< Back
முத்துச்சரம்
ஐதராபாத்தில்... தமிழர் தூண்டுதலில் உருவான சோலார் சைக்கிளிங் சாலை..!
முத்துச்சரம்

ஐதராபாத்தில்... தமிழர் தூண்டுதலில் உருவான சோலார் சைக்கிளிங் சாலை..!

தினத்தந்தி
|
30 Sept 2023 2:51 PM IST

மதுரையை பூர்வீகமாக கொண்ட சந்தான செல்வன், இப்போது தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மக்களின் விருப்பமான ‘சைக்கிள் மேயர்’. சைக்கிளிங் பிரியராக, ஐதராபாத் நகருக்குள் நுழைந்து, சைக்கிளிங் ஆர்வத்தை அங்கிருப்பவர்களுக்கு பகிர்ந்தளித்து, இப்போது அங்கு மிகப்பெரிய மாற்றத்தையே உருவாக்கி இருக்கிறார்.

ஆம்..! ஐதராபாத்தில், சைக்கிள் ஓட்டுவதற்காகவே 23 கிலோமீட்டர் நீளமுள்ள சோலார் சைக்கிளிங் பாதை, அமைக்கப்பட்டிருக்கிறது. இது தெலுங்கானா மாநிலத்தின் புதுமை புராஜெக்ட் என்றாலும், இதற்கு அடித்தளமிட்டது, நம்ம மதுரைக்காரர் சந்தான செல்வன்தான்.

சைக்கிள் மேயர், சைக்கிள் புரட்சியாளர்... என பல அடையாளங்களை கொண்டிருக்கும் சந்தான செல்வனுடன் சிறு நேர்காணல்...

* மதுரைக்காரர், ஐதராபாத்தில் செட்டில் ஆனது எப்படி?

ஐ.டி. துறைதான், பெங்களூரு, சென்னை, ஐதராபாத், அமெரிக்கா என புதுப்புது இடங்களுக்கு என்னை அழைத்து செல்கிறது.

* சைக்கிளிங் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

சென்னையில் பணிபுரிந்த காலங்களில் சைக்கிள் பயணங்கள் மீது ஆர்வம் ஏற்படவே 'டபிள்யூ.சி.சி.ஜி.' (வீ ஆர் சென்னை சைக்கிளிங் குரூப்) குழுவில் இணைந்து சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தேன். அங்குதான் சைக்கிளின் அருமையை உணர்ந்து கொண்டேன். சென்னையில் இருந்து ஐதராபாத்திற்கு பணி மாறுதல் ஆனதும், அங்கும் சைக்கிள் பயணங்களை தொடர ஆரம்பித்தேன்.

* அது என்ன 'சைக்கிள் மேயர்' பொறுப்பு?

ஆம்ஸ்டர்டாம் நகரை சேர்ந்த சைக்கிளிங் அமைப்பு ஒன்று, உலகெங்கிலும் வாழும் சைக்கிள் பிரியர்களை கவுரவிக்கும் வகையில் 'சைக்கிள் மேயர்' என்ற பட்டத்தை வழங்கி வருகிறது. இவர்கள் அரசாங்கம், ஊடகம், தன்னார்வலர் அமைப்பு மற்றும் மக்களை 'சைக்கிள்' என்ற மையப்புள்ளியில் ஒருங்கிணைக்கும் நபர்களாகவும், சைக்கிள் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆர்வத்தை தூண்டக்கூடியவர்களாகவும் செயலாற்ற வேண்டும். அந்த பணிகளைதான் நான் செய்து வருகிறேன்.

* இதுவரை என்னென்ன பணிகளை மேற்கொண்டு வருகிறீர்கள்?

ஆரம்பத்தில் சைக்கிள் ஓட்டுவதற்கான விழிப்புணர்வுகளை மேற்கொண்டோம். ஆர்வமுள்ளவர்களை, சைக்கிளிங் பயணங்களுக்கு அழைத்து சென்றோம். உடற்பயிற்சிக்கு மட்டுமல்ல, அன்றாட பயணங்களுக்கு சைக்கிளை பயன்படுத்த சொல்லி, விழிப்புணர்வு செய்தோம். நிஜ வாழ்க்கையில் அதை செய்தும் காண்பித்தோம். இப்படியாக, சைக்கிள் பிரியர்களை கொண்டு வலுவான சமூகத்தை கட்டமைக்க முடிந்தது. கிட்டத்தட்ட 10 ஆயிரம் சைக்கிளிங் பிரியர்கள், எங்களுடன் இணைந்திருக்கிறார்கள். எங்களது எண்ணம், செயல்... எல்லாவற்றிலும் சைக்கிளிங் நிறைந்திருக்கிறது.

