< Back
முத்துச்சரம்
சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள் - கேரளா கிரைம் பைல்ஸ்
முத்துச்சரம்

சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள் - கேரளா கிரைம் பைல்ஸ்

தினத்தந்தி
|
1 July 2023 9:42 AM GMT

சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள் - கேரளா கிரைம் பைல்ஸ்மலையாள சினிமாவில் இருந்து வெளியாகியுள்ள முதல் வெப்தொடர். ஜூன், மதுரம் போன்ற நெகிழ வைத்த படைப்புகளை எடுத்த அகமது கபீரின் புதிய பாய்ச்சல். கொச்சியில் உள்ள லாட்ஜ் அறை ஒன்றில் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இதுகுறித்து விசாரிக்க எர்ணாகுளம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு புகார் வருகிறது. இன்ஸ்பெக்டர் குரியன், சப்-இன்ஸ்பெக்டர் மனோஜூக்கு அந்த வேலையை உத்தரவிடுகிறார். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் பாலியல் தொழிலாளி என்பதும், சிஜூ என்பவர் இந்தக் கொலையில் ஈடுபட்டதும் தெரிய வருகிறது. மேலும் போலி முகவரி கொடுத்து அந்த லாட்ஜில் அறை எடுத்ததும் தெரிகிறது. யார் அந்த சிஜூ? எதற்காக அந்த பெண்ணை கொலை செய்தான் என்பதை பரபரக்கும் திரைக்கதை வழியே 6 எபிசோடுகளில் எடுத்துள்ளனர்.

செல்போன் பயன்பாடு அறிமுகம் இல்லாத காலத்தில் நடப்பது போல் காட்சிப்படுத்தி பாலியல் தொழிலாளிகள் படும் அவஸ்தைகளை படம் பிடித்துள்ளனர். போலீஸ்காரர்களின் விசாரணை பாணியையும் இயல்பான முறையில் காட்சிப்படுத்தியுள்ளனர். குரியனாக லால் வருகிறார். போலீஸ்காரருக்கு உரிய நடை, உடை, பாவனை வழியே தேர்ந்த நடிப்பை கொட்டியுள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் வேடத்தில் அஜூ வர்கீஸ் வாழ்ந்துள்ளார். காமெடிநாயகனான அவர் இதில் சீரியசான பாத்திரம் ஏற்று தன் நடிப்பு வழியே நியாயம் சேர்த்துள்ளார். கதையின் இறுதி முடிச்சு அதிர்ச்சி. படத்தொகுப்பில் சிறந்த இந்த படைப்பை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் கண்டு களிக்கலாம்.

ரபுசக்கர்


மோசடி செய்வதை இந்தியில் 'ரபுசக்கர்' என்று அழைக்கிறார்கள். கோர்ட்டு வளாகத்தில் இருந்து இந்தக் கதை தொடங்குகிறது. பணக்காரர் போல் தன்னை காட்டிக்கொண்டு பெண்களுக்கு வலைவீசி பணம் பறிப்பவர் பிரின்ஸ் என்னும் பவன். பிரபல தொழில் அதிபர் ஒருவரை மோசடி செய்த குற்றத்திற்காக போலீசாரால் பவன் கைது செய்யப்படுகிறார். அவர் குறித்தான வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வருகிறது. போதிய ஆதாரங்கள் இல்லாத காரணங்களால் அவருக்கு தண்டனை வழங்க முடியவில்லை. இதனால் போலீஸ் உள்பட எதிர்தரப்பினர் அவருக்கு எதிராக சாட்சியங்கள், ஆதாரங்களை திரட்ட முயற்சி செய்கின்றனர். உண்மையில் இந்த பிரின்ஸ் என அழைக்கப்படும் பவன் யார்? எதற்காக இந்த ஏமாற்று வேலையில் ஈடுபட்டார். எதற்காக இந்த தில்லு முல்லு முயற்சியில் பவன் சதி தீட்டினார் என்பதை விசாரணை வழியே இந்தத் தொடரில் விளக்கியுள்ளனர்.

நேர்மையான வங்கி அதிகாரியாக இருந்த தன் தந்தை மீது ஏற்பட்ட களங்கத்தை போக்க நாயகன் பலி கிடாவாக மாறி வில்லனை சிக்க வைக்கும் கதை. சிக்கலின்றி பின்னப்பட்டதில் கண்டிப்பாக பாராட்டை பெறும்.

9 எபிசோடுகள் வழியே மனித வாழ்வின் எதார்த்தம், குடும்ப உறவு மற்றும் மனிதனின் மறுபக்கம் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்திய விதம் வியப்பு. பிரின்ஸ் பாத்திரத்தில் மனிஷ் பாண்டே பொருந்துகிறார். குடும்பத்தின் இழப்புக்காக பழிவாங்கும் எண்ணத்தோடு அவர் எடுக்கும் விபரீதங்கள் பார்வையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இறுதிவரை சஸ்பென்சாக செல்லும் இதனை ஜியோ சினிமாவில் காணலாம்.

