< Back
முத்துச்சரம்
சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்
முத்துச்சரம்

சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்

தினத்தந்தி
|
17 Jun 2023 8:52 AM IST

தற்போது அதிகமான ஓடிடி படங்கள் வெளியாகின்றன அவற்றில் சுவாரசியமான படங்கள் சில ..

பிளடி டாடி

தமிழ் சினிமா படைப்புகளை தழுவி பாலிவுட்டில் படம் எடுப்பது சாதாரணமாகி விட்டது. அந்தவகையில் கமலின் 'தூங்காவனம்' படத்தை இது தழுவியது. டைகர் ஜிந்தா ஹை, சுல்தான் போன்ற ஆக்ஷன் படங்களை இயக்கிய அலி அபாஸ்ஜபாரின் படைப்பு. நேரடியாக ஜியோ சினிமாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தி சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான ஷாகித்கபூர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார்.

போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரி ஷாகித், மனைவியை பிரிந்து தன் ஒரே மகனுடன் வாழ்ந்து வருகிறார். சக ஊழியர் ஜீசனுடன் சேர்ந்து குருகிராமில் பலகோடி மதிப்புள்ள போதைப்பொருளை கைப்பற்றுகிறார். இதனை அறியும் போதை மாபியா தலைவன் ரோனித், மகனை கடத்தி வைத்துகொண்டு போதைப்பொருளை கேட்டு ஷாகிதை மிரட்டுகிறான். இதனால் ரோனித் நடத்தும் மதுபானவிடுதிக்கு போதைப்பொருளை எடுத்து சென்று கைமாற்ற நினைக்கிறான்.

ஷாகிதின் நடவடிக்கை சக போலீசார் டயானாவுக்கு சந்தேகத்தை வரவழைக்கிறது. இதனால் உயர் அதிகாரி ராஜூவுடன் இணைந்து ஷாகிதை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவருகிறார்கள். அப்போது போதைப்பொருள் காணாமல் போக அதற்கு பதில் மாவு பாக்கெட்டுகளை வைத்து போதை மாபியாவை ஏமாற்ற ஷாகித் நினைக்கிறான். கைப்பற்றிய போதைப்பொருள் எங்கே? வில்லன்களிடம் சிக்கிய மகனை நாயகன் மீட்டானா? என்பதைப் பரபரக்கும் ஆக்ஷன் காட்சிகளுடன் சஸ்பென்ஸ் திரில்லராக இதனை எடுத்துள்ளனர்.

'ராப்' கலைஞர் பாட்ஷாவின் பின்னணி இசை அதிர்கிறது. எவ்விதத் தொய்வும் இன்றி ஒரே இரவில் நடக்கும் கதையை ரசிகர்களின் ரசனைக்கேற்ப காட்சிப்படுத்திய விதம் சிறப்பு. ஜாலியான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படமாகவும் உள்ளது.

மாலை நேர மல்லிப்பூ

இளம்பெண் லட்சுமி தன் 10 வயது மகனுடன் தனியாக வாழ்கிறார். குடும்ப வருமானத்திற்காக இரவில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர் லட்சுமி. மகனிடம் தன்நிலை குறித்து மறைக்கும் ஒரு அடித்தட்டு வர்க்க பெண். வீட்டின் உரிமையாளர், உற்றார் உள்பட சமூகமே லட்சுமி குடும்பத்தை ஏளனமாக பார்க்கிறது. அவளுக்கு ஆதரவாக ஒரு குரலும் ஒலிப்பதில்லை. மகனின் எதிர்காலத்தை லட்சுமி நினைக்கிறார். இதனால் தொழிலில் இருந்து விடுபட்டு பிழைப்புக்காக வேறு வேலை பார்க்கலாம் என லட்சுமி முயற்சிக்கிறார்.

தன்னை விபசாரத்தில் ஈடுபடுத்தியவரிடம் தனக்கு சுதந்திரம் வேண்டுகிறார். அவரும் ஒரு நிபந்தனையுடன் அவளை இயல்பு வாழ்க்கை வாழ அனுமதிக்கிறார். இந்தநிலையில் எதிர்பாராதவிதமாக கொரோனா தொற்றுப் பரவுகிறது. இதனால் அவளின் வாழ்வாதாரம் சுருங்கும் நிலை. வேறு வழியின்றி திணறும்போது லட்சுமி மீண்டும் பாலியல் தொழிலில் ஈடுபட அதனால் பிரச்சினைகள் கிளம்புகின்றன.

மிகவும் முதிர்ச்சியான படைப்பு வழியே தமிழகத்தின் பாலியல் தொழிலாளர்களின் நிலையை இளம் இயக்குனர் சஞ்சய் காட்சிப்படுத்தியுள்ளார். கொரோனா தொற்று பரவிய காலத்தில் அவர்கள் சந்தித்த துயரங்கள் குறித்து இதில் பதிவிடுகிறார். மேலும் சமூகத்தின் அன்றாடங்காய்ச்சிகள் நிலையை நுட்பமான திரைக்கதை வழியே ஆங்காங்கே தூவிக் கனக்க வைக்கிறார். லட்சுமி பாத்திரத்தில் கூத்துக்கலைஞர் வினித்ரா அசத்தியுள்ளார். மகனாக அஸ்வின் நடித்துள்ளார். ஆஹா தளத்தில் உள்ளது.

