சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்
|டெத் நோட், டிசிசன் டு லீவ், கேட் ஆன்லைன் நிகழ்ச்சிகள் அனைவரும் ரசிப்பார்கள்.
டெத் நோட்
ஜப்பானில் நடக்கும் சமூக விரோத செயல்களை கண்டு மாணவன் லைட் யாகமி நெஞ்சு பதறுகிறது. புத்திகூர்மையும், சமயோசிதமாக யோசிக்கும் தன்மையும் கொண்ட அவன் கைகளுக்கு 'டெத் நோட்' என்னும் ஒரு குறிப்பேடு கிடைக்கிறது. அதில் யாருடைய பெயர் எழுதப்பட்டாலும் 40 நொடிகளில் இறந்து விடுவார். இதனை வைத்து ஜப்பானில் உள்ள அனைத்து குற்றவாளிகளையும் தண்டிக்க யாகமி எண்ணுகிறான். இந்த விபரீதத்துக்கு ரியூக் என்னும் பிசாசு உதவுகிறது. தன் அடையாளத்தை மறைத்துக்கொண்டு யாகமி செயல்படுகிறான். இதனால் நாட்டில் குற்றவாளிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறது. ஒரு கட்டத்தில் யாகமியின் கொள்கை திசைமாறுகிறது.
இதனால் குறுக்கே வரும் நபர்களும் சாகிறார்கள். போலீசாருக்கு இவை புரியாத புதிராக இருக்கிறது. தலையை பிய்த்துக்கொண்டு கொலைகாரன் யார்? என தேடுகிறார்கள். ஆனால் நெருங்க முடியவில்லை. இதனால் வெளியுலகிற்கு அடையாளம் தெரியாமல் துப்பறிவதில் நிபுணத்துவம் பெற்ற எல் உதவியை நாடுகிறார்கள்.
யாகமியின் கொலைகார வெறித்தனத்தை எல் வெளிக்கொணர்கிறாரா? அல்லது தன் லட்சியத்தில் யாகமி வென்றானா? என பரபரக்கும் திரைக்கதையில் பரமபதம் ஆடப்பட்டதே 'டெத் நோட்'டின் கதை.
விசித்திரமான கதை மற்றும் கதாபாத்திரங்களால் மனதைவிட்டு நீங்கா இடம் பிடிக்கும் படைப்புகளில் ஒன்றாக இது மாறுகிறது. முதிர்ச்சியுடன் எழுதப்பட்ட இதன் திரைக்கதை ஒழுக்கநெறி மற்றும் மரணம் பற்றிய கேள்விகளை பார்ப்பவர்களின் மனதில் எழுப்பும்.
37 எபிசோடுகளுடன் ஒவ்வொன்றும் 25 நிமிடங்கள் ஓடக்கூடிய நிலையில் நெட்பிளிக்ஸ் தளத்தில் காணக்கிடைக்கிறது. தற்காலத்தில் நடக்கும் சமூக விரோத செயல்களை கண்டு கொந்தளிப்பவர்களுக்கு இது விருந்து.
டிசிசன் டு லீவ்
கேன்ஸ் திரைப்பட விழா, ஆசிய திரைப்பட விழா விருதுகள் வென்று குவித்த கொரியன் படம் இது. ஓல்ட் காய், ஹான்ட் மெய்டன் உள்ளிட்ட பிரபல படங்களை டைரக்டு செய்த பார்க் சான்-வூக்கின் மற்றுமொரு படைப்பு டிசிசன் டு லீவ்.
மலையேற்ற சாகசத்தில் ஈடுபடும் ஒருவர் மர்மமான முறையில் சாகிறார். சாவில் சந்தேகம் இருப்பது தெரிகிறது. பல சவாலான வழக்குகளை விசாரித்து பிரபலமான புலனாய்வு அதிகாரி நாயகனின் கைக்கு இது வருகிறது.
இறந்துபோனவர் சீனாவில் இருந்து வந்தவரை திருமணம் செய்தவர். அவளை நாயகன் விசாரிக்கிறார். சந்தேகம் அதிகமாக அவளை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வருகிறார். அப்போது தன்னையே அறியாமல் அவள்மேல் காதலில் விழுகிறார். இதனால் விசாரணை தடம் மாறுகிறது. நாயகன் விசாரணையை வெற்றிகரமாக முடித்தாரா? அல்லது காதலில் விழுந்து சோதனையில் சிக்கினாரா? என்பதே டிசிசன் டு லீவ் படத்தின் கதை.
2¼ மணி நேரம் ஓடும் இந்த மர்மமான குற்றக்கதை தொய்வில்லாமல் செதுக்கப்பட்டுள்ளது. கவித்துவமான காட்சிகளுக்காக இதனை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது.
இயக்குனரின் காட்சிப்படைப்புக்கு நாயகன் மற்றும் நாயகியின் கதாபாத்திரங்கள் உயிர்கொடுத்துள்ளது. நாயகி தன் அபார நடிப்பால் ஆசியா திரைப்பட விழாவின் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். அமேசான் பிரைம் வீடியோவில் இதனை பார்க்கலாம்.
