< Back
முத்துச்சரம்
பிரபலமான சாட்டிங் செயலிகள்..!
முத்துச்சரம்

பிரபலமான சாட்டிங் செயலிகள்..!

தினத்தந்தி
|
16 Oct 2023 2:39 PM IST

ஸ்மார்ட் போன் உலகில் ‘வாட்ஸ்-அப்’ செயலியை பயன்படுத்தாதவர்கள் யாருமே இல்லை என்ற நிலை, கிட்டத்தட்ட வந்துவிட்டது. ஆனால் அந்த வாட்ஸ் ஆப்பிற்கு போட்டியாகவும் பல சாட் மெசஞ்சர்கள் இருக்கின்றன.

அவை, வாட்ஸ் ஆப் மென்பொருளை விடவும் சிறப்பானவையாகவும், கூடுதல் அம்சங்களுடனும் திகழ்கின்றன. சரி...! நாம் பயன்படுத்தும் வாட்ஸ் ஆப் சலிப்பு தட்டினால், அதை தாண்டி வேறு என்னவெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

ஐ-மெசேஞ்

நீங்களும், உங்கள் நண்பர்களும் ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்துவோர் என்றால், இச்செயலி தேவைப்படாது. இது ஆப்பிளின் இன்-பில்ட் செயலி ஆகும். புதிய அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட UI இடைமுகம், மற்ற ஆப்பிள் சாதனங்களுடன் டேட்டாவை இணைத்தல் போன்ற வசதிகள் உள்ளன. பயனர்கள் சில உணர்ச்சிகளை வெளிப்படுத்த மெமோஜிகளை உருவாக்கி பயன்படுத்தலாம். குறிப்பிட்ட மெசேஜ்களுக்கு எபெக்ட், ரியாக்ஷன் சேர்ப்பது என முயற்சிக்கலாம். வாட்ஸ்அப் போலவே, எல்லா உரையாடல்களும் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டவை, எந்த வெளி தரப்பினரும் உங்கள் உரையாடலை படிக்க முடியாது.

டிஸ்கார்ட்

டிஸ்கார்ட் கேமர்ஸூக்காகவே வடிவமைக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. தற்போது, அனைவரும் தினசரி பயன்பாட்டிற்கு உபயோகிக்கின்றனர். இதில், மெசேஜ் செய்வதை காட்டிலும் வாய்ல் கால் செய்யும் வசதி உள்ளது. ஒரு மெசேஜில் 8 எம்.பி வரையிலான டேட்டாவை அனுமதிக்கும் என்பதால், நீங்கள் ஜிப் கோப்புகள், எமோஜிகள் மற்றும் பைல்களை அனுப்பலாம். சந்தா கட்டணம் செலுத்தக்கூடிய டிஸ்கார்ட் நைட்ரோ செயலி மூலம், 100 எம்.பி வரையிலான பைல்களை அனுப்பிட முடியும். இதுதவிர, இதிலிருந்து யூ-டியூப் போன்ற சமூக கணக்குகளுடன் தடையின்றி அணுகலாம்.

டெலிகிராம்

டெலிகிராம் செயலியை திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யவும், ஷேர் செய்யவும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பது வேதனையான விஷயம். ஏனெனில் சில அம்சங்களால் வாட்ஸ் அப்பை காட்டிலும் டெலிகிராம் முன்னிலையில் உள்ளது. டெலிகிராமில் ஒரே நேரத்தில் 1 லட்சம் பேர் வரை சேரக்கூடிய சூப்பர் குரூப் ஆரம்பிக்கலாம். இதில் வீடியோ அழைப்பு அம்சம் இல்லை. ஆனால், டைம் பாஸூக்கு மினி கேம்ஸ்கள் உள்ளன. மூன்று அடுக்கு பாதுகாப்பு இருப்பதால், அதன் உரையாடல்கள் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.

கூகுள் சாட்

முன்பு 'ஹேங் அவுட்' என அறியப்பட்ட கூகுள் சாட், மெயில் இன்பாக்ஸுக்கு அருகில் இருப்பதால், பணி வேலைகளுக்கு சிறந்தது. உங்களில் பெரும்பாலானோர் மெயில் ஐ.டி.யை மொபைலில் லாகின் செய்யாமல் இருப்பீர்கள். அவர்களுக்கு, இச்செயலி உதவியாக இருக்கும். அர்ஜன்ட் மெசேஜ்கள், தனிப்பட்ட நபர்களிடமிருந்து வரும் மெயில் என பிரித்து உங்களுக்கு வழங்கும் தன்மை கொண்டது. கூடுதலாக ஒரே கிளிக்கில் மீட்டிங்கில் நுழையும் வசதி உள்ளது.

பிரிட்ஜிபை

காடு போன்ற இடங்களுக்கு டிரக்கிங் செல்கையில் இன்டர்நெட் கிடைக்காமல் சிக்கிக்கொள்ளும் சூழ்நிலை உண்டு. அப்போது, ஆப்லைனில் மெசேஜ் அனுப்பிட இச்செயலி உதவியாக இருக்கும். புளூடூத் மூலம் வேலை செய்யும் இச்செயலி மூலம், 330 அடி தூரத்திற்குள் இருக்கும் நபருடன் உரையாடலாம். பிராட்காஸ்ட் முறை மூலம் பெரிய குழுக்களுக்கு ஒரு செய்தியை அனுப்ப உங்களை அனுமதிக்கிறது. தொடக்கப் பதிவிறக்கச் செயல்முறையைத் தாண்டி உங்களுக்கு இணைய இணைப்பு தேவையில்லை.

சிக்னல்

மெசேஜ்களை தானாக டெலிட் செய்யும் வசதி, உயர் பாதுகாப்பு அம்சம், ஸ்கிரீன் ஷாட்கள் எடுக்கப்படுவதைத் தடுக்கும் திரைப் பாதுகாப்பு அம்சம் போன்ற வசதிகள் உள்ளன. எந்தவித விளம்பரங்களும் தோன்றாது. ஒரே நேரத்தில் 40 பேர் வரை, மிகவும் பாதுகாப்பாக வீடியோ கால் செய்யலாம்.

மேலும் செய்திகள்