< Back
முத்துச்சரம்
மறுமலர்ச்சி பெறும் கண்ணகி நகர்..!

கண்ணகி நகர் - சென்னை 

முத்துச்சரம்

மறுமலர்ச்சி பெறும் கண்ணகி நகர்..!

தினத்தந்தி
|
1 July 2023 1:13 PM IST

கடந்த கால சம்பவங்களால், கறைபட்டுப் போன கண்ணகி நகர் வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சியில் இறங்கியிருக்கிறது, ஒரு இளம்படை. இவர்கள், சென்னை கண்ணகி நகர் பகுதியையும், கண்ணகி நகர் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அப்பகுதி மாணவ-மாணவிகளின் கல்வி தரத்தையும் சிறப்பாக மேம்படுத்தி வருகிறார்கள். அப்பகுதியில் வளரும் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள்தான், இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் போராளிகள். வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். (ஓய்வு) முன்னின்று வழிநடத்த, மாரிசாமி என்ற தன்னார்வலர் இந்த இளம் படையை ஒருங்கிணைக்கிறார்.

இவர்களை பற்றி அறிந்து கொண்டு, கண்ணகி நகர் பகுதிக்கு 'விசிட்' அடித்தோம். அங்கு 'முதல் தலைமுறை டிரஸ்ட்' என்ற பெயர் பலகை பொருத்தப்பட்டிருந்த மாடி கட்டிடத்திற்குள் நுழைய, மாரிசாமி நம்மை வரவேற்றார்.

இறையன்புவுடன் மாரிசாமி

10-க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் கொண்டிருந்த அந்த கட்டிடத்திற்குள், நிறைய தொழில்பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அதில் கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஆர்வமாக பயிற்சி பெற்றனர். அவற்றை எல்லாம் பார்த்துவிட்டு, தன்னார்வலர் மாரிசாமியுடன் பேச ஆரம்பித்தோம். அவர், முதல் தலைமுறை டிரஸ்ட் உருவானது பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்.

''சென்னையின் பல்வேறு பகுதிகளில் வசித்துக்கொண்டிருந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அவர்கள் வாழ்வதற்காக உருவாக்கப்பட்டதுதான், கண்ணகி நகர் குடியிருப்பு. 2000-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கண்ணகி நகரில் மொத்தம் 23,704 குடும்பங்கள், வசிக்கின்றன. இங்கு வாழ்பவர்களில் பெரும்பாலானோர், தினக்கூலிகள். அம்மா, அப்பா இருவருமே வேலைக்கு செல்லக்கூடியவர்கள். காலையில் வேலைக்குச் சென்றால், இரவில்தான் வீடு திரும்புவார்கள்.

பயிற்சிகள் நடைபெறும் கட்டிடம்

பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் குழந்தைகளும் இங்கு இருந்தனர். அதேசமயம், தவறான நண்பர்களால் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி, கல்வியை தொலைத்த மாணவர்களும் இங்கு இருந்தனர்.

போதை பழக்கமும், தவறான செயல்பாடுகளும், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கவே... எங்கள் கண் முன்னால் சீரழியும் இளைய சமூகத்தினரை பொறுப்புள்ளவர்களாக மாற்ற முடிவு செய்தோம். அதற்காக, 2016-ம் ஆண்டு, `ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மக்கள் நல சங்கம்' என்ற தன்னார்வல அமைப்பு ஒன்றை தொடங்கினோம்'' என்றவர், அதன் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் பணியை குழுவாக முன்னெடுத்திருக் கிறார்.

இவர்களது சேவைகள் தொடங்கிய அடுத்த சில மாதங்களிலேயே ஐ.ஏ.எஸ். அதிகாரியான இறையன்புவின் நட்பும், வழிகாட்டுதலும் கிடைத்தது. அதை சிறப்பாக பயன்படுத்தி கண்ணகி நகரை பல்வேறு வழிகளில் மேம்படுத்தினர். கண்ணகி நகருக்குள் மறுமலர்ச்சியை விதைத்திட்டனர்.

பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவ-மாணவிகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து, அதை இலவச டியூசன் சென்டராக மாற்றி கல்வி கற்றுக்கொடுத்தனர். மேலும் பள்ளி குழந்தை களின் கவனம் தீய பழக்கங்களின் பக்கம் திசை திரும்பாமல் இருக்க, கால்பந்து, குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் ஈடுபட அவர்களை ஊக்கப்படுத்தினார்கள். அதற்கு தேவையான விளையாட்டு திடல் வசதிகளை அரசிடமிருந்து பெற்றுக்கொடுத்தார்கள்.

மாலைநேர டியூசன் சென்டரில் குதூகலிக்கும் குழந்தைகள்

''ஒரு டியூசன் சென்டரில் தொடங்கிய கல்வி பயணம், இன்று 12 டியூசன் சென்டர்களை வழிநடத்தும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. குழந்தைகளின் கல்வி வழிகாட்டுதல்களுக்காகவும், கல்லூரி சேர்க்கைக்காகவும் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.-ஐ சந்தித்தோம். எங்களது சேவைகளை வெகுவாக பாராட்டினார். எங்களுக்கு மகிழ்ச்சியுடன் உதவினார். மேலும் பள்ளிக் குழந்தைகளையும், கல்லூரி மாணவர்களையும் சிறப்பாக வழிநடத்த ஊக்கம் கொடுத்தார்.

2017-ம் ஆண்டிலிருந்து, அவரது வழிகாட்டுதலில் இயங்க ஆரம்பித்தோம். டியூசனில் படித்த நிறைய மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள். அவர்களின் குடும்ப வறுமையால் கல்வியை தொடரமுடியாத சூழலில், அந்த மாணவர்களுடன் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.-ஐ சந்தித்தோம். அவர்களின் கல்வி செலவை ஏற்றுக்கொண்டார்.

இப்படியாக வருடந்தோறும், முதல் பட்டதாரி மாணவர்களுடன் அவரை சென்று சந்திப்பது தொடர் கதையாகி போனது. அதேபோல, அவர் உதவி செய்வதும் வழக்கமாகிப் போனது. இவைமட்டுமின்றி, அவரது வழிகாட்டுதலில், மாணவ-மாணவிகளுக்கு போட்டித்தேர்விற்கான பயிற்சி வகுப்புகளையும் முன்னெடுக்க ஆரம்பித்தோம்'' என்றவர், கல்வி பணி மட்டுமின்றி, கண்ணகி நகர் பகுதி மக்களுக்கான பல தேவைகளையும் இறையன்பு மூலமாக பூர்த்தி செய்திருக்கிறார்


.''கண்ணகி நகரில் வாழும் எங்களுக்கு, இந்த பகுதியை எப்படியெல்லாம் மேம்படுத்த வேண்டும் என்ற ஆசை இருந்ததோ, அவையெல்லாம் அவருக்கும் இருந்தது. அதேபோல, எங்களுடைய பகுதி பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, அவர் இரவு-பகலாக எங்களுடன் ஆலோசித்திருக்கிறார். கண்ணகி நகரில் மருத்துவமனையாக இயங்கி பின்னாளில் கைவிடப்பட்ட ஒரு கட்டிடத்தை, ரூ.50 லட்சம் செலவில் சீரமைத்து, எங்களுக்கான பயிற்சி தளமாக மாற்றிக்கொடுத்திருப்பதுடன், நிறைய மறுமலர்ச்சி திட்டங்களுக்கு உயிர் கொடுத்தார். இவற்றையெல்லாம், முறையாக மேற்கொள்ள 2021-ம் ஆண்டு `முதல் தலைமுறை' என்ற டிரஸ்டை, அவரது வழிகாட்டுதலில் சட்டப்படி கட்டமைத்தோம்'' என்பவர் அதன் மூலம் மேற்கொள்ளப்படும் பல நல்ல திட்டங்களையும் விளக்கினார்.

''பள்ளி குழந்தைகளுக்கு தேவையான கல்வி வழிகாட்டுதல், தனித்திறன் பயிற்சிகள், மத்திய-மாநில அரசு பணிகளுக்கான வழிகாட்டுதல், சிலம்பம், கேரம், குத்துச்சண்டை, பறை இசை, நடனம் போன்ற புத்துணர்ச்சி பயிற்சிகளுடன் மரம் நடுதல், குளங்களை சீரமைத்தல், மழைநீர் சேகரிப்பு வடிகால் அமைத்தல் போன்ற சமூக முயற்சிகளிலும் மாணவர்களை ஈடுபடுத்த ஆரம்பித்தோம்.

