முகப் பொலிவை மெருகேற்றும் ஹைட்ரா பேஷியல்..!
|‘பேஷியல்’ என்று பேச தொடங்கினால், நிறைய வகைகளையும், நிறைய முறைகளையும் பேச வேண்டியிருக்கும். அந்தளவிற்கு, அழகு கலையில் புதுமையான பேஷியல் முறைகள் வந்துகொண்டே இருக்கிறது.
அப்படி ஒன்றாக, இப்போது டிரெண்டிங்கில் இருக்கிறது, ஹைட்ரா பேஷியல். இதுதான், இளம் வயதினரின் அபிமான பேஷியல் முறையாகி இருக்கிறது. காரணம், மற்ற பேஷியல் முறைகளை விட, முகப்பொலிவும், சரும ஆரோக்கியமும் இதில் அதிகம் என்பதால், இளம் வயதினர், அதிகமாக விரும்புகின்றனர்.
அது என்ன ஹைட்ரா பேஷியல், இதில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? போன்ற கேள்விகளுடன், அழகுக்கலை குறித்த பல தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் காயத்ரியிடம் கேட்டோம். சென்னையை சேர்ந்தவரான இவர், காஸ்மெட்டாலஜி படித்தவர். 15 ஆண்டுகளுக்கு மேலான தனது அனுபவத்தை, சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு வீடியோக்களாக பகிர்ந்து பிரபலமானவர். கூடவே, அழகுக்கலை சம்பந்தமான பல்வேறு பயிற்சிகளை மலேசியா, இலங்கை, இந்தியாவிலும் நடத்தி வருகிறார். இவர் ஹைட்ரா பேஷியல் பற்றிய முழு தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.
''ஹைட்ரா பேஷியல் என்பது சருமத்தை சுத்தப்படுத்தவும், நீரேற்றமாகவும் (ஹைட்ரேட்) வைத்துக்கொள்ள பயன்படும் நவீன பேஷியல் முறை. இதற்கு என பிரத்யேக கருவிகள் உண்டு. அந்த கருவிகள், சரும நுண் துளைகளை சுத்தம் செய்து, அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை அகற்றும் பணிகளை செய்யும். மேலும் சருமத்தை அழகுகூட்ட, பல்வேறு `சீரம்' வகைகளை பயன்படுத்துவதால், முகம் பொலிவாகிறது. இதுதான் அடிப்படை என்றாலும், டீன்-ஏஜ் வயதினரின் தேவைக்கு ஏற்ப, சீரம் வகைகளும், பூஸ்டர் வகைகளும் மாறுபடும்.
பொதுவாக மூன்று விதமான முறைகளில் இந்த பேஷியல் செய்யப்படுகிறது. அதில் ஒன்று சிக்னேச்சர். இது 30 நிமிடங்கள் செய்யக்கூடியது. அடுத்தது, டீலக்ஸ். இது 45 நிமிடங்கள் செய்யக்கூடியது. இறுதியாக, பிளாட்டினம் வகை பேஷியல் 1 மணிநேரம் செய்யக்கூடியது. இந்த மூன்று பேஷியலிலும், சீரம் எனப்படும் முகப்பொலிவு எண்ணெய்களும், பூஸ்டர் எண்ணெய்களுமே மாறுபடும். மேலும், எண்ணெய் சருமம், வறண்ட சருமம்... இப்படி சருமத்தின் தன்மைக்கு ஏற்பவும், சில நுணுக்கங்கள் மாறுபடும்'' என்றவர், இதன் நன்மைகளை பகிர்ந்து கொண்டார்.
''வயதான பிறகும், முகத்தை இளமையாக காட்டக்கூடிய சக்தி, இந்த பேஷியலுக்கு உண்டு. சரும வெடிப்புகளை நீக்கி, சருமத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும். முகப்பருக்கள், வடுக்கள் போன்றவற்றையும் போக்கக்கூடியது. மேலும் இதில் 5-6 படிநிலைகள், 9 படி நிலைகள், 10, 11 என நிறைய படி நிலைகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும், ஒவ்வொரு தேவையை பூர்த்தி செய்வதாகவும், சரும அழகை மெருகேற்றுவதாகவும் அமைந்திருக்கிறது. அந்தவகையில், வெயில் பாதிப்பினால் கருப்பாகும் சருமத்தை மீட்டெடுப்பது, பிக்மென்டேஷன் பாதிப்பை சீர்செய்வது, தீக்காயங்களை மறைய வைப்பது... போன்ற பல நன்மைகள் இருப்பதினால்தான், எல்லா வயதினரும் இதனை விரும்புகின்றனர்'' என்று ஹைட்ரா பேஷியலின் நன்மைகளை விளக்கியவர், பெண்களை விட ஆண்களே அதிகம் விரும்பி, இதை செய்து கொள்வதாக கூறினார்.
''கொஞ்ச நாட்களிலேயே இது பிரபலமாகி விட்டது என்பதால், நிறைய இடங்களில் இந்த பேஷியல் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம், முறையாக பயிற்சி பெற்றவர்களா...? என்பதை உறுதி செய்வது நல்லது. இது எளிமையான பிராசஸ்தான் என்றாலும், சருமத்தோடு சாலிஸ் லைக், கிளைகாளிக் போன்றவை பூசுவதால், முறையான கல்வியறிவு பெற்றவர்களிடம் பேஷியல் செய்வது நல்லது. சிலர் சுயமாகவே, வீட்டிலேயே செய்கிறார்கள். அதுவும் நல்லதுதான் என்றாலும், இதை அழகு நிலையங்களில் செய்துகொள்ளும்போது 100 சதவிகித முகப்பொலிவு கிடைக்கும். மேலும் சரும வல்லுநர்களின் ஆலோசனையும் கிடைக்கும்'' என்ற விழிப்புணர்வு தகவலுடன் விடைபெற்றார்.