சாதனைகளில் `உயர்ந்து' நிற்கும் நளினி..!
|சாதிக்க வயதும் தடை இல்லை... திடகாத்திரமான உடல்வாகும் தேவையில்லை.. நம்பிக்கை என்ற ஒன்று மட்டும் போதும் என்று நிரூபித்து காட்டி இருக்கிறார் சேலத்தை சேர்ந்த நளினி.
3 வயதில் வலது கால் செயலிழந்து விட்டது. 'இனி அவ்வளவுதான்' என்று டாக்டர்கள் கூறிய அந்த ஒற்றை வார்த்தைதான், இன்று இவ்வளவு பெரிய சாதனைக்கு உந்து சக்தியாக இருந்தது என்கிறார் நளினி.
இவர் உயரம் குறைந்தவர்களுக்கான போட்டியில் வாங்கி குவித்த பதக்கங்கள், கோப்பைகள் ஏராளம்.
35 வயதில் விளையாட்டு போட்டிகளில் சாதிக்க தொடங்கிய நளினிக்கு இன்று 55 வயது ஆகிறது. ''உலக அளவில் உயரம் குறைந்தவர்களுக்கான போட்டியில் பங்கேற்கும் அதிக வயதுடைய வீராங்கனை நான்தான்'' என்கிறார் பெருமிதத்துடன் நளினி.
வாழ்வில் வலிகளுக்கு மத்தியில் சாதனை பெண்ணாக மிளிரும் நளினி, கடந்து வந்த பாதைகள் ஆச்சரியத்தை தருவதோடு எல்லோருக்குள்ளும் நம்பிக்கை விதைகளையும் விதைக்கிறது. அது என்ன என்பதை அவரே கூற கேட்போம்.
''எங்களது பூர்வீகம் சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள குட்டப்பட்டி மாதநாயக்கன்பட்டி என்ற கிராமம். என்னுடைய தந்தை மத்திய மின்சாரத்துறை அமைச்சக பொது இயக்குனராக இருந்து கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்று விட்டார். அம்மா கஸ்தூரி. உடன் பிறந்தவர்கள் 2 அண்ணன், ஒரு அக்காள்.
எனக்கு 3 வயது இருக்கும்போது போலியோவால் பாதிக்கப்பட்டேன். என்னை பரிசோதனை செய்த டாக்டர்கள், இனி இவளால் நடக்க முடியாது என்று கூறி விட்டனர். எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்த எனக்கு, கல்வி கற்க உடலில் உள்ள குறைபாடு தடையாக இல்லை.
மற்ற குழந்தைகள் ஓடி, ஆடி விளையாடும்போது என்னை அறியாமலேயே எனக்குள் ஒரு ஏக்கம் வரும். நம்மால் இது முடியாமல் போய் விட்டதே என்ற எண்ணம் ஏற்பட்டது. எனக்கு வலது கால் செயல் இழந்தது மட்டும் அல்லாமல் உடல் வளர்ச்சியையும் கடவுள் குறைவாக கொடுத்து விட்டார். என்னுடைய தாய், தந்தை உயரமாக இருப்பார்கள். நான் 4 அடி உயரம்தான் உள்ளேன்.
என்னை ஏளனமாக பார்த்தவர்கள் மத்தியில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வேரூன்றி விட்டது. அதற்கு கல்வி ஒன்று மட்டும்தான் கைகொடுக்கும் என்பதை உணர்ந்தேன். பி.காம்., எம்.பி.ஏ., காஸ்ட் அக்கவுண்டன்ட், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் படிப்பு, இ-காமர்ஸ் ஆகிய 5 படிப்புக்கான பட்டங்களை வாங்கினேன். தொடர்ந்து படிக்க ஆசை இருந்தாலும், அரசு வேலை கனவாக இருந்ததால் போட்டி தேர்வில் வெற்றி பெற்று மத்திய நீர் மின்சார நிறுவனத்தின் அதிகாரியாக அரியானா மாநிலத்தில் பணியில் சேர்ந்தேன்.
