< Back
முத்துச்சரம்
சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்
முத்துச்சரம்

சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்

தினத்தந்தி
|
2 Sept 2023 9:38 AM IST

ப்ரோ

சமுத்திரக்கனி இயக்கி நடித்து கடந்த 2021-ம் ஆண்டு நேரடி ஓ.டி.டி படமாக வினோதய சித்தம் வெளியாகி வரவேற்பு பெற்றது. தெலுங்கு சினிமாவில் தன் நடிப்பால் பீடுநடை போட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் சமுத்திரக்கனி 'பவர் ஸ்டார்' பவன் கல்யாணுக்காக இதனை மறு ஆக்கம் செய்துள்ளார்.

ஐதராபாத்தில் உள்ள கம்பெனியில் உயர் பதவி வகிக்கும் மார்க்கண்டேயலுவுக்கு உலகம் தன்னை மையமாக வைத்தே சுற்றுவதாக நினைப்பு. குடும்ப பொறுப்புகளை தலையில் சுமந்தாலும் உறுப்பினர்களுக்காக நேரத்தை செலவழிப்பதில்லை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என வழியை அமைத்து கொண்டு பயணிக்கும் மார்க்கண்டயேலு திடீரென சாலை விபத்தில் சிக்குகிறார். உடலை விட்டு ஆன்மா போகக்கூடிய நேரத்தில் காலதூதனை சந்திக்க நேர்கிறது. கெஞ்சிக் கூத்தாடி தன் வாழ்நாளை நீட்டிக்க மார்க்கண்டேயலுவின் ஆன்மா மன்றாடுகிறது. கடமைகளை முடிப்பதற்கான அரிதான வாய்ப்பு காலதூதனால் வழங்கப்படுகிறது. கொடுக்கப்பட்ட 90 நாட்களுக்குள் பூமியில் நாயகன் செய்தது என்ன? தன்நிலையை அவன் உணர்ந்து கொண்டானா? என்னும் கேள்விகளுக்கு கற்பனையான கதையை கொண்டு விடை சொல்லியுள்ளனர்.

மார்க்கண்டேயலுவாக சாய்தரம் தேஜ் நடித்து உள்ளார். தமிழில் தம்பி ராமையா ஏற்று நடித்த வேடத்திற்கு உயிர் கொடுக்க முயன்றுள்ளார். காலதூதனாக பவன் கல்யாண் அசத்தியுள்ளார். அடிதடி இல்லையென்றாலும் எமோஷனலாக அட்டாக் பண்ணுவது, போதனைகள் போதிப்பது என 'ப்ரோ' வாக மனதிற்குள் பதிகிறார். திரைக்கதை, வசனம் ஏரியாவில் 'அல வைகுண்டபுரமுலோ' புகழ் திரிவிக்ரம் சீனிவாஸ் நின்று விளையாடி உள்ளார். ரசிகர்களை கவர்ந்த இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் காணக்கிடைக்கிறது.

டன்ஜன்ஸ் அண்டு டிராகன்ஸ்

உலக அளவில் மிகவும் பிரபலமான பலகை விளையாட்டு டன்ஜன்ஸ் அண்டு டிராகன்ஸ். டிஅன்டி என சுருக்கமாக அழைக்கப்படும் இதனை 80-களில் பிறந்த அமெரிக்கர்கள் விரும்பி விளையாடினர். போர் யுக்தி, சமூக திறன்கள், படைப்பாற்றல், சோதனைகளை கட்டவிழ்ப்பது, வாழ்க்கை பாடம் போன்றவற்றை கற்றுத்தரும் வகையில் வேடிக்கையாகவும், ஈர்க்ககூடிய வகையிலும் வடிவமைத்திருப்பர். இந்த விளையாட்டை மையமாக தழுவி ஹாலிவுட்டை கோலோச்சும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் படம் எடுக்க போட்டிப்போட்டன. நீண்ட இழுபறிக்கு பின்பு திரைப்படமாக எடுக்கப்பட்டு தியேட்டர்களில் வெளியாகி அதன் விசிறிகளை குஷிப்படுத்தியது. தற்போது அமேசான் பிரைமில் காணக்கிடைக்கிறது.

