< Back
முத்துச்சரம்
இயற்கையை நேசிக்கும் பெண் போட்டோகிராபர்
முத்துச்சரம்

இயற்கையை நேசிக்கும் 'பெண் போட்டோகிராபர்'

தினத்தந்தி
|
23 Sept 2023 2:07 PM IST

ஐஸ்வர்யா ஸ்ரீதர், இளம் வன விலங்கு புகைப்பட கலைஞர். இந்தியா முழுக்க பயணித்து சிங்கம், புலி, யானைகளை விதவிதமாக புகைப்படம் எடுத்திருக்கிறார். ஆனால் இவற்றுக்கெல்லாம் கிடைக்காத பாராட்டும், புகழும் சாதாரண மின்மினிப்பூச்சியை புகைப்படம் எடுத்ததற்காக கிடைத்திருக்கிறது. அதுவும் உலகளவிலான வன விலங்கு புகைப்பட கலைஞர்கள் பங்கேற்கும், 'வைல்ட் லைப் போட்டோகிராபர்' போட்டியில், சிறந்த வன விலங்கு புகைப்பட கலைஞராக புகழப்பட்டிருக்கிறார்.

யார் இவர்?, எத்தகைய போட்டி அது?, இவரது புகைப்படத்தின் சிறப்பு என்ன? போன்ற விஷயங்களை ஐஸ்வர்யா ஸ்ரீதரிடம் கேட்டு தெரிந்து கொள்வோம்.

* உங்களை பற்றி கூறுங்கள்?

நான் பிறந்து வளர்ந்தது, மகாராஷ்டிரா. அங்குதான் மாஸ் மீடியா படிப்பை முடித்தேன். இன்று புகைப்பட கலைஞராகவும், குறும்படம் மற்றும் ஆவணப்பட இயக்குனராகவும், இயற்கை ஆர்வலராகவும் அறியப்படுகிறேன்.

* நீங்கள் வன விலங்கு புகைப்பட கலைஞரா?

ஆம்...! பொதுவாக எல்லாவிதமான புகைப்படங்களும் எடுக்க பிடிக்கும். ஆனால் வன விலங்கு புகைப்பட கலைஞராக இருக்கவே ஆசைப்படுகிறேன். ஏனெனில் புகைப்பட கலையை முழுமையாக கற்ற பிறகுதான், வனவிலங்கு புகைப்பட கலைஞராக தங்களை மாற்றிக் கொள்வார்கள். ஆனால் நான் வன விலங்குகளை புகைப்படம் எடுக்க தொடங்கிதான், புகைப்பட கலையையே கற்றுக்கொண்டேன்.

என் அப்பா, பம்பாய் நேச்சுரல் ஹிஸ்ட்ரி சொசைட்டியின் உறுப்பினர். அதனால் 8 வயதில் இருந்தே தந்தையோடு இயற்கை பயணங்களை மேற்கொண்டு வருகிறேன். அடர் வனங்களில் கூடாரமிடுவது, சக உறுப்பினர்களோடு மலையேறுவது, அருவிகளை கணக்கெடுப்பது... என சிறு வயதிலிருந்தே இயற்கையோடு பயணிக்கிறேன். இத்தகைய பயணங்களில் அழகான பறவைகளையும், ஆக்ரோஷமான மிருகங்களையும் பார்க்க முடிந்தது. ரசிக்க முடிந்தது. அவைகளை புகைப்படம் எடுக்க தொடங்கி, இன்று முழுநேர வன விலங்கு புகைப்பட கலைஞராகவே மாறிவிட்டேன்.

* முதல் அனுபவம் எப்படி இருந்தது? எந்த மிருகத்தை புகைப்படம் எடுத்தீர்கள்?

அப்பா வாங்கி கொடுத்த ஆட்டோமேட்டிக் கேமராவில் பறவைகளை படம் பிடித்தேன். 11 வயதில், அப்பாவோடு இணைந்து புலிகள் உலாவும் காட்டிற்குள் சென்றேன். ஓரளவிற்கு புகைப்படம் எடுக்க கற்றுக்கொண்டதால், புலியை புகைப்படம் எடுக்க ஆவலாக இருந்தேன். எதிர்பார்த்தபடியே, புலியும் வந்தது. ஆனால் நான் புகைப்படம் எடுக்கவில்லை. ஏனெனில் முதல் முறையாக புலியை நேரில் கண்ட மிரட்சியில் உறைந்துபோய்விட்டேன். பிறகு அப்பா என்னை சமாதானப்படுத்த, புலியை 'கிளிக்' அடித்தேன். அதிலிருந்து ஒவ்வொரு பயணமும், ஒவ்வொரு அனுபவத்தை கொடுத்தது. 22 வயதிற்குள்ளேயே பிரபல வன விலங்கு புகைப்பட கலைஞராக மாற்றியது.

