< Back
முத்துச்சரம்
மாநிலத்திலேயே மிகவும் சிறப்பான... காயகல்பம் விருது பெற்ற அரசு சுகாதார நிலையம்..!
முத்துச்சரம்

மாநிலத்திலேயே மிகவும் சிறப்பான... 'காயகல்பம்' விருது பெற்ற அரசு சுகாதார நிலையம்..!

தினத்தந்தி
|
9 July 2023 1:31 PM IST

வானுயர மரங்கள், எங்கு பார்த்தாலும் பூத்து குலுங்கும் செடி, கொடிகள், கண்ணுக்கு எட்டிய தூரம் கான்கிரீட் கற்கள், சுவர்களில் வண்ண ஓவியங்கள், சுதந்திரமாக பறந்து திரியும் பட்டாம் பூச்சிகள், கீச், கீச் என கூச்சலிடும் பறவை சத்தம். இவையெல்லாம் நமக்கு ஒரு பொழுதுபோக்கு சோலைக்குள் பிரவேசித்தது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்துகின்றன. ஆம்! இதுவெல்லாம் இருப்பது, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் என்பது நமக்கெல்லாம் ஆச்சரியம் அளிக்கக்கூடியதுதான்.

நுழைவு பகுதி...

நுழைவு பகுதி...

இந்த சோலைவனம் வேறு எங்கும் இல்லை. சேலம் மாவட்டத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பேளூரில்தான் உள்ளது. இங்கு வருவோருக்கு மருத்துவ உதவி மட்டும் வழங்கப்படுவது இல்லை. அத்துடன் மனதுக்கும் நிம்மதி தரும் சூழலை கொண்டுள்ளது. இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள மரங்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும்பாலும் வளர்ந்து நிற்கின்றன. மொத்தத்தில் என்றும் இளமையாக காட்சி அளிக்கிறது இந்த ஆரம்ப சுகாதார நிலையம்.

அதற்காகத்தான், பேளூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு காயகல்பம் என்ற விருதுடன் ரூ.15 லட்சத்தையும் அறிவித்து கவுரவப்படுத்தி இருக்கிறது தேசிய சுகாதார குழுமம். உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படும் இந்த சுகாதார குழுமம், இந்தியா முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டமைப்புகள், நோயாளிகளுக்கான மருத்துவ வசதிகள், அங்குள்ள சூழ்நிலைகளை ஆராய்ந்து ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த மாநில அளவில் சிறந்ததாக தேர்வு செய்து அதற்கு முதல் பரிசும், விருதும் வழங்கி உற்சாகப்படுத்தி வருகிறது.

விருதுடன் பொன்னம்பலம்

விருதுடன் பொன்னம்பலம்

அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள 424 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 2022-2023-ம் ஆண்டுக்கான 'காயகல்பம்' விருதுக்கான முதல் பரிசை மாநில அளவில் இந்த பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பெற்றுள்ளது.

இதுதவிர கடந்த ஆண்டு (2022) பேளூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான தேசிய தரச்சான்றிதழையும் இந்த சுகாதார நிலையம் பெற்றுள்ளது சிறப்புக்குரியது. இந்த 2 விருதுகளுக்கும் காரணகர்த்தாவாக விளங்கியவர், ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பொன்னம்பலம். அவரை பற்றிய தகவல்கள் எல்லாம் நமக்கு ஆச்சரியத்தை தருகின்றன. அதனை அவரே கூற கேட்போம்.

"எனது சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஆத்தூர். பெற்றோர் பொன்.சிதம்பரம்-உமா. மனைவி விஜயலட்சுமி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை டாக்டராக உள்ளார். மகள் ஆராதனா 7-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

சேலம் மோகன்குமார மங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் 1994-2000-ம் ஆண்டுகளில் மருத்துவ படிப்பை முடித்தேன். 1-11-2006-ம் ஆண்டு வாழப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி மருத்துவராக பணியில் சேர்ந்தேன். 2015-ம் ஆண்டு வரை 9 ஆண்டுகள் வாழப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்தேன்.

பணியில் சேர்ந்த நாட்கள் முதல் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்ப்பது மட்டும் நமது வேலை அல்ல. வரும் நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரியில் அனைத்து கட்டமைப்புகளையும் செய்து கொடுக்க வேண்டும். அவர்கள் மருந்து, மாத்திரைகளை வாங்கி விட்டு சிறிது நேரம் இங்குள்ள மர நிழலில் இளைப்பாறினாலே, பாதி நோய் தீர்ந்து விடும் என்பதை உணர்ந்த நான், அதற்கான சூழலை அங்குள்ள மருத்துவ குழுவுடன் சேர்ந்து உருவாக்கினேன். அதற்கு பயனாக 2011-ம் ஆண்டு வாழப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தரச்சான்று கிடைத்தது.

அங்கிருந்து 2015-ம் ஆண்டு சேலம் மாவட்டம் தும்பல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பணிமாறுதலாக சென்றேன். அங்கும் இயற்கை சூழலை பரவ செய்ததால் தும்பல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 2017-ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான 'காயகல்பம்' விருது வழங்கப்பட்டதுடன், இதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய என்னை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த மருத்துவருக்கான விருதையும் வழங்கி அரசு கவுரவித்தது. இந்த விருதுகள் என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்தியது'' என்பவர், சமீபத்திய விருது குறித்து பேச ஆரம்பித்தார்.