* சைக்கிளிங் உலகில் நீங்கள் செய்த புரட்சி என்ன?

சைக்கிள் பயணத்தின்போது விபத்தில் சிக்கி இறந்த சக தோழருக்கு ஆதரவாக, 2021-ம் ஆண்டு இறுதியில், (ஹெச்.சி.ஆர்-1) என்ற புரட்சி சைக்கிள் பயணத்தை முன்னெடுத்தோம். சாலைகளில், சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் உரிய பாதுகாப்பு வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இனிவரும் காலங்களில் அமைக்கப்பட இருக்கும் சாலைகளில் சைக்கிள் பாதைகள் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அந்த புரட்சி பயணம் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சைக்கிள் ஆர்வலர்கள், எங்களோடு அந்த புரட்சி பயணத்தில் கலந்து கொண்டனர். அதேபோல, 2022-ம் ஆண்டும் மற்றொரு புரட்சி பயணத்தை முன்னெடுத்தோம். இதில் 3 ஆயிரம் பேர் எங்களுடன் இணைந்து சைக்கிள் ஓட்டினர். இந்த புரட்சி பயணத்தின் விளைவாக, எங்களுடைய கோரிக்கைகள் தெலுங்கானா அரசின் முக்கிய அதிகாரிகள் மற்றும் முக்கிய நபர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. எங்களுடைய நோக்கமான 'ஆக்டிவ் மொபிலிட்டி' திட்டத்தை, அவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

* எத்தகைய மாற்றம் நிகழ்ந்தது?

எங்களுடைய முயற்சியின் மூலம், ஐதராபாத்தின் அவுட்டர் ரிங் ரோட்டில், சைக்கிள் பயணங்களுக்கு என பிரத்யேக சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. 23 கிலோமீட்டர் நீளும் அந்த சாலை, சோலார் மேற்கூரைகளுடன், ரப்பர் தரை விரிப்புகளுடன் சைக்கிள் பயணிகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 92 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டிருந்தாலும், சோலார் பேனல்கள் மூலம் பெறப்படும் மின்சாரத்தினால், 5 அல்லது 6 வருடங்களில், செலவு செய்த பணத்தை திரும்ப எடுத்துவிடலாம். சைக்கிள் பயணங்களுக்கு என இப்படியொரு அதிநவீன சாலை, இந்தியாவில் அமைவது இதுவே முதல்முறை. அதுவும் என்னுடைய முயற்சியினால் உருவாகியிருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

* வேறு என்ன செய்கிறீர்கள்?

வீட்டு வேலை பார்க்கும் பெண்கள், வாட்ச்மேன், பேப்பர்பாய், பால் விநியோகிப்பவர்... இப்படி நிறைய மக்களின் அன்றாட வாழ்க்கையோடு சைக்கிள் கலந்திருக்கிறது. அவர்களை ஒருங்கிணைப்பதினால், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு, விபத்து காப்பீடு, மருத்துவ வசதிகள் போன்ற சலுகைகளை அரசிடமிருந்து கேட்டு வாங்க முடியும். அதை 'சியாமலூ சைக்கிளிங் கம்யூனிட்டி' திட்டம் மூலம் நிறைவேற்ற முயல்கிறோம்.

அதேபோல, வீணாகி தூக்கி எறியப்படும் பழைய சைக்கிள்களை சாலையோர சைக்கிள் கடைகள் மூலம் புதுப்பித்து, அதை சைக்கிள் வாங்கவே வழியில்லாமல் இருப்பவர்களுக்கு, 'புராஜெக்ட் தியா' மூலம் வழங்கி வருகிறோம். இதுவரை 150 சைக்கிள்கள் புதுப்பிக்கப்பட்டு, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

உங்களுடைய லட்சியம் என்ன?

'ஆக்டிவ் மொபிலிட்டி' என்ற முறையை செயல்படுத்துவதுதான் என்னுடைய லட்சியம். அதாவது, ஒரு கிலோமீட்டருக்கு குறைவான இடங்களுக்கு நடந்து செல்வது, 5 கிலோமீட்டர்களுக்கு உட்பட்ட இடங்களுக்கு சைக்கிளில் செல்வது, வெகுதொலைவிலான இடங்களுக்கு பொது போக்குவரத்தை பயன்படுத்துவது... என தனிநபர் டூவிலர் மற்றும் கார்களின் பயன்பாட்டை குறைப்பதுதான் என்னுடைய லட்சியம்.

இந்த ஐடியாவை, தெலுங்கானா அரசு அதிகாரிகளும் வரவேற்கிறார்கள். அவர்களுடைய வளர்ச்சி திட்டங்களில், எங்களுடைய கருத்துக்களையும், பங்களிப்பையும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

மேலும் செய்திகள்