< Back
முத்துச்சரம்
சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்
முத்துச்சரம்

சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்

தினத்தந்தி
|
23 Sept 2023 2:12 PM IST

லவ் அட் பர்ஸ்ட் சைட்

காதலை மையமாக கொண்டு இதே பெயரில் ஜெனிபர் ஸ்மித் 2011-ல் எழுதிய நாவல் இளம்தலைமுறையினரின் ஆசைகளை தட்டி எழுப்பியது. இதனை மையமாக தழுவி நெட்பிளிக்ஸ் படம் தயாரித்து வெளியிட்டுள்ளது.

தந்தையின் 2-வது திருமணத்திற்காக நியூயார்க் நகரில் இருந்து லண்டனுக்கு ஹாட்லி விமானத்தில் செல்கிறாள். விமான சோதனைச்சாவடியில் வைத்து லண்டன் மாணவனான ஒலிவரை சந்திக்கிறாள். பார்த்தவுடனே இருவர் மனதிற்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன. அதற்கு காரணமான வேதியல் மாற்றங்களை காதல் தேவதை அவர்களுக்குள் உணர செய்கிறாள். 7 மணி நேரப்பயணத்தில் காதலை வளர்க்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கிறாள். விமானம் தரையிறக்கத்திற்கு பின்னர் நாயகியிடம் தன் செல்போன் எண்ணை நாயகன் பகிர்ந்து விட்டு பிரிகிறான். விபத்தில் காதலனின் செல்போன் எண்ணை நாயகி தவறவிடுகிறாள். 1 நாள் காதலை வாழ்நாள் முழுவதும் கொண்டாட முடிவு செய்து இருவரும் தங்கள் துணையை தேடி செல்கிறார்கள். விதி அவர்களை சேர்த்து வைத்ததா என்பதை 1½ மணிநேரத்தில் எடுத்துள்ளனர்.

ஹாட்லியாக ஹாலி லூ நடித்துள்ளார். ஒலிவர் பாத்திரத்தில் பென் ஹார்டி வருகிறார். இருவரின் பங்களிப்பும் படத்தில் மாயாஜாலத்தை நிகழ்த்தியுள்ளது. காதல் தேவதையாக ஜமீலா வந்து கதையோட்டத்தை தன் வசீகர குரலால் விவரிக்கிறார். பால் ஆண்டர்சனின் இசை மனதை வருடும். ஒரு நல்ல காதல் படத்தை பெண் இயக்குனர் வனேசா காஸ்வில் படைத்துள்ளார்.

மை 3

ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற கொரியன் தொடர் 'ஐ அம் நாட் ரோபோட்'டின் தமிழாக்கமே மை 3. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி பட இயக்குனர் எம்.ராஜேஷின் முதல் ஓ.டி.டி படைப்பு.

ஊட்டியை சேர்ந்த கோடீஸ்வர தொழில் அதிபர் முகின் ராவ். தனிமையில் வாடும் அவரை அரிய நோய் ஒன்று தாக்குகிறது. இதனால் ஒரு துணை வேண்டி ஏங்குகிறார். இந்த நிலையில் விஞ்ஞானி சாந்தனுவிடம் இருந்து மனித உருவ ரோபோவை ஆர்டர் செய்கிறார். மேலும் ஆராய்ச்சிக்கு முதலீடு செய்வதாகவும் வாக்கு கொடுக்கிறார். டெலிவரிக்கு முன் ரோபோவை சோதிக்கும்போது திடீர் கோளாறு ஏற்படுகிறது.

கலங்கும் சாந்தனு முன்னாள் காதலி ஹன்சிகாவிடம் உதவி கேட்கிறார். ஹன்சிகாவின் உருவத்தை ஆதாரமாக கொண்டு ரோபோ உருவாகி இருந்ததே அதற்கு காரணம். பணத்தேவை காரணமாக ஹன்சிகா உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கொண்டு முகின் வீட்டிற்கு செல்கிறார். அதன் பின் நடந்தது என்ன? முகின் ராவ்வின் தனிமை ஒழிந்ததா? என்பதை உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

இளம் தொழில் அதிபராக முகின் ராவ் கச்சிதமாக பொருந்துகிறார். பெற்றோரை இழந்து நோயில் தவிக்கும் பாத்திரத்திற்கு நடிப்பை கொட்டி நியாயம் சேர்ந்துள்ளார். விஞ்ஞானியாக சாந்தனு தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் வாங்குகிறார். மேலும் ஜனனி, சுப்பு பஞ்சு, நாராயணன் லக்கி ஆகியோர் வருகிறார்கள். படத்தின் தூணான மைத்ரி மற்றும் மை 3 பாத்திரத்தில் ஹன்சிகா அதகளம் செய்துள்ளார். ரோபோவாக அலப்பறைகளை செய்யும் அவர் உணர்ச்சி பொங்கவும் நடித்து அசத்துகிறார். வித்தியாசமான திரைக்கதை காரணமாக ரசிகர்களை காணத் தூண்டும் படைப்பு.

