< Back
முத்துச்சரம்
எலன் மஸ்க்கை கவர்ந்த அறிவியல் மாமேதை
முத்துச்சரம்

எலன் மஸ்க்கை கவர்ந்த அறிவியல் மாமேதை

தினத்தந்தி
|
16 July 2023 10:29 AM IST

நம்மில் பலருக்கு தாமஸ் ஆல்வா எடிசன், ஐசக் நியூட்டன், மார்கோனி ஆகியோரை தெரிந்த அளவுக்கு, நிக்கோலா டெஸ்லாவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் வாழ்ந்த காலத்திலேயே, அவரை யாரும் அதிகமாக கொண்டாடவில்லை என்பதே நிதர்சனம்.

டெஸ்லா 1856-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ந் தேதி குரோஷியாவில் உள்ள ஸ்மில்ஜன் என்ற இடத்தில் பிறந்தார். மின்னியல், காந்தவியல் ஆகிய துறைகளில் இவர் செய்த புரட்சிகரமான செயல்கள் ஏராளம்.

நிகோலா டெஸ்லா மற்றும் தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோர் மின் பொறியியலின் ஜாம்பவான்கள். அவர்களின் கண்டுபிடிப்புகள், இந்த உலகையே மாற்றியது என்று சொன்னால் அது மிகையல்ல. நிகோலா டெஸ்லா, இன்று பயன்படுத்தப்படும் மாற்றுத்திசை மின்னோட்டத்திற்கும் (ஏ.சி.கரண்ட்), இயந்திரங்களின் சுழலும் காந்தப் புலத்திற்கும் அதீத பங்களித்தார். டெஸ்லாவின் மாற்றுத்திசை மின்னோட்டம் சாத்தியமற்றது எனக் கூறிய எடிசன், தன்னுடைய கண்டுபிடிப்பான நேர் திசை மின்னோட்டம் (டி.சி) அமைப்பே சிறந்தது எனக் கூறினார்.

ஆனால் எடிசன் கண்டுபிடித்த நேரடி மின்னோட்டம், குறுகிய தூரம் மட்டுமே செல்லக்கூடியது. அதுமட்டுமின்றி நேரடி மின்னோட்டத்தில் மின்சாரம் ஒரே திசையில் மட்டுமே பாயும். ஆனால் டெஸ்லா கண்டுபிடித்த மாற்றுத்திசை மின்னோட்டம், நீண்ட தூரத்தை அடையக்கூடியது. மேலும் இதில் மின்னழுத்தங்களை அதிகரிக்கவும், குறைக்கவும் செய்யலாம். இதில் மின்சாரம் குறிப்பிட்ட இடைவெளியில் திசையையும் மாற்றிக்கொள்ளும்.

இன்று நம் வீடுகளுக்கு பல கிலோமீட்டர் தூரத்தில் இருந்து மின்சாரம் அனுப்பப்படுவது, டெஸ்லாவின் மாற்றுத்திசை மின்னோட்டம் (ஏ.சி கரண்ட்) முறையில் தான். இந்த முறையை பயன்படுத்துவதனால் மின்சார இழப்பு பெருமளவில் குறைகிறது. தவிர எவ்வளவு தொலைவிற்கு வேண்டுமானாலும் மின்சாரத்தை கொண்டு செல்ல முடியும். ஆனால் தான் கண்டுபிடித்த நேரடி மின்னோட்டம் தான் சிறந்தது என்று எடிசன் வலியுறுத்தியதன் காரணமாக இருவர் இடையே பிரிவு ஏற்பட்டது. இருப்பினும் தனியாளாக முயற்சி செய்ய ஆரம்பித்தார்.

டெஸ்லா அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சியில், முதல் மாற்றுத்திசை (ஏ.சி) மின்னோட்டத்தைக் கொண்டு இயங்கும் மின்மாற்றி ஒன்றை வடிவமைத்தார். அடுத்த ஆண்டு, நியூயார்க்கின் பஃபலோ நகரத்திற்கு இதன்மூலம் மின்சக்தி அளிக்கப்பட்டது. இந்த சாதனை உலகம் முழுவதும் பரவலாகப் பேசப்பட்டது. டெஸ்லாவின் மாற்றுத்திசை மின்னோட்ட (ஏ.சி) அமைப்புகள், இறுதியில் அமெரிக்க பொறியாளர் மற்றும் தொழிலதிபர் ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸின் கவனத்தை ஈர்த்தது. அவர் நீண்டதூர மின்சாரத்தை நாட்டிற்கு வழங்குவதற்கான தீர்வைத் தேடினார். டெஸ்லாவின் கண்டுபிடிப்புகள் இந்த இலக்கை அடைய உதவும் என்று நம்பிய அவர், அதற்கான காப்புரிமைகளை வாங்கினார்.

