ஆசியாவையே வியக்க வைத்த 'மதுரை தடகள வீரர்'..!
|கடும் மழையில் போட்டிகள் நடந்தது. அங்கு பதக்கம் பெற்றது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். ஏனென்றால், இதுவரை கொலம்பியாவில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்காத நிலையில் நான் பங்கேற்று 16.15 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை எனதாக்கி கொண்டேன்.
ஆசிய தடகள சம்மேளனத்தின் சிறந்த வீரராக 20 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் தேர்வாகி உள்ளார். அவர் வேறு யாரும் இல்லை. மதுரையை சேர்ந்த செல்வபிரபு. டிரிபிள் ஜம்ப் (மும்முறை தாண்டுதல்) விளையாட்டில் சாதித்ததன் விளைவாகவே, அவருக்கு அந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஆசிய தடகள சம்மேளனத்தின் 50-வது ஆண்டு விழா தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்தது. அதில் சிறந்த வீரருக்கான விருதினை பெற்று இருக்கிறார், செல்வபிரபு. இந்த விருதை பெறும் முதல் தமிழக வீரர் என்ற பெருமையும் அவரையே சாரும்.
தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மேலெழுந்து வர வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவரை பாராட்டி இருக்கிறார். செல்வபிரபுவின் சாதனைகள் குறித்து அவரிடம் கேட்டபோது அளித்த சுவாரசிய பதில்கள்.
''என்னுடைய சொந்த ஊர், மதுரை மாவட்டம் கொடிமங்கலம் கிராமம். அப்பா திருமாறன், விவசாயி. அம்மா சுதா. அண்ணன் ராஜபிரவீன், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்து வருகிறான். நான், திருச்சியில் உள்ள கல்லூரியில் ஆங்கில இலக்கியம் 2-ம் ஆண்டு படித்து வருகிறேன்.
சிறுவயதில் இருந்து விளையாட்டில் ஆர்வம் இருந்தது, அதனால் சாதித்தேன் என எளிதாக கூறி விட முடியாது. எங்களுக்கு சொந்தமான இடத்தில் அப்பா காய்கறிகள் எதையாவது பயிரிட்டிருப்பார். அந்த தோட்ட பணிகளுக்காக குடும்பத்துடன் செல்லும்போது, பெற்றோரின் பேச்சை கேட்காமல் அங்கும் இங்கும் ஓடி குதித்துக் கொண்டிருப்பேன். அது தான் என்னை சிறந்த தடகள வீரராக மாற்றி உள்ளது.
விளையாட்டில் எப்போதும் எனக்கு ஆர்வம் உண்டு. ஆனால், அது என்னுடைய வாழ்க்கையாக மாறும் என நினைக்கவில்லை. நான், 5-ம் வகுப்பு படித்தபோது, என் ஆசிரியர்கள் சிலர் நான் பள்ளியில் அங்கும் இங்கும் ஓடுவதை பார்த்து விட்டு, இவனை ஏதாவது ஒரு விளையாட்டில் சேர்த்து விடுங்கள் என பெற்றோரிடம் கூறினர். அதன்படியே என் பெற்றோரும் என்னை தடகளத்தில் சேர்த்தனர். வீட்டின் அருகில் வசித்து வந்த ஜெயந்தன் தான் என்னுடைய முதல் பயிற்சியாளர். அவர் தான் எனக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்தார். அவரின் அறிவுரைப்படி என்னுடைய அப்பா தினமும் காலை 5 மணிக்கு என்னையும், என் அண்ணனையும் மோட்டார் சைக்கிளில் அமர வைத்து ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு அழைத்து செல்வார். சிறுவன் என்பதால், போகும்போதே நான் வழியில் தூங்கி விடுவேன். ஆனால், மைதானத்திற்கு சென்ற பின்னர் என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. என்னுடைய கால்கள், பயிற்சியாளர்களின் விசில் சத்தத்திற்கு மட்டுமே ஓடி நிற்கும்'' என்று சிறுவயது நினைவுகளை புரட்டிப்பார்க்கும் செல்வபிரபு தடகளத்தில் முதல் பரிசு வென்றதை பகிர்ந்து கொள்கிறார்.
''நீளம் தாண்டுதல் போட்டியில் மாவட்ட அளவில் கலந்து கொண்டு முதல் பரிசாக ரூ.6 ஆயிரம் பெற்றேன். அதுவே என்னுடைய முதல் பரிசு. இன்றளவும் மறக்க முடியாதது. அதன் பின்னர் 8 மாதம் பயிற்சி எடுத்தேன்.