கிரீட்-3

'கிரீட்' படத்தொடருக்கு தனி ரசிகர் பட்டாளம் இருப்பது நிதர்சனமே. சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடிப்பில் உலக சினிமாவில் முத்திரை பதித்த 'ராக்கி' பட வரிசையின் தொடர்ச்சியே இந்த 'கிரீட்'. ஸ்டாலோன் கற்பனையில் உதித்த இந்த பாத்திரத்துக்கு 'பிளாக்பாந்தர்' டைரக்டர் ராயன் குக்லர் முன்னுரிமை கொடுத்து படமாக்கினார். தன் ஆதர்சன நாயகன் மைக்கேல் ஜோர்டனை 'கிரீட்' பாத்திரத்தில் நடிக்க வைத்து அழகுபார்த்தார். தன் அப்பாவின் நண்பரும் முன்னாள் குத்துச்சண்டை சாம்பியனுமான ராக்கியிடம் குத்துச்சண்டை பயிற்சி பெற்று அடொனிஸ் கிரீட் சாம்பியனாக போராடுவதே முதல் பாக கதை. கடந்த 2018-ம் ஆண்டு படத்தின் தொடர் பாகம் வெளிவர ரசிகர்கள் தங்கள் மனதிற்குள் 'கிரீட்' பாத்திரத்துக்கு கோவில் கட்டினர். தன் அப்பாவின் தோல்விக்குப் பழி தீர்க்கும் வகையில் ரஷிய வீரருடன் மோதி அடொனிஸ் கிரீட் வெல்வது போல் 2-ம் பாகம் அமைக்கப்பட்டிருக்கும். இந்தநிலையில் இந்த தொடரின் 3-ம் பாகம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டது.

உலகக் குத்துச்சண்டையில் சாம்பியன் பட்டம் வென்ற பின் தன் மனைவி, மகளுடன் அடொனிஸ் கிரீட் ஓய்வில் இருக்கிறார். 18 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்னர் கிரீடின் உயிர் நண்பனான டேமியன் அவரை சந்திக்கிறான். அப்போது கிரீடின் வாழ்வை பார்த்து பொறாமை கொள்ளும் டேமியன் அவனுடன் களத்தில் மோத துடிக்கிறான். நண்பர்களுக்கு இடையேயான ஈகோ யுத்தத்தைக் காட்சிப்படுத்தியுள்ளனர். கிரீட் பாத்திரத்தில் வழக்கம்போல் மைக்கேல் ஜோர்டன் அசத்தியுள்ளார். அவரே இயக்குனராகவும் இருந்து ஒரு தேர்ந்த படைப்பை காட்சிப்படுத்தியுள்ளார். நண்பர் டேமியனாக ஜோனதன் மேயர்ஸ் கொடூரமாக இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் மெனக்கெடல் உள்ள இதனை பிரைம் வீடியோவில் காணலாம்.

தார்

கடந்த ஆண்டு வெளிவந்த சிறந்த படைப்புகளில் ஒன்று என பெயர் பெற்ற படம். ஆஸ்கார் விழாவில் அதிக விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஒன்று. இசைத்துறையில் சாதித்துப் புகழில் மிதக்கும் பெண் இசைஞானி லிடியா தார். புகழ்பெற்ற 'பெர்லின் பில்ஹார்மோனிக்' குழுவின் முதல் பெண் தலைமை நடத்துனராக உள்ளார். தன்பால் ஈர்ப்பு கொண்ட அவர் ஒரு சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தெனாவட்டும் தலைக்கனமும் கொண்டவர் லிடியா தார். தன் இசைக்குழுவில் யார் இடம்பெற வேண்டும் என்பதில் இறுதி முடிவு அவருடையது. இதனால் பகையையும் சம்பாதிக்கிறார். புகழ் உச்சியில் திளைக்கும் அவர் வாழ்வில் விதி விளையாடுகிறது. தார் இசைக்குழுவின் இளம் இசைக்கலைஞர் கிறிஸ்டி. தாரின் நடத்தைகளைச் சகிக்காத காரணத்தினால் அவர் ஒதுக்கப்படுகிறார். மனவேதனை அடையும் கிறிஸ்டி அவர் குறித்து எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.

இதனால் பிரச்சினைகள் வெடிக்கிறது. பெர்லின் இசைக்குழுவில் இருந்து தார் அதிரடியாக நீக்கப்படுகிறார். புகழ், பதவி மற்றும் சொத்துகள் பறிக்கப்படுகின்றன. பித்து பிடித்தநிலையை அடையும் தார் மறைந்து வாழும் நிலைக்கு தள்ளப்படுகிறார். ஞானம் இருந்தாலும் அகந்தையும், அகங்காரமும் மனிதனை எவ்வாறு விழுங்கும் என்பதை டைரக்டர் டோட் பீல்ட் வெளிப்படையாக பதிவிட்டுள்ளார். சிறந்த பாத்திர ஆய்வு வழியே உலக நடைமுறையை பிரதிபலித்துள்ளார். லிடியா தார் பாத்திரத்தில் கேட் பிளாஞ்செட் வாழ்ந்துள்ளார். அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிரான நேரடித் தாக்குதலாக அமைந்துள்ள இதனை அமேசான் பிரைம் வீடியோவில் காணலாம்.

மேலும் செய்திகள்