''2019-ம் ஆண்டு பேளூர் வட்டார மருத்துவ அலுவலராக பணிமாறுதலாகி வந்தேன். இங்கு மருத்துவ வசதிகள் போதுமானதாக இருந்தது. ஆனாலும் அதனை இன்னும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். எனது முயற்சிக்கு மாவட்ட, மாநில சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். அதனால் மருத்துவ கட்டமைப்புகளையும், இயற்கை சூழலையும் மேம்படுத்த முடிந்தது.

'செல்பி' ஸ்பாட்டாக மாறிய தாமரை குளம்

'செல்பி' ஸ்பாட்டாக மாறிய தாமரை குளம்

சில நல்ல உள்ளங்களின் துணையுடன், வளாகத்தில் மண் தரைக்கு பதிலாக சிமெண்டு பேவர் பிளாக் கற்களை பதித்தோம். ஆஸ்பத்திரி உள்ளே நுழைந்தவுடன் நுழைவு வாயிலின் வலது பகுதியிலேயே தலைமை மருத்துவர் இடமும், ஆஸ்பத்திரி நிர்வாக அலுவலகமும் உள்ளது. அதற்கு அருகிலேயே தாமரை குளம் ஒன்றை அற்புதமாக உருவாக்கினோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட அவ்வளவு அருமையாக அது அமைந்துள்ளது. அது தற்போது நோயாளிகளின் 'செல்பி பாயிண்டாக' அமைந்து விட்டது.

ஒரு உயர்தர ஆஸ்பத்திரிக்கு சென்றால், நுழைவு வாயில் அருகிலேயே எந்தெந்த பகுதியில் எந்தெந்த மருத்துவ பிரிவுகள் உள்ளன என்பதை காட்டும் வகையில் பெயர் பலகை இடம் பெற்று இருக்கும். அதேபோன்று வழிகாட்டும் பெயர் பலகை ஒன்றை நுழைவு வாயிலின் அருகிலேயே வைத்தோம்'' என்பவர், சித்த மருத்துவத்தையும், மூலிகை மரங்களையும் மீட்டெடுக்கும் நோக்கில் மூலிகை பூங்கா ஒன்றை பராமரிக்கிறார்.

மூலிகை தோட்டம்

மூலிகை தோட்டம்

'நுழைவு வாயிலின் இடது புறம் சித்த மருத்துவ பிரிவு உள்ளது. அங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட சித்த மருத்துவ செடி, கொடிகள் நட்டு பராமரித்து வருகிறோம். அதன் அருகிலேயே 8 போட்டு உடற்பயிற்சி செய்வதற்கான இடத்தை உருவாக்கினோம். அதற்கு அடுத்ததாக தனி கட்டிடத்தில் ஆய்வகம் உள்ளது. அதன் அருகிலேயே பேறுகால பெண்களுக்கான சிகிச்சை முறைகள் தனி பிரிவாக செயல்படுகிறது. அங்கும் அறுவை சிகிச்சை அரங்கு, பேறுகாலத்துக்கு முந்தைய பராமரிப்பு, பிந்தைய பராமரிப்புக்கு என தனித்தனி வார்டுகள் உள்ளன. பேறுகாலம் முடிந்து 3 நாட்கள் கழித்து குழந்தையையும், தாயையும் சுகாதார நிலையம் சார்பிலேயே தாய், சேய் நல ஊர்தி மூலம் ஊட்டச்சத்து பெட்டகம் கொடுத்து வீடுகளுக்கே அனுப்பி வைக்கிறோம். இதனால் பேளூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பேறுகாலத்துக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

8 வடிவ நடைப்பயிற்சி களம்

8 வடிவ நடைப்பயிற்சி களம்

அதன் அருகிலேயே உடற்பயிற்சிக்கான இடம் உள்ளது. சிறு, குழந்தைகள் விளையாடுவதற்கு சறுக்கு, ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர சித்த மருத்துவ பிரிவை பொறுத்தவரையில் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளும் சரி, அவர்களது உறவினர்களும் சரி சித்த மருத்துவத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையிலும், அவர்களுக்கு சித்த மருத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சித்த மருத்துவ செடி, கொடிகள் அடங்கிய தோட்டம் உருவாக்கினோம்.

சுகாதார நிலையத்திற்குள் அமைந்த உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு திடல்

சுகாதார நிலையத்திற்குள் அமைந்த உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு திடல்

பல்வேறு இடங்கள், காடுகளில் தேடி அலைந்து அந்த தோட்டத்தை உருவாக்கி உள்ளோம். ஆஸ்பத்திரிக்கு வருவோர் சித்த மருத்துவ செடியை பார்ப்பதுடன், சம்பந்தப்பட்ட நோய்க்கு இதனை பயன்படுத்தலாம். நமது வீடுகளில் வளர்க்கலாம்.

எந்தெந்த நோய்க்கு எந்த சித்த மருத்துவத்தை பயன்படுத்தலாம் உள்ளிட்ட விவரங்களையும் அங்கு பெரிய பலகையில் படங்களுடன் எழுதி வைத்துள்ளோம். அந்த செடியின் அருகிலேயே என்ன வகை செடி, அதனால் என்னென்ன நோய்கள் தீரும் என்பது உள்ளிட்ட விவரங்களையும் அதில் எழுதி வைத்துள்ளோம். இதுதவிர யோகாசனம் குறித்த விவரங்களையும் படங்களுடன் விரிவாக ஆஸ்பத்திரிக்கு வருவோர் அறிந்து கொள்ளும் வகையில் வைத்துள்ளோம்'' என்று உற்சாகமாக பேசிவிட்டு, விடைபெற்றார்.

மேலும் செய்திகள்