நெல்லையில் நடந்த போட்டியில் 300-க்கும் மேற்பட்டவர்களுடன் கலந்து கொண்டு ஓடியதில் முதல் இடத்தை பெற்றேன். அந்த வெற்றியின் பலனாக, திருச்சியில் உள்ள அரசு விடுதியில் தங்கி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு பள்ளி படிப்பை தொடர்ந்தேன். 11-ம் வகுப்பிலும் இதுபோல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று, மீண்டும் திருச்சியில் தங்கி படித்தேன்'' என்பவர், அங்குதான், டிரிபிள் ஜம்ப் எனப்படும் மும்முறை தாண்டுதல் விளையாட்டில் ஆர்வம் வந்தது என்கிறார்.
''நான் ஓடும் ஸ்டைலை பார்த்த பள்ளி பயிற்சியாளர் சீனிவாசன், என்னை தேசிய அளவில் நீளம் தாண்டுதல் மற்றும் டிரிபிள் ஜம்ப் போட்டிகளில் கலந்து கொள்ள கூறினார். அவரது வழிகாட்டுதலின்படி முதல் முறையாக டிரிபிள் ஜம்ப் செய்து தமிழக அளவில் முதல் இடம் பிடித்து, தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வானேன். அதில் வென்ற பிறகு, தேசிய போட்டிகளுக்கு என்னை பக்குவப்படுத்திக் கொண்டேன்.
அதன் பயனாக, 2018-ல் பஞ்சாப்பில் நடந்த போட்டியில் தேசிய அளவில் 3-ம் இடம் பிடித்தேன். அந்த வாரத்தில் மும்பையில் நடந்த போட்டியிலும் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம் பெற்றேன். டிரிபிள் ஜம்ப், புதுவிதமான விளையாட்டு, அதில் பல சவால்கள் இருக்கிறது. மணலில் குதிக்கவில்லை என்றால் கால் உடைவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. உலகில் கிட்டத்தட்ட 36 விளையாட்டுகள் இருக்கிறது. அதில் அதிக சவால் நிறைந்த போட்டியாக டிரிபிள் ஜம்ப் இருக்கிறது. அதனால் தான் எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. அதன் பின்னர் என்னுடைய விளையாட்டாக டிரிபிள் ஜம்ப் போட்டியை தேர்வு செய்து, அதனை நோக்கி பயணிக்கிறேன்'' என தன்னை கவர்ந்த டிரிபிள் ஜம்ப் பற்றி உயர்வாக பேசுபவர், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் நடக்கும் எல்லா போட்டிகளிலும் தவறாமல் கலந்து கொள்கிறார். அதற்கான காரணத்தை அவரே சொல்கிறார்.
''இந்தியாவில் எந்த மாநிலத்தில் போட்டிகள் நடந்தாலும் அதில் நான் கலந்து கொள்வேன். சர்வதேச அளவிலான போட்டியிலும் கலந்து கொள்வேன். பரிசு கிடைக்கிறதோ, இல்லையோ அதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால், கலந்து கொள்ளும் போட்டிகளில் இருந்து சின்ன சின்ன நுணுக்கங்களை, வெற்றியாளர்களின் பயிற்சிகளை கற்று கொள்வேன். மற்ற இடங்களில் இருந்து வருபவர்கள் எவ்வாறு பயிற்சி மேற்கொள்கிறார்கள், அதனை மைதானத்தில் எப்படி வெளிப்படுத்துகிறார்கள், எனக்கும், அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை எல்லாம் கவனித்துக் கொள்வேன்'' என்பவர், சர்வதேச அரங்கிலும் பல வெற்றிகளை பதிவு செய்திருக்கிறார்.
''2021-ம் ஆண்டு தேசிய அளவில் நடந்த போட்டியில் வெள்ளிப்பதக்கம், கேலோ இந்தியா ஆண்கள் பிரிவில் தங்கம் வென்றேன். இந்த அனுபவங்களை வைத்து கடந்த ஆண்டு கொலம்பியாவில் நடந்த 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டேன். அதில் வெள்ளிப்பதக்கம் பெற்றேன்.
