ஸ்கை டைவிங்கில்... சாதனை வானில் பறக்கும் 'சாகச வீரர்'..!
|உயரம் என்றாலே மலைப்பை உண்டாக்கும் மக்களுக்கு, ராஜ்குமார் பாலகிருஷ்ணனின் சாதனைகள் வியப்பாகவே இருக்கும்.
ஆம்...! இவர் தேர்ச்சி பெற்ற ஸ்கைடைவிங் வீரர். எஸ்.என்.டி.ஏ. எனப்படும் பாதுகாப்பு மற்றும் பயிற்சி ஆலோசகர் சான்றிதழும் பெற்று, கடந்த 17 ஆண்டுகளாக ஸ்கை டைவிங் செய்து பாராசூட்டில் பறந்து கொண்டிருக்கிறார்.
இதற்கும் மேலாக, 15 ஆயிரம் முறை ஸ்கை டைவிங் செய்து, பாராசூட்டில் தரை இறங்கி புதிய சாதனை படைத்திருக்கிறார். அண்ணாந்து பார்க்க வைக்கும் தன்னுடைய சாதனைகளை பற்றி, ராஜ்குமார் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
* உங்களை பற்றி கூறுங்கள்?
தேனி மாவட்டம் பெரியகுளம் என் சொந்த ஊர். எம்.காம் படித்திருக்கிறேன். இந்திய கடற்படையில் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, இப்போது ஸ்கை டைவிங் விளையாட்டில் ஆர்வம் காட்டுகிறேன். அதோடு இந்தியாவின் சார்பாக உலகப் போட்டிகளில் கலந்து கொள்வதோடு, ஸ்கை டைவிங் விளையாட்டை முறைப்படி கற்றுக்கொடுக்கிறேன்.
* 'ஸ்கை டைவிங்' விளையாட்டு உங்களுக்கு எப்படி அறிமுகமானது?
இந்திய கடற்படையில் பணியாற்றிய காலங்களில்தான், ஸ்கை டைவிங் கலையை கற்றுக்கொண்டேன். 'திரில்லிங்' ஆன விளையாட்டு அது. பல ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் இருந்து குதித்து, பாராசூட் உதவியுடன் பத்திரமாக இலக்குகளில் தரை இறங்க வேண்டும். இதுதான் ஸ்கை டைவிங். கடற்படைக்கு தேவையான பயிற்சி என்பதை தாண்டி, மிகவும் அட்வெஞ்சரான விளையாட்டாக தெரிந்தது. அதனால் ஸ்கை டைவிங் கலையை முழுமையாக கற்றுக்கொண்டு, இந்திய கடற்படை சார்பாக உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் கலந்து கொள்ள ஆரம்பித்தேன்.
* ஸ்கை டைவிங் விளையாட்டில் முழு மூச்சாக இறங்கியது எப்போது?
2006-ம் ஆண்டு, கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றபோது, எனக்கான பாதையை கட்டமைக்க வேண்டிய நிர்பந்தம் உருவானது. அந்த தருணத்தில்தான், எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்கை டைவிங் விளையாட்டை, எனக்கான எதிர்காலமாக மாற்றிக்கொண்டேன். அமெரிக்கா சென்று, ஸ்கை டைவிங் விளையாட்டின் அட்வான்ஸ்ட் பயிற்சிகளை பெற்றேன். அதேசமயம், ஸ்கை டைவிங் பாராசூட் சாகசத்தை இந்தியாவில் முறைப்படி பயிற்றுவிப்பதற்கான பயிற்சியாளர் உரிமத்தை பெற்று, இந்தியா திரும்பினேன். சூட்டோடு சூடாக, ஸ்கை டைவிங் கலையை பயிற்றுவிக்கும் பிரத்யேக பயிற்சி மையத்தை இந்தியாவில் முதல் முறையாக ஆரம்பித்தேன்.
* ஸ்கை டைவிங் பயிற்சி பெற்றபோதும், பயிற்சி அளித்தபோதும் எத்தகைய வித்தியாசத்தை உணர்ந்தீர்கள்?
முதல் முறையாக பயிற்சி பெறும்போதும், முதல் அனுபவமாக வானில் இருந்து குதிக்கும்போதும் பதற்றமான மனநிலையைதான் உணர்வோம். ஆனால் 4-5 முறை ஸ்கை டைவிங் செய்த பிறகு, முழுமையாக பயிற்சி பெற்ற பிறகு, அதுவே நம் வாழ்க்கையாக மாறிய பிறகுதான் உலகை வானிலிருந்து நிதானமாக ரசிக்க முடியும். அத்தகைய உணர்வை, ஸ்கை டைவிங் பயிற்சியாளராக மாறிய பிறகே உணர்ந்தேன்.
* இதுவரை எத்தனை முறை வானில் இருந்து குதித்திருப்பீர்கள்?
2006-ம் ஆண்டிலிருந்து இப்போது வரை ஸ்கை டைவிங் செய்கிறேன். 2010-ம் ஆண்டிலிருந்து பயிற்சியாளராக மாறி, டெல்லி, போபால், உஜ்ஜைனி, புதுச்சேரி, தாய்லாந்து, அமெரிக்கா போன்ற இடங்களில் ஸ்கை டைவிங் கலையை கற்றுக்கொடுக்கிறேன். இதற்கிடையில், இந்தியாவின் சார்பாக உலக ஸ்கை டைவிங் போட்டிகளிலும் கலந்து கொள்கிறேன். அந்தவகையில், ஸ்கை டைவிங் பயிற்சி மேற்கொள்வது, பிறகுக்கு பயிற்சி கொடுப்பது, டேண்டம் முறையில் மக்களை சுமந்து கொண்டு பாராசூட்டில் பறப்பது... இப்படி 15 ஆயிரம் முறை வானில் இருந்து பாராசூட்டில் பறந்து தரை இறங்கி இருக்கிறேன். இத்தகைய சாதனையை, ஆசியாவிலேயே முதல் நபராக, செய்து முடித்திருக்கிறேன்.
