கொளுத்தும் வெயிலால் நாட்டுக்கோழிகளுக்கு வரும் பாதிப்புகளை தடுப்பது எப்படி?
|கோடையின் கடும் வெப்பத்தால் நாட்டுக்கோழிகளில் இறப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனை தவிர்க்க நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபடும் பண்ணை தொழில்முனைவோர் சில நடவடிக்கைகளை மேற்கொண்டால் இழப்பை தவிர்க்கலாம்.
வெப்பத்தாக்கம்
பண்ணையில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் வெப்பத்தால் பாதிக்கப்படும்போது சில அறிகுறிகளை காணலாம். கோழிகளின் உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது அவை மூச்சுவிட இயலாமல் திணறும். அலகுகளை அடிக்கடி திறந்து மூடிக்கொண்டு இருக்கும். இயல்பான அளவைவிட கூடுதலாக தண்ணீர் குடிக்கும். தீவனம் எடுக்கும் அளவு குறையும். முட்டை இடும் கோழிகளில் முட்டை ஓட்டின் தரம் பாதிக்கப்படும். உடல் வளர்ச்சி குறையும். சில கோழிகள் திடீரென்று இறந்து போகும். வெப்பத்தை தாங்க இயலாமல் திணறும் கோழிகள் சரியாக நடக்க இயலாமல் தள்ளாடும். எச்சம் இளக்கமாக காணப்படும். ஆழ்கூள முறையில் வளர்க்கப்படும் கோழிகள் தனது உடல் வெப்பத்தை தணிக்க குளிர்ந்த காற்றுக்காக தரையில் படுத்து புரளும். காற்று வீசும் திசையை நோக்கி நடக்கும். இது போன்ற அறிகுறிகள் நாட்டுக்கோழிகள் வெப்பத்தால் தாக்கப்பட்டுள்ளதை காட்டும்.
கொட்டகை அமைப்பு
கோடை காலத்தில் அதிகமான வெப்பத்தை தவிர்க்க நாட்டுக்கோழிகள் வளர்க்கும் கொட்டகையானது நீளவாக்கில் கிழக்கு மேற்காக அமைக்க வேண்டும். இந்த திசைகளில் அமைப்பதால் நேரடியாக வெப்பம் பக்கவாட்டில் விழுவது தவிர்க்கப்படும்.
இரண்டு கொட்டகைகளுக்கு இடையே குறைந்தபட்சம் 20 முதல் 30 அடி இடைவெளி இருத்தல் அவசியம். இடைவெளி குறைவாக இருந்தால் காற்றோட்டம் பாதிக்கப்படும்.
கொட்டகையின் கூரை உச்சியில் காற்று வெளியே செல்ல வசதியாக காற்றோட்ட அமைப்பு இருக்க வேண்டும். பக்கச்சுவர்கள் 1.5 அடி உயரத்திற்கு அமைத்து அதற்கு மேல் 1×1 அங்குல அளவுள்ள கோழி வலைகளை அமைத்தல் அவசியம்.
கூரை ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் தகரம் போன்றவற்றால் அமைக்கப்பட்டு இருந்தால் அதன் மேல் வெப்பம் தாக்காதவாறு தென்னை மற்றும் பனை ஓலைகளை கொண்டு மூட வேண்டும். கூரையின் மையப்பகுதி உயரம் குறைந்தது 10 முதல் 12 அடி உயரத்தில் இருக்கும்படி அமைப்பது அவசியம். மேலும், கூரையின் விளிம்பு குறைந்தது 3 அடி அளவு வெளிப்புறத்தில் நீட்டி இருக்க வேண்டும்.
தண்ணீர் தெளித்தல்
கோடைகாலத்தில் கொட்டகை சுற்றுப்புறத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். அப்போது, கொட்டகையின் கூரை மற்றும் பக்கச்சுவரின் மீது தண்ணீரை தெளித்து விடலாம். இதனால், வெப்பத்தின் தாக்கம் வெகுவாக குறையும்.
கொட்டகையின் பக்கவாட்டில் 3 அடி தூரத்தில் கூரை விளிம்பில் இருந்து கோணிப்பைகளை அல்லது திரைச்சீலைகளை தொங்க விட்டு தண்ணீரால் நனைத்து விட வேண்டும். இதனால், பண்ணையில் குளிர்ச்சியான சூழல் ஏற்படும். சில நேரங்களில் வெப்பம் கடுமையாக அதிகரித்து காணப்பட்டால் கொட்டகையின் உள்புறத்தில் இருக்கும் வெப்பக்காற்றை மின்விசிறி அல்லது காற்றை வெளியேற்றும் விசிறி மூலமாக வெளியேற்றலாம்.
மரங்கள்
கோழிப்பண்ணையில் வெப்பத்தாக்கத்தை குறைக்க கொட்டகை அமைந்துள்ள இடத்தை சுற்றி நிழல் தரும் வேம்பு, முருங்கை, வாகை, புங்கை போன்ற மரங்களை நட்டு வளர்ப்பதால் பண்ணையில் வெப்பம் குறையும். பொதுவாக, கோடைகாலத்தில் கொட்டகையில் ஆழ்கூளத்தின் அளவை குறைக்க வேண்டும். கோழிகளை நெருக்கடியான இடத்தில் வளர்க்காமல் போதிய அளவு இடவசதியை ஏற்படுத்தி தர வேண்டும். இதன் மூலம் கோடை வெயிலின் தாக்கத்தால் கோழிகள் இறப்பதை தடுக்கலாம்.