ஒருநாள் அரியானாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, பேட்மிண்டன் அசோசியேஷன் செயலாளரான ரமேஷ் படிக்காரம் என்னை சந்தித்தார். அவர் ஒரு தமிழர். அவரது ஆலோசனையின் பேரில் அரியானா மாநிலத்தில் உயரம் குறைந்தவர்களுக்கான போட்டியில் விளையாட தொடங்கினேன்.
30 வயதை தாண்டி விட்டால் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைப்பவர்கள் அனேகம் பேர். ஆனால் நான் விளையாட்டில் சாதிக்க தொடங்கியதே 35 வயதில்தான்'' என்றவர், தன்னுடைய விளையாட்டு வாழ்க்கையை பகிர்ந்து கொண்டார்.
''2001-ம் ஆண்டு பேட்மிண்டன் விளையாட தொடங்கி, குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் பயிற்சி பெற்றேன். அரியானா மாநிலம் சார்பில் பல்வேறு போட்டிகளிலும், இந்தியா சார்பில் உலக போட்டிகளிலும் விளையாடி இருக்கிறேன்.
இதுவரை அமெரிக்கா, நேபாளம், தாய்லாந்து, ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கும் சென்று விளையாடி இருக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு தமிழ்நாட்டுக்கு பணிமாறுதல் கிடைத்தது. மத்திய நீர் மின்சார நிறுவனத்தின் முதுநிலை மேலாளராக உள்ளேன். இவ்வளவு காலம் அரியானா மாநிலத்துக்காக விளையாடிய நான், இனி தாய் தமிழ்நாட்டுக்கு விளையாட போகிறேன் என்பதை நினைத்து உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றவர், பாரா ஒலிம்பிக் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
''கடந்த வாரம் ஜெர்மனியில் உயரம் குறைந்தவர்களுக்கான போட்டி நடந்தது. இதில் இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி சார்பில் பங்கேற்ற இந்திய அணியில் 19 பேரில் தமிழகத்தில் இருந்து 7 பேர் கலந்து கொண்டோம். அதில் நானும் ஒருவர். அந்த போட்டியில் வெண்கல பதக்கங்களை பெற்றேன். சொந்த ஊர் திரும்பிய எங்களை தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து கவுரவித்தார். இனி வரும் நாட்களில் ஏராளமான போட்டிகளில் வெற்றி பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என நினைக்கிறேன்.
மத்திய அரசின் 600 பொதுத்துறை நிறுவனங்களில் சிறந்த பெண் அலுவலருக்கான விருது பெற்றுள்ளேன். பத்ம விருதுக்கு என்னுடைய பெயரை மத்திய நீர்மின்சார நிறுவனம் 2 முறை பரிந்துரை செய்தது. ஆனால் நான் தேர்வாகவில்லை.
எனது பணிக்காலம் முடிந்தவுடன் சேலத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை தொடங்க விரும்புகிறேன். ஏனென்றால் நானும் ஒருவிதத்தில் வளர்ச்சி குன்றிய பெண்தான். எனக்கு உடல் வளர்ச்சி குறைவு. அவர்களுக்கு மனம் வளர்ச்சி குறைவு அவ்வளவுதான். அந்த குழந்தைகளுக்கான பள்ளியை தொடங்கி, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை அதில் இருந்து மீட்டெடுத்து அவர்களும் இந்த உலகில் வாழ தகுதி உடையவர்கள் என்பதை இந்த சமுதாயத்துக்கு நிரூபிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியமாக இருக்கிறது'' என்கிறார் நெகிழ்ச்சியுடன் நளினி.
உயரம் குறைவான பெண், உன்னால் முடியாது என்று பல்வேறு இடங்களில் செவிகளில் கேட்ட வார்த்தைகளை நம்பிக்கை விதைகளாக்கி இன்று விருட்சமாக்கி தமிழ்நாட்டுக்கும், இந்திய தேசத்துக்கும் பெருமை சேர்த்து வரும் நளினியின் கனவு நனவாக நாமும் வாழ்த்துவோம்!