இதற்கு முன்னர் 13 ஆயிரம் முறை பாராசூட்டில் பறந்ததும் சாதனையாக பதிவானது. பாராட்டு-விருதுகளை பெற்று தந்தது. அதேபோல ஸ்கை டைவிங் சாகசத்தின்போது மொத்தம் 108 மணி நேரம் வானில் மிதந்த (பிரிபால்) சாதனையும் என்னிடமே இருக்கிறது. பிரிபால் என்பது, பாராசூட் இன்றி, வானில் மிதப்பது. அந்தவகையிலும், 108 மணிநேரங்கள், விண்ணில் மிதந்திருக்கிறேன்.
* உங்களை பெருமைப்படுத்திய விருது கவுரவம் எது?
இந்தியாவில் அதிகம் பிரபலமில்லாத விளையாட்டில் ஆர்வம் காட்டியதற்காகவும், அதை இந்தியாவில் பயிற்றுவிப்பதற்காகவும், அதில் பல சாதனைகளை படைத்ததற்காகவும் தமிழக அரசின் பரிந்துரைப்படி, இந்திய அரசு 2016-ம் ஆண்டின் டென்ஸிங் நார்கே விருதினை வழங்கியது. இது அர்ஜூனா விருதிற்கு நிகரானது. குறிப்பாக 10 ஆயிரம் முறை வானில் இருந்து ஸ்கை டைவிங் செய்ததற்காக வழங்கப்பட்டது. அதுவும், அன்றைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்கி, என்னுடைய ஆர்வத்தை ஊக்கப்படுத்தினார்.
தற்போது 15 ஆயிரம் முறை வானில் இருந்து ஸ்கை டைவிங் செய்து புதிய சாதனை படைத்திருப்பதை தொடர்ந்து, அதை முன்வைத்து பத்மஸ்ரீ விருதிற்கு விண்ணப்பிக்க இருக்கிறேன்.
* ஸ்கை டைவிங் பயிற்சியை தாண்டி, உங்களுடைய ஆவல் என்ன?
ஸ்கை டைவிங் விளையாட்டை பொருத்தமட்டில், அதற்கான பயிற்சி களம் வெளிநாடு என்ற மனநிலையே இருக்கிறது. அதை மாற்றி, இந்தியாவிலும் திறமையான பயிற்சி களத்தை உருவாக்குவதே, என்னுடைய ஆசை. அதேபோல, ஸ்கை டைவிங் விளையாட்டில், இந்தியர்களின் பங்களிப்பு பெரிதாக இல்லை. வருடந்தோறும் எங்களுடைய பயிற்சி குழுவினரே, இந்தியாவின் சார்பாக உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்கிறோம். இந்நிலையை மாற்றி, சாமானியர்களை திறமையான ஸ்கை டைவிங் வீரர்களாக உருவாக்குவதே, என்னுடைய லட்சியம். அதை நோக்கிதான் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
* போட்டிகளில் வெற்றி பெற்றது உண்டா?
நிறைய சர்வதேச போட்டிகளில், இந்தியாவின் சார்பாக பங்கேற்று, பரிசு வென்றிருக்கிறேன். இப்போதுகூட, அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு அருகே நடக்க இருக்கும் 'யூ.எஸ்.நேஷனல்ஸ் 2023' போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்து கொள்ள பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இதில் அக்யூரசி பிரிவிலும், ஃபோர் வே பிரிவிலும் பங்கேற்க இருக்கிறேன்.
* பல வருடங்களாக ஸ்கை டைவிங் பயிற்சியளிக்கிறீர்கள். பல ஆயிரம் முறை பாராசூட்டில் இருந்து குதித்திருக்கிறீர்கள். அதில் மறக்கமுடியாத அனுபவம் ஏதேனும் உண்டா?
பாதுகாப்பு விஷயங்களில் நாங்கள் எந்நாளும் சமரசம் செய்து கொண்டதே இல்லை. அதனால்தான், எப்பொழுதும் இரு பாராசூட்டுடன் குதிக்கிறோம். ஒன்று இயங்காவிட்டாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும். அதேபோல பயிற்சி நாட்களிலும், சாகச நேரங்களிலும் எல்லாவிதமான உயிர்காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரிவர மேற்கொண்டு விடுவோம். இப்படி இருந்தும், என்னை பதற்றமடைய செய்த அனுபவங்கள் உண்டு.
சமீப காலமாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வை இழந்தவர்களையும் ஸ்கை டைவிங்கிற்கு அழைத்து செல்கிறேன். இயல்பான மக்களை வானில் வழிநடத்துவதைவிட, மாற்றுத்திறனாளிகளை வழிநடத்துவதும், சமநிலையுடன் பாராசூட்டில் பறப்பதும் கடினம். நீண்ட கால அனுபவத்தை கொண்டுதான், அந்த சவால்களை சமாளிக்கிறேன்.