இந்நிலையில் 1883-ம் ஆண்டு அவர் தனது முதல் மின்மோட்டாரை அறிமுகப்படுத்தினார்.

இந்த மோட்டார் தான் தற்போது டுவிட்டர் உரிமையாளர் எலன் மஸ்க்கின், டெஸ்லா கார்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அறிவியல் மேதை டெஸ்லாவின் நினைவாகவே, எலன் மஸ்க் தன்னுடைய கார் நிறுவனத்திற்கு 'டெஸ்லா' என்று பெயரிட்டார்.

உலகமே, தாமஸ் ஆல்வா எடிசனை கொண்டாடிக்கொண்டிருக்க, எலன் மஸ்க் மட்டும் எடிசனையும் மிஞ்சக்கூடிய அறிவியல் மாமேதையை கொண்டாடத் தொடங்கினார். எடிசனின் புகழில் இருண்டு போயிருந்த டெஸ்லாவின் ஆராய்ச்சிகளையும், அவரது அறிவியல் கோட்பாடுகளையும் தூசி தட்டி, அதை தனக்கானதாக மாற்றிக்கொண்டார். அப்படி உருவானதுதான், டெஸ்லா பிராண்ட் கார்கள்.

18-ம் நூற்றாண்டில் 'பெயிலியர்' மாடல் மின்னோட்டத்தில்தான், இவை இன்று 'சக்சஸ்' அடைந்திருக்கின்றன.

எலன் மஸ்க், டெஸ்லாவை கொண்டாடுவதற்கு இன்னும் பல காரணம் இருக்கின்றன. வயர்லெஸ் முறையில் கடத்தும் 'காயில்' என்ற சாதனத்தையும் டெஸ்லா கண்டுபிடித்தார். இதன் மூலமாக அதிக மின் அழுத்தம் கொண்ட மின்சாரத்தை உருவாக்க முடியும். இதனைக்கொண்டு ரேடியோ அலைகளை குறிப்பிட்ட அதிர்வெண்ணில் அனுப்பவும், பெறவும் முடியும். இது இன்றுவரை வானொலி, தொலைபேசி, செல்போன் மற்றும் தொலைக்காட்சி பயன்பாட்டில் செயல்படுத்தப்படுகிறது.

மார்க்கோனி, ரேடியோவை கண்டுபிடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே, குறுந்தூர ரேடியோ தொழில்நுட்பத்தில் சிறிய படகை ரிமோட் மூலம் செலுத்திக் காட்டியவர் டெஸ்லா.

நோபல் பரிசு பெற்றவர் என்பதால், மார்கோனியை ரேடியோவின் கண்டுபிடிப்பாளராக இன்று பலருக்கும் தெரியும். ஆனால் வெகு சிலருக்கே டெஸ்லாவையும், ரேடியோவின் ஆரம்பம் அவருடையது என்பதும் தெரியும்.

அதுமட்டுமல்ல... உருப்பெருக்கி டிரான்ஸ்மிட்டர், டெஸ்லா டர்பைன், நிழல் வரைபடம், நியான் விளக்கு, நீர் மின் மோட்டார், ரேடியோ கட்டுப்பாட்டு படகுலேசர் கருவி, ரேடார், கம்பியில்லா தொலைத்தொடர்பு என பல முன்னோடி கண்டுபிடிப்புகளுக்கு அவரே சொந்தக்காரர். அவர் 300-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை வைத்திருந்தார். அதனால்தான் என்னவோ, எலன் மஸ்கின் ஆர்வமும், ஆவலும் மறைந்த டெஸ்லாவை சுற்றியே நிழலாடுகிறது.

டெஸ்லாவின் அருங்காட்சியகம், செர்பியா நாட்டில் பெல்கிரேட் என்ற இடத்தில் உள்ளது. இங்கு அவரது ஓவியங்கள், புகைப்படங்கள் உள்பட பல்வேறு ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இன்று அவரது பெயரை விமானநிலையத்திற்கும், நாணயங்களிலும் சூட்டியுள்ளனர்.

மேலும் செய்திகள்