< Back
முத்துச்சரம்
இஸ்ரேல் போர் பதற்றமும், பங்குச்சந்தை நிலவரமும்...!
முத்துச்சரம்

இஸ்ரேல் போர் பதற்றமும், பங்குச்சந்தை நிலவரமும்...!

தினத்தந்தி
|
14 Oct 2023 2:41 PM IST

உலகின் ஒரு மூலையில் நடக்கும் போர் (இஸ்ரேல்-பாலஸ்தீனம்) இந்தியாவின் பங்கு சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பங்குச் சந்தையில், நிறுவனங்களின் பங்கு விலை ஏற்றமும், இறக்கமுமாக இருக்கிறது. பங்குகளின் விலை தடுமாற, கச்சா பொருள், தங்கம்-வெள்ளி உள்ளிட்டவைகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட வாய்ப்பிருப்பதால், அதன் விலையிலும் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையற்ற சூழலில், விலை குறைந்திருக்கும் பங்குகளை வாங்க, சாமானியர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால், எதையும் ஒன்றுக்கு மூன்று முறை அலசி ஆராய்ந்து, முதலீடு செய்வது நல்லது என்கிறார், பங்குச்சந்தை ஆலோசகர் சுப்பிரமணி. சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவரான இவர், பங்குச்சந்தை முதலீடு, நிதி ஆலோசனை ஆகியவற்றில் நீண்ட கால அனுபவம் கொண்டவர். அவர் பகிர்ந்து கொண்டவை இதோ...

''ஜி-20 மாநாடு நடந்து முடிந்திருந்த நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் நல்ல ஏற்றத்துடன் இருந்தன. குறிப்பாக, ரெயில் சம்பந்தமான பல வளர்ச்சி பணிகளை முன்னெடுக்க இருந்த சூழலில், அதுசம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் இருந்தன. ஆனால், இந்த போர் பதற்றம், அந்த சூழலை தலைகீழாக மாற்ற இருக்கிறது.

இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் உலக நாடுகள் இரு அணிகளாக திரளும் சூழல் உருவாகி இருப்பதால், இந்த போர் கூட்டணியின் காரணமாகவும் பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் நிகழ வாய்ப்பிருக்கிறது. போர் பதற்றம், ஆரம்ப நிலையில் இருப்பதால், எந்தெந்த துறை பங்குகள் வளர்ச்சி பெறும், வீழ்ச்சியடையும் என்பதை இப்போதே கணிக்க முடியாது. ஆனால், போர் நிலவரத்தையும், வர்த்தக நிலவரத்தையும் உன்னிப்பாக கவனித்தால், இந்த போர் பதற்றத்திலும் பங்குச்சந்தையில் சம்பாதிக்கலாம்.

பொதுவாக சாமானி யர்கள், தங்களது பணத்தை இந்த போர் பதற்றகாலத்தில் முதலீடு செய்வதை தவிர்த்துவிடலாம். பங்குகள் வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பதற்காக, உங்களது மொத்த சேமிப்பையும் அதில் முதலீடு செய்யாதீர்கள். ஏனெனில், போர் சூழல் அதிகரிக்கும்போது, பங்குகளின் விலை கூடுதலாக வீழ்ச்சியடையும் என்பதால், கவனமாக முதலீடு செய்யுங்கள்'' என்கிறார்.

கவனிக்க வேண்டியவை...

1. போர் நிலவரத்தை உன்னிப்பாக கவனிப்பது

2. போர் கூட்டணி நாடுகளின் நகர்வுகளை கவனிப்பது

3. சேமிப்பை பிரித்து முதலீடு செய்வது

மேலும் செய்திகள்