< Back
முத்துச்சரம்
சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்
முத்துச்சரம்

சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்

தினத்தந்தி
|
12 Aug 2023 7:29 AM IST

கார்டியன்ஸ் ஆப் தி கேலக்சி-3

தொடர் சறுக்கலுக்கு பின் தியேட்டர்களில் வெளியாகி சக்கைப்போடு போட்ட மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்ஸ் படம். கார்டியன்ஸ் தங்கியிருக்கும் 'நோவேர்' கிரகம் திடீர் தாக்குதலுக்குள்ளாகிறது. ராக்கெட் ரக்கூனை கவர்ந்து வர அசுரன் ஆடம் வார்லாக் முடுக்கி விடப்படுகிறான். தாக்குதலில் எப்படியோ கார்டியன்ஸ் குழுவினர் பிழைக்கிறார்கள். ஆனால் ராக்கெட்டின் உயிர்போகும் சூழல். தன் உற்ற நண்பனை காப்பாற்ற கார்டியன்ஸ் குழுவினர் விண்வெளியை சுற்றி வருகிறார்கள். பயணத்தில் ராக்கெட் குறித்தான பரம ரகசியங்கள் வெளிவருகின்றன. கூடவே கொடூர வில்லனின் அறிமுகமும். வில்லனை எதிர்த்து ராக்கெட்டை நண்பர்கள் காப்பாற்றினார்களா? என்பதே இதன்கதை. மனதை மயக்கும் கிராபிக்ஸ் காட்சிகள், பரபரக்கும் ஆக்ஷன், 80-களில் வெளியான பாப் மியூசிக், டைமிங் காமெடி என 'பொடிமாஸா'ன திரைக்கதை கொண்டு மாஸ் காட்டியுள்ளார் இயக்குனர் ஜேம்ஸ் கன். முந்தைய 2 பாகங்கள் வழியே கார்டியன்ஸ் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து விட்டு தன் மார்வெல் பயணத்தை இத்துடன் முடித்துள்ளார். இருப்பினும் குறை ஏதுமின்றி முந்தைய பாகங்களையே தூக்கி சாப்பிடும்படி எடுத்துள்ளார்.

கிறிஸ் ப்ராட், பட்டிஸ்டா, ராக்கெட்டின் குரலாக பிராட்லி கூப்பர், மரமனிதன் குரூட்டாக வின் டீசல் என நட்சத்திர பட்டாளம் சேர்ந்த படைப்பில் பெண் பாத்திரங்களான நெபுலா (கிலியன்), கமோரா (ஜோ சல்டானா), மான்டிஸ் (பிரெஞ்சு நடிகை பாம்) ஆகியோரும் அசத்தியுள்ளனர். சீன் கன், சில்வர் ஸ்டேலோன் ஆகியோரும் கொடுத்த பாத்திரத்தில் நிறைவாக வருகிறார்கள். மார்வெல் வெறியர்கள் மட்டுமின்றி குடும்பத்துடன் பார்த்து மகிழக் கூடிய இது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் உள்ளது.

தி ஹன்ட் பார் வீரப்பன்




குற்ற வரலாற்றில் தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிய 'சந்தனக்கடத்தல் வீரப்பன்' கதை. இவரை வைத்து பல படங்கள், நாவல்கள், குறுங்கதைகள், பாடல்கள் என எடுக்கப்பட்டாலும் படைப்பாளிகளுக்கு ஒரு அட்சய பாத்திரமாக இருப்பவர். ராபின்ஹூட்டாக சிலரால் கொண்டாடப்பட்டவர். ஏராளமான யானைகளை வதம் செய்தல், சந்தன மரங்களை வெட்டுதல், ஆள் கடத்தல், கொலை உள்ளிட்ட காரணங்களுக்காக சமூக விரோதி என்று வரையறுக்கப்பட்டவர். நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள இந்த ஆவணப்படம் மேற்கு தொடர்ச்சி மலை முகடுகளை தன் உள்ளங்கையில் வரைந்து வைத்திருந்த வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை குறித்த படைப்பு. இயக்குனர் செல்வமணி செல்வராஜின் தைரிய படைப்பான இது 4 பாகங்களை கொண்டது. அவரின் மனைவி உள்பட பெரும்பாலும் வீரப்பனுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள், முன்னாள் போலீஸ் அதிகாரிகள், போட்டோ கிராபர்கள் உள்ளிட்டோரின் சாட்சியங்கள், வாதங்கள், எண்ணங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்துலட்சுமியின் பார்வையில் இருந்து தொடங்கும் இது ஒரு சாதாரண வேட்டைக்காரன், கடத்தலில் ஈடுபட்டு கேங்ஸ்டராகி வீழ்ந்த கதை.

ஆதிக்கவெறி எவ்வாறு அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை எந்த பக்கமும் சாராமல் சொல்லப்பட்டுள்ளது. வீரப்பனின் குற்றங்களை நியாயப்படுத்தும் வகையில் அமையவில்லை, எனினும் அவரின் நற்குணங்கள் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. மனதுக்குள் பல கேள்விகளை எழுப்பி கட்டிப்போடக்கூடிய படைப்பாக இருப்பினும் ரசித்துவிட்டு கடந்துபோக வேண்டிய ஒன்று.