கேட்
பல்வீந்தர்சிங், ருபிந்தா் மற்றும் ஜம்மி சிங் ஆகியோரின் கூட்டு படைப்பில் வெளியாகியுள்ள பஞ்சாபி தொடர். சிறு சிறு குற்றவாளிகள் குறித்து துப்புகொடுக்கும் நாயகன், போலீஸ்காரர்களின் குரூர முகங்களால் அவர்கள் சங்காத்தமே வேண்டாம் என ஒதுங்குகிறான். ஆனால் விதி விளையாட்டாக போலீசிடம் சிக்கும் தம்பியை சிறைவாசத்தில் இருந்து தப்புவிக்க அவர்கள் கால்களை பிடிக்கும் சூழல். இதனால் போலீஸ் உளவாளியாக மீண்டும் மாறுகிறான். மாநிலத்திற்கே போதைப்பொருள் சப்ளை செய்யும் கூட்டத்திற்குள் நுழைந்து அவர்களின் சாம்ராஜ்ஜியத்தை கவிழ்க்கும் வேலை அவனுக்கு வருகிறது.
எதிரிகளின் கண்களில் மண்ணைத்தூவி போலீசுக்கு நாயகன் துப்பு கொடுக்கிறான். இதில் அரசியலும் நுழைய கதை சூடுபிடிக்கிறது. இறுதியில் தம்பியை நாயகன் மீட்டானா? என்பதே கதையின் அடிநாதம்.
நாயகனாக ரன்தீப் ஹூடா நடித்துள்ளார். மேலும் சுக்வீந்தர் பால்சிங், அஸ்சிலின் கவுர், காவ்யா தப்பர் ஆகியோர் வருகிறார்கள். பஞ்சாப்பின் உணவு, உடை மற்றும் கலாசாரத்தை கையாண்ட விதம் பாராட்டத்தக்கது. பல திருப்பங்கள் கொண்ட இந்த கிரைம் திரில்லர் தொடரை 8 எபிசோடுகளுடன் நெட்பிளிக்சில் காணலாம்.
தி மேஜிசியன்ஸ் எலிபெண்ட்
குடும்பக்கதைகளில் நெட்பிளிக்ஸ் ஆர்வம் காட்டுகிறது. அந்தவகையில் தி மேஜிசியன்ஸ் எலிபெண்ட் குடும்ப உறவுகளை மையமாக கொண்ட அனிமேஷன் படம்.
கேட் டிகமிலோ எழுதிய குழந்தைகள் நாவலை தழுவியது. குடும்பத்தை இழந்த பீட்டர் என்னும் சிறுவனை முன்னாள் ராணுவ வீரர் வில்னா வளர்க்கிறார். மிகவும் கண்டிப்பாகவும், மனஉறுதியுடனும் அவனை வளர்க்க முயலுகிறார். ஆனால் தன் கனிவான இதயத்தின் சொல்படி பீட்டர் வாழ்கிறான்.
அவ்வப்போது தன் பெற்றோர் மற்றும் சிறு தங்கையின் நினைவுகள் அவனை வாட்டுகிறது. ஒருநாள் அருள்வாக்கு கூறுபவரை பீட்டா் சந்திக்கிறான். உணவு வாங்க வைத்திருந்த பணத்தை கொடுத்து தன் தங்கை உயிரோடு இருக்கிறாளா? என அவரிடம் கேட்கிறான். "உன் தங்கை இருக்கும் இடத்தை ஒரு யானை வழிகாட்டும்" என்கிறார். யானைகளே இல்லாத அந்த ஊரில் எப்படி இதுநடக்கும் என பீட்டர் மனம்நொந்து கொள்கிறான். அப்போது அங்கே நடக்கும் 'மேஜிக் ஷோ'வில் யானை ஒன்று மந்திரவாதியால் தற்செயலாக வரவழைக்கப்படுகிறது.
ஆனால் அதனை அந்த நாட்டின் அரசு அபகரித்து கொள்கிறது. இதனையறிந்த பீட்டர் அரசவைக்கே சென்று தன்நிலையை தெரிவிக்கிறான். ஆனால் அரசன் சில சவால்களை கொடுக்கிறார்.
சவால்களை சமாளித்து யானையை பீட்டர் பெற்றானா? தன் தங்கையை அவன் சந்தித்தானா? என்பதே தி மேஜிசியன்ஸ் எலிபெண்ட் படத்தின் கதை. யானைகளின் குணாதிசயங்களையும் இதில் விவரித்துள்ளனர்.
ஒரு நல்ல நீதியை இந்த படம் பார்ப்பவர்களுக்கு கொடுக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யானையை பிடிக்காதவர்கள் இருக்கமுடியாது. அந்த வகையில் இதனை அனைவரும் ரசிப்பார்கள்.