< Back
முத்துச்சரம்
சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்
முத்துச்சரம்

சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்

தினத்தந்தி
|
29 July 2023 10:34 AM IST

வாரம் தோறும் ஆன்லைனில் வெளியாகும் தொடர்கள் பற்றி பார்த்துவருகிறோம்.அதைப்போலவே இந்த வாரமும் சில நிகழ்சிகள் பற்றி காண்போம் ...

சின்க்

ஆஹா தளத்தில் வெளியாகியுள்ள திகில் படம் 'சின்க்'. சினிமாத்துறையில் வளர்ந்து வரும் இளம் டைரக்டர் கவுதம். நண்பன் சிபி, அக்காள் மது மற்றும் தோழி நேத்ராவுடன் இன்பச்சுற்றுலாவுக்காக புதுச்சேரி செல்கிறார். நெடுஞ்சாலையில் ஸ்கூட்டர் ஒன்றின் மீது இவர்களின் வாகனம் மோதுகிறது. இளம்பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டு ரத்தவெள்ளத்தில் சரிகிறார். பணபலத்தால் சம்பவத்தை சரிகட்டி விட்டு அங்கிருந்து நைசாக கம்பி நீட்டுகிறார்கள். புதுவை பயணம் 'புஸ்'சாக' மனம்நொந்து அவரவர் வீடு திரும்புகின்றனர்.

எங்கே நாம் மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தில் மறுநாள் 'வீடியோ கால்' வழியே நண்பர்கள் ஒன்றுகூடி நடந்தவற்றை அலசுகிறார்கள். ஒருவர் மீது ஒருவர் வசைபாடுகிறார்கள். அப்போது அவர்களுடன் 5-வதாக ஒருவர் இணைகிறார். யார் அவர் என யூகிப்பதற்குள் திடீர் திருப்பம் ஏற்படுகிறது.

கொரோனா காலத்தில் வீடியோ கால் மிகவும் பிரபலமானது. அதனை மையமாக வைத்து இந்த படத்தை காட்சிப்படுத்தியுள்ளனர். இயக்குனர் உள்பட தொழில்நுட்ப வல்லுனர்கள் பெரும்பாலும் புதுமுகங்கள். கதைக்கு வலு கூட்டும் வகையில் 'முதல் நீ முடிவும் நீ' புகழ் கிஷன் தாஸ் முதன்மை பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். மோனிகா, நவீன் ஜார்ஜ், சவுந்தர்யா ஆகியோர் கொடுத்த பாத்திரத்துக்கு நியாயம் சேர்த்துள்ளனர். 1½ மணிநேரமே செல்லும் இந்த படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. தன்னை கொன்றவர்களை பழிவாங்கும் பழைய பாடா(ஆ)வி கதையாக இருந்தாலும் புதுவித அணுகுமுறை கொண்ட இதனை ரசிக்கலாம்.

தி கன்வெனன்ட்

ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கு எதிரான போரில் அமெரிக்க ராணுவத்தினர் ஈடுபட்டனர். சிறப்பு விசா உள்ளிட்ட தனிச்சலுகைகள் வழங்குவதாக கூறி உள்ளூர் மக்களை ராணுவ வீரர்கள் பயன்படுத்தி கொண்டனர்.

வெறும் கருவிகளாக பார்க்கப்பட்ட அவா்கள் ராணுவத்தின் வெளியேற்றத்திற்கு பின் நட்டாற்றில் விடப்பட்டனர் என்பது நிதர்சனம். இந்தப் படம் அமெரிக்க ராணுவத்திற்கு துணைபோனவர்கள் படும் அவலத்தை மையமாக கொண்டது. தனித்துவமான படைப்புகளால் தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் கை ரிச்சி. ராபர்ட் டவுனியின் ஷெர்லாக் ஹோம்ஸ், வில் ஸ்மித்தின் அலாதீன் உள்பட பேன்டசி படங்கள் மட்டுமின்றி ஜேசன் ஸ்டாதமின் வ்ராத் ஆப் மேன், ஆபரேஷன் பார்ச்சூன் போன்ற ஆக்ஷன் படங்களை இயக்கியவர்.

ஆப்கானிஸ்தானில் ராணுவ உயர் அதிகாரி ஜான் தலைமையில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை நடக்கிறது. அப்போது 2 வீரர்களுடன் மொழிபெயர்ப்பாளரும் இறந்துபோக காலியான இடத்தை உள்ளூர்வாசி அகமது நிரப்புகிறார்.

தலீபான்களின் ஆயுத கிடங்கு குறித்து துப்பு கிடைக்க ஜான் தலைமையில் வீரர்கள் அதனை தகர்க்க செல்கிறார்கள். வீரர்களின் வருகையை அறியும் தலீபான்கள் அவர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்த மிஞ்சியது ஜானும், அகமதும் மட்டுமே. கை-கால்கள் உடைந்து மயக்கநிலைக்கு செல்லும் ஜான் மீது அகமது இரக்கம் கொள்கிறார். அவரை உயிருடன் காப்பாற்றி வீடு திரும்ப உதவுகிறார். அமெரிக்க ராணுவத்தினருக்கு உதவிய காரணத்தினால் அகமது மற்றும் அவரின் குடும்பத்தை பின்னர் தலீபான்கள் சித்ரவதை செய்கிறார்கள்.