தி சூப்பர் மேரியோ பிரோஸ்

90-களில் பிரபலமான இந்த வீடியோ கேம் குறித்து தெரியாதவர்கள் சிலரே. இளம்தலைமுறையினருக்கு தன் படைப்பின் கவித்துவத்தை தெரியப்படுத்த அதன் படைப்பாளர் சிகரு மியாமோட்டா விரும்பினார். அவரின் ஐடியாவை ஜூராசிக் பார்க், பாஸ்ட் ஆன் ப்யூரியஸ், மினியன்ஸ் போன்றவற்றை தயாரித்த யூனிவர்சல் பிக்சர்சஸ் செயல்முறைப்படுத்தி இதனை வெளியிட்டுள்ளது. மேரியோவும், லுகியும் இத்தாலியை சேர்ந்த இரட்டை சகோதரர்கள். அமெரிக்காவின் புரூக்ளின் மாகாணத்தில் தங்கியிருந்து பிளம்பிங் தொழில் செய்கிறார்கள். உடைந்த குழாய் ஒன்றை இருவரும் சேர்ந்து சரிசெய்யும் வேளையில் எதிர்பாராமல் பாதாளத்தில் தவறிவிழுகிறார்கள். அங்கே இருவேறு சமூகத்தினர் பிரிந்து வாழ்கிறார்கள்.

அங்கே தேரைகள், குரங்குகள் வாழும் ராஜ்ஜியமான காளான் தேசத்தை இளவரசி பீச் ஆளுகிறாள். சந்தோசம் மிகுந்த அந்த நகருக்கு நேர்மாறாக இருண்ட தேசத்தில் பிரவுசரின் ஆட்சி நடக்கிறது. நாயகன் மேரியோ இளவரசி பீச் தேசத்திலும், தம்பி லுகி பிரவுசரிடமும் அகப்படுகிறார்கள். 'பீச்'சை அடையவேண்டும் என துடிக்கும் பிரவுசர் பிணையாக லுகியை பிடித்து வைத்துக்கொண்டு மேரியோவை மிரட்டுகிறார். தம்பியை காப்பாற்ற முயலும் மேரியோவுக்கு பீச் உதவுகிறாள். பயணத்தில் இவர்கள் எதிர்கொள்ளும் தடைகள், எதிரிகள் ஆகியவற்றை சாதகமாக மாற்றி இருண்ட தேசத்தில் வெளிச்சத்தை பாய்க்க நினைக்கிறார்கள். தமையன் காப்பாற்றப்பட்டானா? வில்லனின் கனவுகள் தகா்ந்ததா என்பதை குறித்தது இதன் கதை. பிரத்யேக காஸ்ட்டியூம்களான பூனை உடை, குள்ளநரி உடை என 'வீடியோ கேம்'மில் காட்டப்பட்ட சிறப்பு அம்சங்களும் அடங்கியுள்ளன. மேரியோவுக்கு கிறிஸ் பிராடும், லுகிக்கு சார்லிடேவும் தங்களின் குரல் பங்களிப்பை செலுத்தியுள்ளனர். சிறுவயது நினைவுகளை தட்டி எழுப்பக் கூடிய இதனை குழந்தைகளுடன் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் காணலாம்.

தயா

டிஸ்னி ஹாட்ஸ்டாரின் திரில்லர் வகை வெப்தொட ரான இது பெங்காலியில் வெளியான தக்தீரை தழுவியது. பவன் சதினேனியால் இயக்கப்பட்டு தமிழிலும் வெளியாகியுள்ளது. நண்பர் பிரபாவுடன் இணைந்து காக்கிநாடா துறைமுகத்தில் மீன்பாடி வண்டி ஓட்டுபவர் தயா. கர்ப்பிணி மனைவியுடன் சந்தோசமாக இருக்கும் தயா தாழ்வு மனப்பான்மை குணம் கொண்டவர். இந்தநிலையில் இவர் வண்டியில் அடையாளம் தெரியாத பெண்பிணம் ஒன்று கிடக்க தயா மனதில் பீதி பீறிடுகிறது. நண்பர்களின் உதவியுடன் அதனை தயா மறைத்து வைக்க முயற்சிக்கிறார்.

மறுமுனையில் பெண் பத்திரிகையாளர் கவிதா மர்மமான முறையில் காணாமல் போக தன் வண்டியில் கிடைத்த சடலம் கவிதா என்பது தயாவுக்கு தெரிகிறது. கவிதா காணவில்லை என அவரின் கணவர் போலீசுக்கு புகார் கொடுக்கிறார். உள்ளூர் அரசியல் ஆளுமையின் அடியாட்களும் கவிதாவின் உடலை தேடுகிறார்கள். இதனால் அமைதியாக சென்றுகொண்டிருக்கும் தயாவின் வாழ்வு புரளுகிறது. எதற்காக கவிதா கொல்லப்பட்டார்? தயா சந்திக்க இருக்கும் பிரச்சினைகள் என்ன என்பது குறித்து பரபரக்கும் சஸ்பென்ஸ் கதை வழியே சொல்லியுள்ளனர்.

தயாவாக ஜே.டி.சக்கரவர்த்தி அட்டகாச நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இறுதியில் கதையின் திருப்பமாக அவரின் கதாபாத்திர மாற்றம் எதிர்பாராதது. பெண் பத்திரிகையாளராக ரம்யா நம்பீசன் வருகிறார். நீதி வேண்டி அவர் எடுக்கும் முயற்சிகள் எக்குதப்பாக அவரின் ஜீவனை பறிக்கும் நிலை. உள்ளூர் எம்.எல்.ஏ.வாக பப்லு பிரித்விராஜ், ஜோஷ் ரவி, ஈஷா ரெபா ஆகியோரின் பாத்திர படைப்பும் சிறப்பு. நல்ல கதை அம்சம் கொண்ட இது அடுத்த பாகத்திற்கும் தொடக்கம் கொடுத்து முடிகிறது.

மேலும் செய்திகள்