< Back
முத்துச்சரம்
சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்
முத்துச்சரம்

சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்

தினத்தந்தி
|
16 Oct 2023 4:28 PM IST

ஓடிடி வலை தளங்களில் பல சுவாரசியமான தொடர்கள் வெளியாகி வருகின்றன அவற்றில் சில திரை படங்களை பற்றி காண்போம்...

அமேசான் பிரைம் தளத்தில் வெளியான 'தி பாய்ஸ்' தொடர், புதுவித கதைத்தன்மை காரணமாக ஏகபோக வரவேற்பை பெற்றது. அதன் 'ஸ்பின் ஆப்' தொடராக இது வெளியாகியுள்ளது.

சூப்பர் ஹீரோக்களை உருவாக்கி காசு பார்க்கும் கம்பெனி 'வோட்'. அது நிர்வகிக்கும் 'காட்' பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்படும் மாணவர்கள் பட்டை தீட்டப்பட்டு சூப்பர் ஹீரோக்கள் ஆகிறார்கள். உடலில் ஊறும் ரத்தத்தை ஆயுதமாக மாற்றும் விசித்திர சக்தி கொண்ட நாயகி மேரி மோரோ பெற்றோரை இழந்து அனாதை இல்லத்தில் வளர்கிறார். காட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு மேரிக்கு கிடைக்கிறது. அதனை பயன்படுத்தி 'தி 7' ஹீரோக்கள் குழுவில் இணையும் முதல் கருப்பின பெண்ணாக முயற்சிக்கிறார். உடல் வளர்ச்சியை கூட்டி குறைக்கும் எம்மா, தீப்பிழப்பு கக்கும் லூக், உருவம் மாறும் ஜோர்டன், உலோகங்களை வளைக்கும் அண்ட்ரே, மனதை கட்டுப்படுத்தும் கேத் ஆகியோருடன் நட்பை வளர்க்கிறாள்.

இனவேறுபாடு காரணமாக திறனை நிரூபிக்க போராடும் வேளையில் லூக்குடன் பிறந்த சகோதரன் மர்மசாவு குறித்தான செய்தி உலா வருகிறது. வோட் நிறுவனமே இதற்கு காரணம் என புதியவர்களுக்கு புலப்பட நண்பர்கள் ஒன்றுகூடி இருளில் வெளிச்சம் பாய்க்க முயற்சிக்கிறார்கள். இதனால் இவர்கள் சந்திக்கும் சவால்கள், விளைவுகளை உள்ளடக்கிய டார்க்-பேன்டசி தொடர்.

சூப்பர் ஹீரோக்களை பிரபலங்களாகவும், அரசியல்வாதிகளை, செல்வாக்கு மிக்கவர்களாகவும் பாவிக்கும் உலகம். கார்ப்பரேட் கம்பெனியின் நிழலில் இருந்து கொண்டு சக்திகளை துஷ்பிரயோகம் செய்யும் 'சூப்' கள். இவர்களை எதிர்த்து சாதாரண மனிதர்கள் போராடுவதை தெளிந்த முறையில் காட்சிப்படுத்தும் தொடரை பின்பற்றிய இந்த புது ஆக்கம், வரும் தலைமுறை சார்ந்த கதைக்களத்துக்கு அச்சாரம் போட்டுள்ளது.

சூனா

மாநிலத்தின் மந்திரியான அவினாஷ் 'கால்குலேட்டர்' சுக்லாவுக்கு முதல்-மந்திரி ஆக வேண்டும் என நினைப்பு. ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்ட அவர் பணத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்னும் கொள்கை உடையவர். குதிரை பேரத்தை கட்டவிழ்த்து எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க உகந்த கிரக நிலைக்காக காத்திருக்கிறார்.

இதற்காக பணத்தை குவித்து மறைத்து வைக்கிறார். மறுமுனையில் கல்லூரி மாணவன், காண்டிராக்டர், லோக்கல் தாதா, சாமியார் உள்பட 6 பேர் ஒன்றிணைகிறார்கள். இவர்களுடன் மேலும் பெண்கள் இணைய நவக்கிரகங்களாகிறார்கள். சுக்லாவின் அரசியல் வாழ்க்கையை அஸ்தமனமாக்கும் வகையில் திட்டம் தீட்டி பணத்தை சுருட்ட முடிவு செய்கிறார்கள்.

இந்த கூட்டணியின் பின்னணி என்ன? எதற்காக சுக்லாவை பழிதீர்க்க முனைகிறார்கள். அவர்களின் திட்டம் ஈடேறியதா அல்லது அவினாஷின் நம்பிக்கை துளிர்த்ததா என்பதை பரபரக்கும் 8 எபிசோடுகளை கொண்டு 'ஹெய்ஸ்ட்' கதையாக எடுத்துள்ளனர்.

சூழ்ச்சியுடன் கூடிய புத்திசாலித்தனமான கதாபாத்திரங்களை சேர்த்து திரைக்கதையில் புதுமையை புகுத்த முயன்ற படைப்பாளர் புஷ்பேந்திர நாத் மிஸ்ராவுக்கு ஒரு 'ஹை-பை'. சமகால அரசியல்வாதிகளை முன்னிறுத்தும் அவினாஷ் சுக்லா பாத்திரத்தில் ஜிம்மி ஷெர்கில் கச்சிதமாக பொருந்துகிறார்.

பிற்படுத்தப்பட்ட சமூகக்கட்சி உறுப்பினரான மாமாவின் சாவு மாணவன் (ஆஷிம் குலாட்டி) கண்முன்னே நிகழ வன்மத்தை மனதில் பற்றுகிறார். மேலும் அரசியல்வாதியால் பாதிக்கப்படும் ஞானேந்திர திரிபாதி, விக்ரம் கோச்சார் வகையறா ஒன்று சேர, பின்னர் நடக்கும் காமெடி கலாட்டாவை பார்வையாளர்களுக்கு அர்ப்பணித்து விடுகிறார்கள்.