அந்த போட்டியில் வெற்றி பெற்றதை விட கலந்து கொண்ட அனுபவம் புதுவிதமாக இருந்தது. அதில், பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து 30 மணி நேர விமான பயணத்திற்கு பின்னர் அங்கு சென்றேன். கடும் மழையில் போட்டிகள் நடந்தது. அங்கு பதக்கம் பெற்றது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். ஏனென்றால், இதுவரை கொலம்பியாவில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்காத நிலையில் நான் பங்கேற்று பதக்கம் வென்றேன். அந்த போட்டியில், 16.15 மீட்டர் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை எனதாக்கி கொண்டேன். அந்த போட்டியில் என்னுடன் ஜமைக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்றனர்.
அதன்பின்னர், கியூபாவில் நடந்த சர்வதேச போட்டியில், ஆண்கள் பிரிவில் கலந்து கொண்டு, 4-வது இடத்தை பெற்றேன். அது வயது வித்தியாசமின்றி நடந்த போட்டியாகும். என்னை விட வயதில் மூத்தவர்களும் கலந்து கொண்டனர்.
கியூபாவில் தங்கி 3 மாதங்கள் கடுமையாக பயிற்சி எடுத்தேன். அந்த அனைத்து பயிற்சிக்கும் என்னுடைய பெற்றோர் தான் பணம் செலவு செய்தார்கள். என்னுடைய லட்சியத்திற்காக விவசாயம் செய்து வந்த 2 ஏக்கர் நிலத்தையும் என் பெற்றோர் விற்று விட்டனர். கியூபாவில் தங்கி இருந்த நாட்களில், ஒரு வேளை சாப்பாட்டிற்காக பல ஆயிரங்களை செலவழிக்க நேரிட்டது. இருப்பினும் எந்தவித தயக்கமும் இன்றி எனக்கான செலவுகளை என்னுடைய பெற்றோர் செய்தனர்.
தந்தையின் தியாகத்தை உலகத்திற்கு காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் என்னுடைய 'ஜெர்சி'யில் என் தந்தையின் பெயரான 'திருமாறன்' என்பதை போட்டிருக்கிறேன். எனக்காக பல இடங்களில் கடன் வாங்கி, பாதாம், பிஸ்தா என எல்லா பொருட்களையும் ஊரில் இருந்து வாங்கி அனுப்புகிறார். கடுமையான பயிற்சி என்பதால், 3 மாதத்திற்கு ஒரு முறை என்னுடைய ஷூக்களை மாற்ற வேண்டும். அதனையும் என் தந்தை தான் வாங்கி அனுப்புகிறார்'' என ஆனந்த கண்ணீர் சிந்தும் செல்வபிரபு, இந்த தியாகங்களை எல்லாம் தன்னுடைய சாதனை இலக்கு மூலமாக ஈடுசெய்ய இருக்கிறார்.
''சமீபத்தில் கிரீஸ் நாட்டில், உலக தடகள வீரர்களின் காண்டினெண்டல் தொடர் நடைபெற்றது. இதில், டிரிபிள் ஜம்ப் ஜூனியர் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற நான், 16.79 மீட்டர் தூரத்திற்கு தாண்டி தங்கம் பெற்றேன். இறுதிப் போட்டியில் மூன்று முறை எந்த வித தவறும் இன்றி துல்லியமாக தாண்டினேன். அதில் இரண்டாவது முயற்சியின் போது, 16.79 மீட்டர் தூரத்திற்கு தாண்டி தங்கத்தை என் வசப்படுத்தினேன். இதன் மூலம், ஜூனியர் பிரிவில் டிரிபிள் ஜம்பில் தேசிய அளவிலான பழைய சாதனையை தகர்த்து, புதிய இலக்கை நிர்ணயித்திருக்கிறேன்.
2023-ம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த ஜூனியர் தடகள பிரிவு வீரராக தேர்வு செய்யப்பட்டு, விருதினை பெற்றிருக்கிறேன். இதுபோல், உலக அரங்கில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
அதற்காக, ஒலிம்பிக் போட்டிகளுக்காக, பெங்களூருவில் உள்ள அகாடமியில் தங்கி சிறப்பு பயிற்சி பெற்று வருகிறேன். படிப்பிற்கு போக, ஒரு நாளைக்கு 7 மணி நேரம் பயிற்சி பெறுகிறேன். இதுதவிர நீச்சல், உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என பல பயிற்சிகள், சிறப்பு பயிற்சியாளர்கள் மூலம் அளிக்கப்படுகிறது.
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு, இந்தியாவிற்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பதக்கங்களை பெற வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு. அதனை நோக்கிதான் பயணிக்கிறேன். கடுமையாக முயற்சி செய்கிறேன். கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என கூறி விடைபெற்றார் செல்வபிரபு திருமாறன்.