அதை அறியும் ஜான் ஆப்கானிஸ்தான் செல்ல முடிவு எடுக்கிறார். களத்தில் குதித்து அகமது மற்றும் குடும்பத்தை ஜான் காப்பாற்றுவதே இதன் கதை. போர் காட்சிகளை தத்ரூபமாக காட்சிப்படுத்தியதுடன் மனிதாபிமானம் குறித்தும் எடுத்துள்ளனர். ஜான் பாத்திரத்தில் ஜேக் கில்லென்ஹாலும், அகமதுவாக நடிகர் சலீமும் நடித்துள்ளனர். அமேசான் பிரைமில் இது உள்ளது.

தே குளோன்ட் டைரோன்

அமெரிக்காவில் நடக்கும் கதை இது. ஜனநெருக்கடி மிக்க பகுதியில் போன்டைன் பிழைப்புக்காக போதை மருந்து விற்கிறார். கொடுத்த பணத்தை திரும்ப பெற சார்லஸ் இடத்திற்கு போன்டைன் செல்கிறார். அங்கே இளம்பெண் யோ-யோ முன்னிலையில் எதிரிகளால் போன்டைன் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே சாகிறார்.

மறுநாள் காலை வழக்கம்போல் போன்டைன் படுக்கையில் இருந்து எழுந்திருக்கிறார். சாா்லசை தேடி அவர் செல்கிறார். சார்லசுக்கோ பயம் கலந்த ஆச்சரியம். இறந்தவன் எவ்வாறு உயிர்த்தெழுந்தான் என்பதை யோ-யோவும் நம்ப மறுக்கிறாள். மர்ம வாகனம் ஒன்று போன்டைன் சடலத்தை முன்தினம் இரவு தூக்கி கொண்டு போனதை அவள் விவரிக்கிறாள்.

மர்ம வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் வீட்டினுள் மூவரும் நுழைகிறார்கள். அங்கே நவீன ஆய்வகம் ஒன்றினை அமைத்து ஒருவித பவுடர் தயாரிக்கப்படுவதை காண்கிறார்கள். உணவு, குடிநீர் என சகலத்திலும் அதனை கலந்து மக்களின் மனதை ஆட்டிப்படைக்க முயல்வதும் அவர்களுக்கு தெரிகிறது. மேலும் குளோனிங் முறையில் ஊரின் முக்கிய நபர்களை உருவாக்கி மற்றவர்களை வேரறுக்கும் திட்டமும் வெளிச்சத்திற்கு வருகிறது. மர்ம கும்பலுக்கு மூளை யார்? குரோதத்திற்கு காரணம் என்ன? என்பதை வித்தியாசமான கதையைகொண்டு சுவாரசியமான முறையில் படமாக எடுத்துள்ளனர். நெட்பிளிக்சில் வெளியாகியுள்ள இந்த படம் பார்வையாளர்களின் மனதில் இனவெறி குறித்த புரட்சிகர கேள்விகளை எழும்பும்.

பாவால்

சலசலப்பு என பொருள்படும் இந்தி மொழி படத்தை அமேசான் பிரைமில் தமிழில் காணலாம். உத்தரபிரதேசத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருப்பவர் அஜய். சொல், செயல் ஆகியவற்றில் தன்னை முன்னிலைப்படுத்த தவறாதவர். வரலாற்றை கற்று தரும் இவர் அதிலும் அரைவேக்காடு. ஆணாதிக்கத்தை சகித்து கொள்பவரே தனக்கு வாழ்க்கை துணையாக வர வேண்டும் என நினைப்பவர். நோய் வாய்ப்பட்ட பெற்றோரோ மகனுக்கு விரைவில் மணமுடிக்க விரும்புகிறார்கள். அதன்படி கிராமத்தில் வளர்ந்த நிஷா வரன் வருகிறது. மன எண்ணங்களுக்கு ஒத்துபோகும் அவரை அஜய் திருமணம் செய்து கொள்கிறார். கதையின் திருப்பமாக நிஷாவிற்கு நோய் இருக்கிறது.

தன் இமேஜிற்கு மனைவியின் நிலை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனக்கூறி நிஷாவை அஜய் ஒதுக்குகிறார். ஒரு பிரச்சினையில் பள்ளியில் இருந்து அஜய் சஸ்பெண்டு செய்யப்பட பணிக்கு திரும்ப வரலாற்றை கரைத்து குடிக்க வேண்டும் என உத்தரவும் கொடுக்கப்படுகிறது. இதனால் 2-ம் உலகப்போர் நடந்த ஐரோப்பிய நகரங்களுக்கு செல்ல முனைகிறார். பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் மனைவியை அஜய் உடன் அழைத்து செல்கிறார்.

தன் குணாதிசயங்களினால் அன்னிய நாடுகளில் சிக்கி தவிக்கும் நாயகனை புத்திசாலி மனைவி காப்பாற்றுகிறார். இதனால் இவர்களுக்கு இடையேயான உறவு துளிர்க்கிறது. மனைவியின் அன்பையும், வரலாற்று பாடங்களை நாயகன் புரிந்துகொள்வதே இதன் கதை. அஜய் பாத்திரத்தில் வருண் தவான் வருகிறார். ஹிட்லரோடு இவரை ஒப்பிட்டு கதை நகர்கிறது. பிடிவாதக்கார கணவரை திருத்தும் துணைவியாக ஜான்வி கபூர் வாழ்ந்துள்ளார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இதனை 'தங்கல்' புகழ் நிதேஷ் திவாரி இயக்கியுள்ளார்.

மேலும் செய்திகள்