தொடர் வஞ்சிப்பு வறியவர்களையும் அசுரர்களாக்கும் எனச் சொல்லும் இந்த படைப்பு நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழில் காணக்கிடைக்கிறது.

குமாரி ஸ்ரீமதி

அமேசான் தளத்தில் வெளியாகியுள்ள இந்த புரட்சிகர தெலுங்கு தொடரை தமிழிலும் காணலாம். திருச்சிற்றம்பலத்தின் 'ஷோபனா' பாத்திரம் ஏற்படுத்திய தாக்கம் தணியாத நிலையில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படைப்பின் பாத்திரத்தை நித்யா மேனன் ஏற்று நடித்துள்ளார்.

தந்தையை இழந்து தடுமாறும் குடும்பத்தை கரைசேர்க்கும் பொறுப்பு ஸ்ரீமதிக்கு உரியது. ஓட்டல் நிர்வாகத்தில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு அங்குள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்க்கிறார். தாத்தா உழைப்பில் கட்டப்பட்ட பண்ணை வீட்டை தனது சித்தப்பா விற்க முயற்சிப்பது அவருக்கு தெரிய வருகிறது. தாத்தாவிடம் அந்திம காலத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி சொத்தை விற்க ஸ்ரீமதி மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் வழக்கு கோர்ட்டு வரை செல்கிறது.

சொத்து மீது உரிமை கொண்டாட வேண்டும் எனில் காசு கொடுத்து வாங்கிக் கொள்ள கோர்ட்டு அறிவுறுத்துகிறது. அதற்காக 38 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. கையறு சூழலில் இருக்கும் ஸ்ரீமதி பணத்தை திரட்டும் முயற்சியில் களம் இறங்குகிறார். தான் வசிக்கும் சிற்றூரில் மதுபான 'பார்' இல்லாததை அறியும் அவர், அதனை தொடங்க முடிவு செய்கிறார்.

இதனால் குடும்பத்துடன் ஸ்ரீமதி சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? காலக்கெடுவுக்குள் பணத்தை திரட்டி சொத்தை மீட்டாரா? என்பதை பெண் வாழ்வியல் யதார்த்தத்துடன் 8 எபிசோடுகளில் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் கோமேஷ்.

30 வயது கடந்தும் திருமணமாகாத குமாரியாக நித்யா மேனன் வாழ்ந்துள்ளார். அவரின் சினிமா பயணத்தில் இந்த பாத்திரம் ஒரு மைல் கல். கதாபாத்திரத்தின் பாரத்தை தோளில் சுமந்துகொண்டு சுயாட்சி புரிகிறார்.

தாய் பாத்திரத்தில் கவுதமி முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துகிறார். பெண் அதிகாரமளித்தல் குறித்து சொல்லும் இதனை குடும்பத்துடன் பார்க்கலாம்.

சார்லி சோப்ரா

மர்மம் மற்றும் துப்பறிவு புதினங்களின் ராணி என்றழைக்கப்படும் அகதா கிறிஸ்டியின் படைப்புகள் உலகப்புகழ் பெற்றவை. இவருடைய படைப்புகள் தழுவல் பெற்று பிரபலமாகி வருகின்றன. அந்தவகையில் இந்தி மொழித்தொடரான இந்த சார்லி சோப்ரா, கிறிஸ்டியின் 'தி சித்தாபோர்டு மிஸ்ட்ரி' நாவலை தழுவியது.

பனிபடர்ந்த இமாசல பிரதேசத்தின் சோலங் பள்ளத்தாக்கில் பணி ஓய்வுபெற்ற ராணுவ தளபதி ராவத், ஒண்டிக்கட்டையாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் குரூரமான முறையில் ராவத் படுகொலை செய்யப்படுகிறார். கடைசியாக அவரை சந்தித்துவிட்டு சென்ற மருமகன் ஜிம்மி மீது சந்தேகம் வலுக்க, விசாரணைக்கு இடமின்றி போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.

இதனை அறியும் காதலி சாருலதா 'சார்லி' சோப்ரா பதறுகிறார். தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தும் அவர் ஜிம்மிக்கு தெரிந்தவர். இதனால் சம்பவம் நடந்த ஊருக்கு வந்து துப்பு துலக்க ஆரம்பிக்கிறார். உள்ளூர் நிருபர் ஒருவரின் உதவியுடன் ஜிம்மியின் குடும்ப உறுப்பினர்களை வேவு பார்த்து விசாரணையை முன்னெடுக்கிறார். அப்போது புதிரான மர்மங்கள் பல கட்டவிழ்க்கப்படுகின்றன. மேலும் குடும்பத்தின் கருப்பு பக்கங்களும் புரட்டப்பட இறுதியில் கொலையாளி யார் என்பதை நாயகி கண்டுபிடிப்பதே இதன் கதை.

சார்லி சோப்ராவாக வாமிகா கபி அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். துப்பறியும் நிபுணருக்கே உரித்தான நடை, உடை, பாவனையை உள்வாங்கி நடித்துள்ளார். மேலும் நீனா குப்தா, நசுருதீன் ஷா உள்ளிட்டோரும் வருகிறார்கள். குடும்ப உறவுகளின் மகிமை குறித்து வெளிப்படுத்தும் இந்த தொடர் சோனி லிவ்வில் காணக்கிடைக்கிறது.

மேலும் செய்திகள்