பூவின் இளமைப் பருவங்கள், மலருக்கு பின்னால் உள்ள மூன்றும் பூவின் முதுமை பருவங்கள் ஆகும்.