* இளம் வன விலங்கு போட்டோகிராபர் என அறியப்படுகிறீர்கள்? எப்படி சாத்தியமானது?

8 வயதிலிருந்து புகைப்படம் எடுத்து வருகிறேன். இன்று 26 வயதாகிறது. அந்தவகையில் 18 வருட அனுபவம் இருப்பதால், நான் சிறந்த வன விலங்கு புகைப்பட கலைஞராகவும், இளம் புகைப்பட கலைஞராகவும் திகழ்கிறேன்.

* இளம் வயதிலேயே, சிறந்த வன விலங்கு புகைப்பட கலைஞராக பட்டம் வென்றது எப்படி?

சிறுவயதில் இருந்தே புகைப்படம் எடுக்கிறேன். மதம் கொண்ட யானை, வேட்டையாடும் புலி, சிங்கத்தின் கூடாரம், காண்டாமிருகம், ஒட்டகச்சிவிங்கி சண்டை, முதலை வேட்டை, கொடிய விஷம் கொண்ட பாம்பு.... என எண்ணில் அடங்கா வன விலங்குகளை அழகழகாக புகைப்படம் எடுத்திருக்கிறேன். வன விலங்கு புகைப்பட துறையில் வெகுகாலமாக இருப்பதால், அதில் நடக்கும் போட்டிகளை பற்றி எனக்கு தெரியும். மாநிலம், தேசியம், சர்வதேச அளவிலான புகைப்பட போட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறேன். அதில் ஏராளமான பரிசுகளும் கிடைத்திருக்கிறது, தோல்வி அனுபவங்களும் உண்டு. அதுபோன்றுதான், உலக அளவில் நடைபெறும் 'வைல்ட் லைப் போட்டோகிராபர்' போட்டியில் கலந்துகொண்டு, பரிசு வென்றேன். அதுமட்டுமின்றி, 2022 மற்றும் 2023-ம் ஆண்டிற்கான இளம் புகைப்பட கலைஞர்கள் விருதும், வென்றிருக்கிறேன்.

* வனவிலங்கு புகைப்பட கலைஞர் என்பதை தாண்டி, உங்களது மற்ற செயல்பாடுகளை கூறுங்கள்?

இயற்கையை பாதுகாப்பதில் நான் முழுமுனைப்புடன் செயல்படுகிறேன். பறவைகளுக்கு சொந்தமான சதுப்பு நிலங்களை தனியார் கம்பெனிகள் தவறான வழியில் கையகப்படுத்துவதை எதிர்த்து, 'பஞ்சி தி லாஸ்ட் வெட்லாண்ட்' என்ற ஆவணப்படத்தை தயாரித்து, வெளியிட்டேன். பெரும் சர்ச்சையையும், எனக்கு எதிரான பலத்த எதிர்ப்பையும் இது உருவாக்கியது. இதுதொடர்பாக கொலை மிரட்டல்களும் வந்தன. இருப்பினும் நான் தொடர்ந்து போராடுகிறேன். அதேபோல, காட்டுப்பயணங்களின்போது என் கண் பார்வையில் வளர்ந்த 'மாயா' என்ற புலியின் வாழ்க்கை வரலாற்று படம் ஒன்றை உருவாக்கினேன்.

* உங்களுடைய அடுத்த முயற்சி என்ன?

மேற்கு தொடர்ச்சி மலைகளில் நடக்கும் பல்லுயிர் பெருக்கம் பற்றி, ஆவணப்படம் தயாரித்து வருகிறேன். அதேபோல அழியும் தருவாயில் இருக்கும் காடுகள், உயிரினங்கள் பற்றியும் ஆவணப்படம் எடுக்கிறேன்.

* வனவிலங்கு புகைப்பட கலைஞராக ஆசைப்படுபவர்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன?

இயற்கையை அழகாக புகைப்படம் எடுப்பது மட்டுமே நம் வேலை இல்லை. இயற்கையை மேலும் அழகாக்குவதும் நம் வேலைதான். இயற்கையை ரசிக்க தொடங்கினால், சிறப்பான புகைப்படங்களை எடுக்கலாம். அதேபோல இந்த துறையில் சாதிக்க பொறுமையும் அவசியம்.

மேலும் செய்திகள்