களவாடுவதில் நிபுணரான எட்கின், தன் பிழை காரணமாக இன்னுயிர் மனைவியை பறிகொடுக்கிறார். பெண் குழந்தையுடன் வெறுமையில் வாழும் எட்கினுக்கு ஹோல்காவின் நட்பு கிடைக்கிறது. இந்த நிலையில் இறந்தவர்களை உயிர்த்தெழ வைக்கும் பழந்தகடு குறித்து அவனுக்கு தெரிய வருகிறது. அதனை திருடி மனைவியை மீட்கும் முயற்சியில் குழுவுடன் களம் இறங்க சூழ்ச்சியால் திட்டம் பாழாகிறது. இதனால் தன் மகளை நாயகன் பிரியும் நிலை. பிரிந்த மகளுடன் நாயகன் சேர்ந்தாரா? தன் காதல் மனைவியை உயிர்த்தெழ வைத்தாரா? என்பதை கிளைமாக்ஸ் வரை சஸ்பென்சுடன் செதுக்கியுள்ளனர்.

அக்மார்க் நடிப்புத்திறனை நாயகன் கிறிஸ் பைன்ஸ் வெளிப்படுத்தியுள்ளார். மனைவி-மகளை பறிகொடுக்கும் காட்சிகளில் பரிதாபத்தை அள்ளுகிறார். காமெடி, பாட்டு பாடுவது என ஜாலியாகவும் இருக்கிறார். படத்திற்கு தூணான பாத்திரங்களில் மிச்செல் ரோட்ரிக்சும், ஹக் கிரேண்டும் வருகிறார்கள். கிராபிக்ஸ் காட்சிகளில் தொழில்நுட்ப குழுவினரின் உழைப்பு தெரிகிறது. குடும்பத்துடன் பார்த்து மகிழக்கூடிய வகையில் படம் அமைந்துள்ளது.

நெய்மர்

குஞ்சாவாவும், சிண்டோவும் இணைபிரியா தோழர்கள். பிரேசில் நாட்டு கால்பந்து பிரபலமான நெய்மரின் தீவிர விசிறிகளாக இருக்கிறார்கள். இந்தநிலையில் உடன்படிக்கும் மாணவியை கவர நண்பனின் யோசனையை குஞ்சாவா நாடுகிறான். அதன்படி நாய் ஒன்றை வளர்க்க முடிவெடுக்கிறார்கள். நெய்மர் என்னும் பெயரிட்ட நாட்டு நாயை பாசத்தை ஊட்டி வளர்க்கிறார்கள். இந்தநிலையில் குறும்புத்தனத்தால் ஊராரின் வம்பை நண்பர்களின் நாய் விலைக்கு வாங்குகிறது. இதனால் அதனை எங்காவது கொண்டுபோய் விட குஞ்சாவாவின் அப்பா முடிவெடுக்கிறார். புதுச்சேரிக்கு செல்லும் வண்டியில் நெய்மரை ஏற்றி விட்டு சாவகாசமாக வீடு திரும்புகிறார். அந்த சேதி நண்பர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