வேல்டு'ஸ் பெஸ்ட்

சிறுவயதில் தந்தையை இழக்கும் 12 வயதேயான பிரேம் கணக்கு புலியாக இருக்கிறான். கணிதத்தில் உள்ள ஆர்வம் அவனை அமெரிக்காவின் பல ரியால்டி ஷோக்களில் பங்கேற்க வைக்கிறது. பரிசுகளை குவித்து வகுப்பில் முன்னேறிய மாணவனாக விளங்குகிறான். இனவெறி காரணமாக அவனை வெறுக்கும் சக மாணவர்கள் அவனின் அதிமேதாவித்தனத்தால் ஒதுக்குகிறார்கள். கணவனை இழந்த வேதனையுடன் பிரியா தன் மகனை வளர்க்கிறார். அவனை வாழ்வில் உயர்த்த தனி ஆளாக பாடுபடுகிறாா். இந்தநிலையில் இறந்துபோன தனது தந்தை சுரேஷ், பிரபல ராப் இசை பாடகர் என்பது பிரேமுக்கு தெரிய வருகிறது. வீட்டில் இருக்கும் அவரின் உடைமைகளை பிரேம் ஆராயும் வேளையில் சுரேஷ் தன் மகனின் மனகண்களுக்கு முன்பாக தோன்றுகிறார். முதலில் அதிர்ச்சியாகும் பிரேம், தந்தையின் உதவியுடன் தனக்கான அடையாளத்தை தேடுவதே இந்த படத்தின் கரு.

குடும்பக்கதையுடன் இசை, காமெடி ஆகியவற்றை கலந்து ஒரு நல்ல படைப்பை இயக்குனர் ரோஷன் சேத்தி கொடுத்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அறிவுஜீவி பிரேம் பாத்திரத்திற்கு மேனி மக்னஸ் பொருந்தியுள்ளார். தந்தையுடன் அவர் இணைந்து மேடைகளில் ஆடிக்கொண்டு பாடும் காட்சிகளில் கவனம் பெறுகிறார். இசை கலைஞர் பாத்திரத்தில் பிரபல பாடகரான உத்கர்ஷ் அம்புத்கார் வருகிறார். சிறுவனுக்கும் இவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது. மேலும் படக்கதையையும் எழுதி சிறப்பு சேர்த்துள்ளார். பிரியாவாக பூனம் பட்டேல் கண்ணீரை வரவழைக்கிறார். குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும் படைப்பாக உள்ள இதனை குடும்பத்துடன் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

காந்தகார்

ஏஞ்சல் ஆஸ் பாலன், கிரீன்லாந்து போன்ற ஆக்ஷன் படங்களை கொடுத்தவர் ரிக் ரோமன் வாக். தன் ஆதர்சன நாயகன் ஜெரால்டு பட்லரை கொண்டு எலி-பூனை துரத்தல் கதையை எடுத்துள்ளார். அமெரிக்கா ராணுவத்துக்கு கூலிக்காக வேலை செய்பவர் டாம் ஹாரிஸ். ஈரானில் உள்ள அணு உலை குறித்து அமெரிக்காவுக்கு துப்பு கொடுத்து விட்டு துபாயில் பதுங்கி இருக்கிறார். அப்போது ஆப்கானிஸ்தானின் ஹீரத் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து உளவு பார்க்க நியமிக்கப்படுகிறார். மொழி பெயர்ப்பாளர் மோவுடன் ஹாரிஸ் அங்கு செல்கிறார். ஹாரிசின் நண்பரிடம் இருந்து விஷயத்தை கறக்கும் ஈரான் பயங்கரவாதிகள் கூட்டம் அவரை போட்டு தள்ள 'ஸ்கெட்ச்' போடுகிறது. மறுபக்கம் அவரின் குட்டு ஆப்கானிஸ்தானிலும் வெளிப்பட அவரை கலீல் தலைமையில் ஐ.எஸ் கொடூரர்கள் 'சம்பவம்' செய்ய துடிக்கிறார்கள். அமெரிக்கா உளவுத்துறை ஹாரிசின் நடவடிக்கைகளை உளவு செயற்கைக்கோள் வழியே கண்காணிக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அவர் தப்பி வர ஏற்பாடுகள் நடக்கின்றன.

எதிரிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு ஹாரிஸ் உயிருடன் காந்தகாரில் இருந்து தப்பித்தாரா என்பதை பரபரப்பான திரைக்கதை கொண்டு எடுத்துள்ளனர்.

குண்டு வெடிப்பு, துப்பாக்கிச்சூடு, துரத்தல் காட்சிகள், நவீன தளவாடங்களின் உபயோகம் என படம் ஆக்ஷன் காட்சிகளால் திளைக்கிறது. அன்னிய மண்ணில் சிக்கும் ராணுவ வீரர் எவ்வாறு இன்னல்களை சமாளித்து தப்பிக்கிறார் என்பதை பதபதைக்க வைக்கும் காட்சிகளில் எடுத்துள்ளனர். '300' படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த பட்லர், இதில் ராணுவ வீரராக வருகிறார். புத்திக்கூர்மையை கொண்டு பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிக்கும் காட்சிகளில் சிலிர்க்க வைக்கிறார். படத்தின் தூண் பாத்திரத்தில் அலி பைசல் நடிப்பு சிறப்பு. தன் நடிப்பின் வழியே பயங்கரவாதிகளின் எண்ணங்களை விவரித்துள்ளார். அமேசான் பிரைமில் உள்ளது.

மேலும் செய்திகள்