நீர்நிலை பராமரிப்பு பணிகளில்...

எங்களிடம் டியூசன் பயின்று, இப்போது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கண்ணகி நகர் முழுவதும் நடக்கும் 12 டியூசன் சென்டர்களையும் வழிநடத்துகிறார்கள். மேலும் அவர்கள் மற்ற மாணவ-மாணவிகளுக்கு முன்னுதாரணமாகவும், தூண்டுகோலாகவும் திகழ்கிறார்கள்'' என்றவர், குடும்ப தலைவிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் சில முயற்சிகளை பற்றி பேசினார்.

''மாணவ-மாணவிகளை தொடர்ந்து, கண்ணகி நகர் குடும்ப பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ஆசைப்பட்டோம். அதற்கு வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். இசைந்து கொடுத்தார். அவரது நட்பு வட்டத்தில் இருந்து நிறைய உதவிகள் கிடைத்தன. அதனால் கணினி பயிற்சி வகுப்புகள், ஆரி எம்ப்ராய்டரி வகுப்புகள், அழகு கலை பயிற்சி வகுப்புகள், போட்டோ-வீடியோ எடிட்டிங் வகுப்புகள், தையல் பயிற்சிகள், ஆட்டோ ஓட்டுநர் பயிற்சிகள் என நிறைய முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கிறோம்.

தொழில் பயிற்சி வகுப்புகளில்...

ஒவ்வொரு பயிற்சியையும், அது சார்பான முயற்சிகளையும் அவரிடம் தெரியப்படுத்தும்போது, நாங்கள் எதிர்பார்க்காத வகையில் எங்களுக்கு பேருதவிகளை செய்து எங்களை ஆச்சரியப்படுத்துகிறார்'' என்பவர், தன்னுடைய ஆசையை வெளிப்படுத்துகிறார்.

''கண்ணகி நகர் என்றதுமே, அதை குற்ற பூமியாக பாவிக்கும் மனநிலை எல்லோரிடமும் இருக்கிறது. அதை மாற்றும் பொறுப்பு எங்களிடம் இருப்பதாக உணர்கிறோம். இளையதலைமுறையினரை ஒழுக்கமானவர்களாக, கல்வியாளர்களாக வளர்த்தெடுக்கும் பட்சத்தில் அவர்கள் மூலமாக, மொத்த கண்ணகி நகரும் மாறும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அத்தகைய ஆரோக்கியமான இளைய சமூகத்தினரைத்தான் இப்போது வளர்த்தெடுக்கிறோம். இவர்கள் மூலமாக, சமூகம் மாறும். அதன் மூலமாக, கண்ணகி நகர் மீதான பிம்பம் மாறும். எங்களது வேண்டுகோளுக்கு செவி மடுக்கும் எல்லா அரசு அதிகாரிகளுக்கும் இந்த மாற்றத்தின் மூலமாக நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்'' என்ற நம்பிக்கை வரிகளுடன் விடைபெற்றார்.

இவர் சொல்வதை போலவே, முன்பிருந்த கண்ணகி நகருக்கும், இப்போது இருக்கும் கண்ணகி நகருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அங்கிருக்கும் கட்டிடங்களிலும், அங்கு வாழும் மக்கள் நடவடிக்கைகளிலும் அது சிறப்பாக வெளிப்படுகிறது. கண்ணகி நகர் மக்கள் மாற ஆரம்பித்துவிட்டனர். நாமும் அவர்களை பற்றிய சிந்தனைகளை மாற்றிக்கொள்வோம்...!

முதல் தலைமுறை டிரஸ்ட் அமைப்பினர் மற்றும் குழந்தைகளுடன் இறையன்பு ஐ.ஏ.எஸ்.

இளையதலைமுறையினரை ஒழுக்கமானவர்களாக, கல்வியாளர்களாக வளர்த்தெடுக்கும் பட்சத்தில் அவர்கள் மூலமாக, மொத்த கண்ணகி நகரும் மாறும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அத்தகைய ஆரோக்கியமான இளைய சமூகத்தினரைத்தான் இப்போது வளர்த்தெடுக்கிறோம்.

மேலும் செய்திகள்