மணல் சிற்ப கலைஞர், சுதர்சன் பட்நாயக்..!
|இந்தியாவில் மணல் சிற்பக் கலை பிறப்பதற்கும், பிரபலமாகுவதற்கும் காரணமாக இருந்தவர்.
சுதர்சன் பட்நாயக், புவனேஷ் வரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பூரி எனும் ஊரில் 1977-ம் ஆண்டு ஏப்ரல் 15-ல் பிறந்தார். இவர் ஒரு மணற் சிற்பக் கலைஞர். இந்தியாவில் மணல் சிற்பக் கலை பிறப்பதற்கும், பிரபலமாகுவதற்கும் காரணமாக இருந்தவர்.
இவருடைய ஏழாவது வயதிலிருந்து மணலில் சிற்பம் உருவாக்க தொடங்கினார். அதுவும் ஓவிய கலையில் அதீத ஆர்வம் கொண்டு, வரைய தொடங்கியவர், காகிதங்கள் மற்றும் வண்ண பொருட்கள் வாங்க பணம் இல்லாத காரணத்தால், மணல் ஓவியங்கள், மணல் சிற்பங்களை உருவாக்க தொடங்கியதாக நிறைய தகவல்கள் உண்டு. சிறுவயதிலேயே மணல் சிற்பங்களை உருவாக்கிய சுதர்சன், இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் சிற்பங்களை செய்து உள்ளார்.
இந்திய மாநிலங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் சம்பவங்கள், முக்கிய பண்டிகைகள், விழிப்புணர்வு கருத்துகள், விளையாட்டு சாதனைகள்... இப்படி எதுவாக இருந்தாலும் சரி, அதை மணல் சிற்பமாக மாற்றி, அந்த நிகழ்விற்கும் கூடுதலாக பலம் சேர்ப்பதுதான், சுதர்சனின் ஸ்டைல். பொழுதுபோக்கிற்காக, மணல் சிற்பங்களை உருவாக்க தொடங்கி, பல விழிப்புணர்வு கருத்துகளை மணலில் கடத்தியிருப்பவர், மணல் சிற்பங்களை முன்னிலைப்படுத்தி பல சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். அதில் பலமுறை பரிசுகளையும் வென்றிருக்கிறார்.
2013-ல் ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த 12-வது சர்வதேச மணல் சிற்பப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். பிறகு டென்மார்க் சர்வதேச மணல் சாம்பியன்ஷிப்பிலும் பரிசு பட்டங்களை வென்றார். கொரியா மணல் சிற்ப விருது, பெர்லின் உலக மணல் சிற்ப சாம்பியன்ஷிப்... என இவரது வெற்றி கதை, இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட, 27 சர்வதேச சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்று, சர்வதேச அரங்கில் நம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
இவருக்கு, நம்முடைய இந்திய அரசாங்கமும் பெருமை சேர்த்திருக்கிறது. ஆம்..! 2014-ம் ஆண்டில் இந்திய அரசு, பத்மஸ்ரீ விருது கவுரவித்தது.
சர்வதேச போட்டிகள் இல்லாத சமயத்தில், பூரி கடற்கரைக்கு சென்றால், அங்கு சுதர்சனை நிச்சயம் பார்க்க முடியும். ஏனெனில் அவரால் பூரி கடற்கரையை விட்டு பிரிந்திருக்கவும் முடியாது. மணல் பரப்பை தன் விரல்களால் வருடாமல் இருக்கவும் முடியாது. மணலுக்கும், இவருக்கும் இடையே அப்படியொரு 'கெமிஸ்ட்ரி'.
சுதர்சனின் படைப்புகள்...!
பிபா கால்பந்து தொடரில் பங்கேற்றுள்ள 32 நாடுகளை சேர்ந்த 1,350 நாணயங்களையும், இந்திய நாணயங்களையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சிற்பம், சர்வதேச மகளிர் தினம், 5 ஆயிரம் ஹாக்கி பந்துகளை கொண்டு உருவாக்கிய மிகப்பெரிய ஹாக்கி ஸ்டிக் மணல் சிற்பம், சர்தார் பட்டேலின் பிறந்தநாள் சிற்பம், அமைதியை வலியுறுத்தி உலகிலேயே உயரமான மணற்சிற்பம், கருப்பு தாஜ்மஹால் சிற்பம்... இப்படி பல புதுமையான மணல் சிற்பங்களை சுதர்சன் படைத்திருக்கிறார்.
இவரது படைப்பு வடிவமைப்பிற்காக பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்றிருக்கிறார். கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்திருக்கிறார்.
மணல் சிற்ப படைப்புகளில் சில...