உணர்வுகளை பகிர்ந்து கொண்ட நண்பனை இழந்த துக்கம் குஞ்சா-சிண்டோவை வாட்டுகிறது. இதனால் நெய்மரை தேடி நண்பர்கள் புதுவை விரைகிறார்கள். அங்கு லோக்கல் தாதாவான கேப்ரியலின் கட்டுப்பாட்டில் நெய்மர் இருப்பது தெரிகிறது. செல்லப்பிராணியை மீட்கும் முயற்சியில் நண்பர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? நண்பர்களுடன் நெய்மர் வீடு திரும்பியதா? என்பதை காமெடி கலந்து உணர்வுபூர்வமாக சொல்லியுள்ளனர். குஞ்சாவாவாக மேத்யூ தாமஸ் வருகிறார். சிண்டோவாக நாஸ்லென் அசத்தியுள்ளார். இந்த இணைக்கு இது 3-வது படம். படைப்பின் நாயகனாக வளர்ப்புநாய் 'நெய்மர்' வலம் வருகிறது. தன் சுட்டித்தனத்தால் மனதிற்கு நெருக்கமான பாத்திரமாக மாறுகிறது. அதற்கு பயிற்சி கொடுத்தவர்கள் போற்றுதலுக்குரியவர்கள். மேலும், அதன் குறும்புகளை ரசிக்கும் வகையில் இயக்குனர் சுதி மடிசன் படம்பிடித்துள்ளார். கோபி சுந்தருடன் இணைந்து ஷான் ரகுமான் போட்டுள்ள இசை துள்ளாட்டம் போட வைக்கும். விலங்கு வளர்ப்பு பிரியர்களை கவரும் வகையில் எடுத்துள்ள இந்த பொழுதுபோக்கு படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் காணலாம்.

ஹூ இஸ் எரின் கார்டர்?

பார்சிலோனா நகரில் கணவர் ஜோர்டின்-மகள் ஹார்பருடன் வசிப்பவர் எரின். மகள் படிக்கும் பள்ளியிலேயே ஆசிரியராகவும் பணிபுரிகிறாள். சக மாணவனுடன் ஏற்பட்ட மோதலில் பென்சிலால் ஹார்பர் அவனை வகுப்பில் வைத்து குத்திவிடுகிறார். சுட்டிக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் என அனைவருக்கும் ஆச்சரியம். வீடு திரும்பும் வழியில் இதுகுறித்து மகளுடன் எரின் காரசாரமாக விவாதிக்கிறாள். அப்போது சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குள் இருவரும் நுழைய அங்கு திருட்டு சம்பவம் ஒன்று அரங்கேறுகிறது. தன் சாமர்த்தியத்தால் அதனை தடுக்கும் எரினை திருடர்கள் அடையாளம் கண்டு கொள்கிறார்கள். இதனால் ஒருவர் அடித்து கொல்லப்பட மற்றொருவர் தப்பிவிடுகிறார்.

சம்பவத்திற்கு பின் ஊர் மக்கள் எரினை கொண்டாடுகிறார்கள். ஆனால் 'விட்ட பகை' அவளை துரத்த ஆரம்பிக்கிறது. குடும்ப பொறுப்புகள் கொண்ட இந்த சாதாரண பெண்ணால் எவ்வாறு திருடர்களை சமாளிக்க முடிந்தது? யார் இந்த எரின் கார்டர்? அவளின் பின்னணி என்ன? என்பதை பரபரக்கும் ஆக்ஷன் படத்தில் சொல்லியுள்ளனர்.

எரின் கார்டராக சுவீடன் நாட்டு நடிகை எவின் அகமது அசத்தியுள்ளார். ஊரை ஏமாற்றும் அப்பாவியாக நடித்து திறமை காட்டியுள்ளார். தன் வாழ்வு குறித்து மறைக்க முயலும் எரினை ஒரு கட்டத்தில் குடும்பமே சந்தேகப்படுகிறது. அச்சமயத்தில் எதிரிகளால் குடும்பத்துக்கு சோதனையும் வருகிறது. மகள்-கணவரின் உயிர்களை காப்பாற்ற வேண்டி எரின் மறுரூபமாக, அனல் பறக்கிறது. பிளாஷ்பேக் காட்சிகள் மற்றும் தொடர் முடிவில் எதிரிகளை துவம்சம் செய்து அசத்தியுள்ளார். 7 எபிசோடுகளுடன் நெட்பிளிக்சில் வெளியாகியுள்ள இந்த தொடர் ரசிகர்களுக்கு விருந்து படைக்க தவறாது.

மேலும் செய்திகள்