எ மில்லியன் மைல்ஸ் அவே

சிறுவயதில் பலருக்கு பலவகையான கனவுகள் இருக்கும். டாக்டர், என்ஜினீயர், நடிகர் என அடுக்கிக் கொண்டே போகலாம். குடும்ப சூழ்நிலை, பொறுப்புகள், பணவசதி உள்ளிட்ட காரணங்களால் கனவுகள் லட்சியமாக மாற தடைபடும். அதனை மீறி விதிவிலக்காகி சாதிப்பவர்கள் காலச்சுவடுகளில் இடம் பிடிக்கிறார்கள். அந்த பட்டியலில் ஒருவர் ஜோஸ் ஹெர்னாண்டஸ்.

மெக்சிகோவில் இருந்து பஞ்சம் பிழைக்க வேண்டி பெற்றோருடன் சிறுவன் ஜோஸ் அமெரிக்கா வருகிறான். இளமைகாலம் முதற்கொண்டு விண்வெளி வீரராக வேண்டும் என்னும் வெறி ஜோசின் மனதில் குடிகொண்டு இருக்கிறது. இருப்பினும் குடும்ப சூழல் காரணமாக நாடோடி வாழ்க்கை வாழும் அவனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாதநிலை. ஜோஸ் திறமையை அறியும் ஆசிரியர், பெற்றோரிடம் அவன் மகத்துவத்தை விவரிக்க ஆசைகளை ஓரம்கட்டி விட்டு மகனுக்காக வாழ தொடங்குகிறார்கள்.

படிப்பில் நிபுணத்துவம் பெறும் ஜோஸ் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டே நாசாவில் சேர முயல்கிறார். இருப்பினும் தொடர்ச்சியாக அவருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இடையே திருமணம் ஆகி குழந்தைகளும் பிறக்கின்றன. லட்சியத்தை அடையும் நோக்கில் குடும்பத்திற்கு தெரியாமல் பல திறன்களை கற்று தேர்கிறார். நிராகரிப்பு கடிதங்கள் கட்டுக்கட்டாக குவிந்து தோல்வியின் விளிம்பை காண்கிறார். பல வருட போராட்டத்திற்கு பின்னர் நாசாவின் 'முதல் குடிபெயர்ந்தோர் வீரர்' என்னும் பெருமை ஜோஸ் ஹெர்னாண்டசுக்கு உரித்ததாக மாறுகிறது.

ஜோஸ் வாழ்க்கையை தழுவி அலெஜான்ட்ரா மார்க்வெஸ் அபெல்லா இயக்கியுள்ளார். நேரடி ஓ.டி.டி படமாக அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. ஜோஸ் பாத்திரத்தில் அலெக்ஸ் பினா வாழ்ந்துள்ளார். இதில் கல்பனா சாவ்லாவுக்கும் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து முயன்றால் வயலில் இறங்கி வேலை பார்ப்பவரும் வானத்தை தொடலாம் என்பதை உணர்த்தும் படைப்பு.

எலிமென்டல்

கிரேக்க தத்துவஞானி எம்பெடோகில்ஸ் கூற்றின்படி நீர், நிலம், நெருப்பு, காற்று ஆகியவற்றால் ஆனது பூமி. இந்த பூதங்களை கதாபாத்திரங்களாக கொண்டு சிந்திக்க தூண்டும் வகையில் அனிமேஷன் படத்தை டிஸ்னி படைத்து ஹாட்ஸ்டாரில் வெளியிட்டுள்ளது. எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு மிஞ்சும்போது காதலாக மாறும். அதனை மையக்கருவாக கொண்டது.

தாய்நாட்டில் இருந்து 'எலிமென்ட்' நகருக்கு எம்பரின் குடும்பம் (தீ அம்சம்) புலம்பெயர்கிறது. அங்கு நீர் அம்சத்தினர் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். ஓட்டல் ஒன்றை நகரில் நிறுவி பிழைக்கும் எம்பரின் அப்பா நீர் அம்சத்தினர் மீதான வெறுப்பை மறைத்து வாழ்கிறார். தொழிலை கதாநாயகி எம்பரிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுக்க விரும்புகிறார். ஆனால் கோபக்காரியான எம்பரால் தொழிலில் ஜொலிக்க முடியுமா என்ற அச்சம்...

அச்சமயத்தில் எம்பரின் வாழ்வில் நீர் அம்சமான வேட் நுழைகிறான். கண்டவுடன் இருவருக்குள்ளும் ஈர்ப்பு உண்டாகிறது. ஆனால் இருவேறு இனத்தவர்கள் எவ்வாறு இணைய முடியும் என சமூகம் யோசிக்கிறது. மேலும் எம்பரின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். சிவப்பு கொடி காட்டி காதலை பிரிக்கிறார். இதனால் தவிப்பு மேலோங்க சவால்களை தாண்டி காதலர்கள் இணைவதை நெகிழ்ச்சியான கதை வழியே காட்சிப்படுத்தியுள்ளனர்.

எம்பர் பாத்திரத்திற்கு லே லூயிஸ் குரல் கொடுத்துள்ளார். வேடாக அதி வருகிறார். காமெடி, மனதை மயங்கும் கிராபிக்ஸ் தொழில்நுட்பம், உணர்ச்சி பொங்கும் உரையாடல்களை கொண்டு இயக்குனர் பீட்டர் சோன் செதுக்கியுள்ளார். குழந்தைகளுடன் பார்க்க தகுதியான இது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் காணக்கிடைக்கிறது.

மேலும் செய்திகள்